PUBLISHED ON : ஆக 13, 2023

ஜவுளிக்கடைக்காரரின் புது முயற்சி!
எங்கள் ஊரில் உள்ள நடுத்தரமான ஜவுளிக் கடை ஒன்றிலிருந்து, 'வாட்ஸ் ஆப்' செய்தி ஒன்று வந்தது.
'எங்கள் கடையில் தேர்வு செய்யும் ஆடைகளை, வீட்டிற்கே கொண்டு சென்று அணிந்து பார்க்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் ஆடைகளை, கடை ஊழியர் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருவர்...' என, இருந்தது.
அதை கண்டு வியந்து போன நான், கடை முதலாளியை சந்தித்து, அது குறித்து விசாரித்தேன்.
அதற்கு, 'டிரையல் அறையில் ரகசிய கேமரா வைத்திருப்பரோ என்ற பயம், பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. பத்திரிகைகளில் இது போன்ற செய்திகள் உலா வருவதை பார்க்கையில், நம் கடை ஊழியர்களை கூட நம்ப முடியாமல் இருக்கிறது.
'மேலும், இப்போது, 'சைனா மேக்'கில் மிக குறைந்த விலைகளில், 'ஸ்பை' கேமராக்கள் கிடைக்கின்றன. இவைகளை ரகசியமாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. 'எனவே, இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தோம். விளம்பரம் செய்த உடனேயே நிறைய கல்லுாரி பெண்கள் ஆடை எடுக்க வந்து விட்டனர்.
'அப்படி ஆடை எடுத்து செல்பவர்கள், வீட்டில் பாதுகாப்பாக அணிந்து பார்த்து தேர்வு செய்ய முடிகிறது. வீட்டில் இருப்பவர்களிடம் கருத்து கேட்க முடிகிறது. 'இதனால், கடையில் வியாபாரம் அதிகரித்து இருப்பதோடு, புதிதாய் இரண்டு ஊழியர்களை பணியில் சேர்த்து இருக்கிறேன்...' என்றார்.
அவரது வித்தியாசமான முயற்சியை பாராட்டி வந்தேன். இந்த நல்லதொரு பாதுகாப்பு ஐடியாவை, மற்றவர்களும் பின்பற்றி, வியாபாரத்தை பெருக்கலாமே!
பி.என்.பத்மநாபன், கோயம்புத்துார்.
நடமாடும் ஹோட்டல்!
ஆம்னி வேனில் டிபன் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, வேன் நிற்குமிடம் சென்றேன். அந்த வேனிலிருந்த பெயர் பலகையில், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பூரி என, பெயர் எழுதப்பட்டிருந்தது; விலையும் மிக குறைவாக இருந்தது.
வியாபாரம் செய்த நபரை அணுகி, 'இதென்ன புது வகை வியாபாரம்?' என்று கேட்டேன். 'ஆரம்பத்தில், கை வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தேன். வியாபாரம் சொல்லும்படி இல்லை. மாற்று யோசனையாக, ஆம்னி வேனில், தெருத் தெருவாக உணவு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.
'கடை வியாபாரத்தை காட்டிலும், வேன் வியாபாரம் களை கட்டுகிறது. அவரவர் இருப்பிடத்துக்கே டிபன் வகைகள் தேடி வருவதால், வயதானவர்கள், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், பள்ளி குழந்தைகள் என, அனைவருக்கும், இது பெரும் உதவியாக இருக்கிறது.
'பள்ளி குழந்தைகளுக்கு, டிபன் பாக்சில் உணவு வாங்கிச் செல்கின்றனர், தாய்மார்கள். மற்றவர்களும், பாத்திரங்களை எடுத்து வந்து உணவு வாங்குவதால், பார்சல் கட்டும் வேலை இல்லை. இதனால், மளமளவென வியாபாரம் நடக்கிறது.
'இந்த வித்தியாசமான முயற்சியை, தெருவாசிகள் அனைவரும் பாராட்டுகின்றனர். மேலும், புதிய ஆம்னி வேன் வாங்கும் முயற்சியில் இருக்கிறேன். இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்பும் தர இருக்கிறேன்...' என்றார்.
அவரின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினேன். எதையும் சற்று வித்தியாசமாக யோசித்தால், வாழ்வாதாரம் உயர்வதோடு, வாடிக்கையாளருக்கும் பயனளிக்கும். அதோடு, இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.
எம்.மொவன்குட்டி, கோவை.
காகம், குருவிகளுக்கு வீடு தந்த வள்ளல்!
போஸ்ட்மேனாக பணிபுரியும் நான், பெரியவர் ஒருவரின் வீட்டில், லெட்டரை டெலிவரி செய்து கிளம்பினேன். வீட்டின் வெளியே உள்ள கிரில் கேட்டில் தென்னந் துடைப்பத்தை கட்டியபடி இருந்தார், பெரியவர்.
'ஏன் சார், இப்படி துடைப்பத்தை கட்டி தொங்க விடுறீங்க. ஏதாவது திருஷ்டி பரிகாரமா?' என்றேன்.
'எல்லாம் வீடு கட்டத்தான்...' என்றார்.
'என்ன சார், வீடு கட்டவா... ஒண்ணும் புரியலையே...' என்றேன்.
வீட்டினுள் அழைத்துச் சென்று, ஹாலில் நிற்க வைத்து, 'கட்டி தொங்க விட்டிருந்த தென்னந் துடைப்பத்தை பாருங்க...' என்றார்.
ஓரிரு நிமிடங்களில், ஒரு காகம் வந்து தன் அலகால், துடைப்பக் குச்சியை கொத்தி எடுத்துச் சென்றது. அவர் வீட்டு எதிர்புறம் உள்ள மரத்தில் கூடு கட்டி வருவதை, வெளியே வந்து காட்டினார்.
அப்போதுதான் அவர் சொன்னது எனக்கு புரிந்தது.
'காகம், குருவிகள் வந்து, தென்னந் துடைப்பத்திலிருந்து குச்சியை கொத்தி உருவி எடுத்துக்கிட்டு போகும். அந்த ஜீவன்களுக்கு, நம்மால் முடிந்த உதவி.
'நாம் வீடு கட்ட, வங்கியில் கடன் வாங்கணும். ஆனால், காகம், குருவிகளுக்கு யார் கடன் தருவர். நாம் தானே தரவேண்டும்...' என்று தத்துவார்த்தமாக கூறி, என்னை சிலிர்க்க வைத்தார்.
அவரை கையெடுத்து வணங்கி, மனதார பாராட்டினேன்.
கோ. குப்புசுவாமி, சென்னை.
