PUBLISHED ON : ஆக 13, 2023

சுதந்திரம் என்பது
மனித உரிமையின் நிரந்தர மூச்சு
மனித உணர்வுகளின் அந்நியோன்ய பேச்சு!
சுதந்திரம் என்பது
நம் கடமையின் தாகம்
பல பேரின் உடைமை, உயிரின் தியாகம்!
சுதந்திரம் என்பது
ஜாதி மத இனத்தின் தகர்ப்பு முயற்சி
சரிவிகித மனிதநேயத்தின்
சமத்துவ கலப்பு பயிற்சி!
சுதந்திரம் என்பது
தனி மனித ஆளுமையின் உயிர்ப்பு
சமூகத் தடையின் சட்டப்பூர்வ உடைப்பு
புது உலகத்தின் நவீன படைப்பு!
சுதந்திரம் என்பது
அடிமைத்தனத்தின் அகோர வீழ்ச்சி
அதன்பின்தான் ஆரம்பமானது
அனைவரும் சமம் என்ற பேச்சு!
சுதந்திரம் என்பது
சமதர்மத்தின் சாயாத வாய்ப்பு
சரித்திர விரோதிகளின் சதிகளின் சாய்ப்பு!
சுதந்திரம் என்பது
அவரவர் ஆதிக்கத்தின் எல்லை
யாரும் இனி அடிபணிய தேவையில்லை!
சுதந்திரம் என்பது
எல்லாருக்கும் எல்லாமுமான சொத்து
அதை தரவே
பலரும் உயிர் துறந்தனர்!
சுதந்திரம் என்பது
தாய் நாடு நமக்கு தந்த உயிர்
அது பலரின் ரத்தத்தால்
விளைந்த பயிர்!
சுதந்திரத்தை கண் போல் காப்போம்
நீடூழி வாழ வாழ்த்துவோம்
அதைப் போற்றி... போற்றி!
— தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.
