PUBLISHED ON : ஆக 13, 2023

ஆக., 16 ஆடி அமாவாசை
அமாவாசையன்று நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மட்டுமல்ல, நம் உறவினர்கள் யாராக இருந்தாலும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதை மட்டும், நாம் அறிந்திருக்கிறோம். அமாவாசை பற்றிய சில வித்தியாசமான விஷயங்களையும் தெரிந்து கொள்வோம்...
கிராமங்களில், அமாவாசையை, 'இன்னைக்கு அம்மாசி' என்பர். அமாவாசி என்பதன் பேச்சுவழக்கத்தின் சுருக்கமே, அம்மாசி. அமா என்றால், ஒரே இடத்தில் கூடுதல். வாசி என்றால், உறவு கொள்ளுதல். ஒரே இடத்தில் கூடி உறவு கொள்ளும் நாளே, அமாவாசை.
அப்படி உறவு கொள்கிறவர்கள் யார் என்றால், சூரியனும், சந்திரனும் தான். இவர்கள் ஒன்று கூடி உறவாடும் நாளே, அமாவாசை. சரி... இதற்கும், மறைந்து விட்ட தாய், தந்தையை வழிபடுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஜோதிடத்தில், சூரியனை பிதுர்காரகன் என்பர். பிதுர் என்பது, தந்தையை குறிக்கும். சந்திரனை மாத்ருகாரகன் என்பர். மாத்ரு என்றால் தாய். தந்தை மற்றும் தாய்க்குரிய கிரகம் ஒன்றாகக் கூடி வரும் நாளில், இவர்களை நினைப்பது பொருத்தமாக இருக்கும். அதனால் தான், அமாவாசையை முன்னோர் வழிபாட்டு நாளாக கருதுகின்றனர்.
இது மட்டுமல்ல, இதில் மற்றொரு மறை பொருளும் இருக்கிறது. தாய், தந்தையை இழந்த குழந்தைகளை அனாதை என்கிறோம். எத்தனை வயதில், பெற்றோரை இழந்தாலும், அது வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத நாளாகத்தான் அமையும்.
'உங்களுக்கு பெற்றோர் இல்லாவிட்டால் என்ன, நீங்கள் அனாதைகளல்ல. எந்நாளும் நாங்கள் உங்களுக்கு பெற்றோராக இருக்கிறோம்...' என்று சூரியனும், சந்திரனும் இணைந்து இந்நாளில், நமக்கு ஆறுதல் அளிக்கின்றனர்.
பிதுர்லோகம் எனப்படும் முன்னோர் உலகத்தில் இருப்பவர்களுக்கு, நாம் கொடுக்கும் தர்ப்பண பொருளான எள்ளும், நீரையும் சூரிய பகவானே அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இன்னொரு விசேஷ தகவல். செவ்வாய்க்கிழமையன்று அமாவாசை வருமானால், அதை பவுமாதி அமாவாசை என்பர். பவுமன் என்றால் செவ்வாய் என, பொருள். செவ்வாயை பூமிகாரகன் என்பர்.
இந்நாளில், நிலம் வாங்குவது சம்பந்தப்பட்ட பேச்சை ஆரம்பித்தல், கடனை அடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலாம். இந்நாளில் கடன் தீர்க்கப்பட்டால், மீண்டும் கடன் தொல்லை வராது என்பர்.
இவ்வாண்டு ஆடி அமாவாசை ஆக., 15, செவ்வாய் மதியம், 1.55 மணிக்கே துவங்கி விடுகிறது. இதிலிருந்து மாலை சூரியன் மறையும் நேரமான மாலை, 6.32 மணிக்குள் மேற்கண்ட பணிகளைச் செய்யலாம். ஆக., 16 அன்று, தர்ப்பணம் செய்யலாம்.
அமாவாசையை சாதாரண நாளாகக் கருதாமல், முன்னோர் வழிபாட்டுக்கு உரிய நாளாக கொண்டாடி, மரியாதை செய்வோம்.
தி. செல்லப்பா
