தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (15)

நான் வந்த பாதை! (15)

நான் வந்த பாதை! (15)


PUBLISHED ON : ஆக 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

சிவாஜி கணேசனின் அம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்னை பார்க்க அவர் விரும்புவதாகவும், சிவாஜியிடமிருந்து ஒருநாள் எனக்கு போன் வந்தது. உடனே புறப்பட்டு போய் பார்த்து, பேசினேன். அதன்பின் மீண்டும், எங்கள் உறவு தொடர்ந்தது.

நானும், சிவாஜியும், பராசக்தி படத்திலிருந்து, ரங்கோன் ராதா படம் வரையில், படப்பிடிப்பிற்கு சென்றால், பட அதிபர்கள், ஹோட்டலில் வாங்கி தரும் பகல் உணவையே மற்றவர்கள் மாதிரியே சாப்பிட்டு வந்தோம்.

பிறகு, வீட்டு சாப்பாடு சாப்பிட விரும்பி, நாங்கள் இருவரும் கடைக்கு போய், ஒரே அளவுள்ள இரண்டு டிபன் கேரியர்கள் வாங்கினோம். ஒவ்வொரு கேரியர் தட்டிலும், சிவாஜி மற்றும் எஸ்.எஸ்.ஆர்., என்றும் பெயர் பொறித்து கொடுத்தனர். அப்போது, சிவாஜிக்கு திருமணம் ஆகவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், அங்கு எங்களுக்கு உணவு பரிமாறி, பாத்திரத்தை கழுவி வைப்போர், பெயர்களை கவனிக்காமல், இரண்டு சாப்பாடு கேரியர்களும் ஒரே அளவுடன் இருப்பதால், தட்டுகளை மாற்றி அடுக்கி விடுவர்.

இதை பார்த்து, அங்குள்ள வேலையாட்களிடம், 'தட்டுகள் மாறியது அப்படியே இருக்கட்டும். அப்போது தான், எஸ்.எஸ்.ஆர்., இல்லாமல் நான் மட்டும் நடிக்கும் படங்களின் இடைவேளையில், அவர் நினைவு எனக்கு வரும்.

'அதே மாதிரி, நான் இல்லாமல் எஸ்.எஸ்.ஆர்., மட்டும் நடிக்கும் படங்களின் இடைவேளையில் சாப்பிடும்போது, என் நினைவு அவருக்கு வந்துவிடும். ஆகவே, அது அப்படியே இருக்கட்டும்...' என்றாராம், சிவாஜி.

பிறகு, காலப்போக்கில் பெரிய கேரியர் தேவைப்பட்டது. ஏனெனில், எங்கள் ஒப்பனையாளர், கூட நடிக்கும் முக்கிய நடிகர், நடிகையர்களும் எங்களுடன் சேர்ந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இப்படியே ஓடின காலங்கள்.

சிவகங்கை சீமை வீரச் சரித்திரத்தை தனக்கே உரிதாக்கிக் கொண்ட மறவர் நாடு. தென்பாண்டி மண்டலத்தில், மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை மாவட்டங்களிடையே, தலை நிமிர்ந்து நின்ற சீமை இது. 18ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், ராமநாதபுரத்தை ஆண்டார், விஜயசேதுபதி. அந்த மாவீரனின் மகள், அகிலாண்டேஸ்வரி நாச்சியார்.

ராமநாதபுரம் சீமையை ஐந்து பாகங்களாக பிரித்து, இரண்டு பங்கை சிவகங்கை சீமையாக்கி மகனுக்கு அளித்தார். விஜயசேதுபதியர் மகன் முத்து வடுகத்தேவர் பதவிக்கு வந்தார். அவரது பத்தினி, வேலு நாச்சியார்.

ஆதிக்க வெறி பிடித்த ஆற்காடு நவாப்பால், காளையார் கோவிலில் கொல்லப்பட்டார், முத்துவடுகத் தேவர். தானே தளபதிகள் மருது பாண்டியரோடு, கும்பினி - நவாப் கூட்டுப் படையை எதிர்த்து போரிட்டார், ராணி வேலுநாச்சி.

வட மாநிலத்தில், ஜான்சி ராணி போராடுவதற்கு, சுமார், 85 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் வீரம் விளைவித்தாள், வேலுநாச்சி அம்மையார். எனினும், ஆயுதங்கள் போதாமையால் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சிவகங்கையை கைப்பற்றினார்.

மருதுபாண்டியர்களை அரசர்களாக்கிவிட்டு, ராணி வேலுநாச்சியார் மறைந்தார். அந்த வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக தயாரிக்க முன் வந்தார், கவிஞர் கண்ணதாசன்.

என்னை, அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைத்தபோது, பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். ஏனெனில், அந்த வரலாற்றில் எங்கள் மூதாதையரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.

நிறைய படப்பிடிப்புகளுக்கு இடையேயும், எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றத்தின் நாடகங்களையும் அவ்வப்போது நடத்திக் கொண்டிருந்தேன்.

ஒருசமயம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடைபெற்ற பொருட்காட்சியில் எங்கள் நாடகங்கள் நடந்தன. அடுத்து, நாகர்கோவிலில் ஒரு நாடகமும் நடத்த ஏற்பாடாகி இருந்தது.

நாகர்கோவிலில் நாடகம் முடிந்தவுடன், சென்னையில் எனக்கு படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால், திருவனந்தபுரத்துக்கு காரில் போய், அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து சேர திட்டம்.

நான் விமான நிலையத்துக்குள் நுழையும் போது, அங்கே, டாக்டர் லட்சுமண முதலியார் அமர்ந்திருந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி, அருகில் அமர்ந்தேன்.

'இங்கே, டாக்டர்கள் மாநாட்டுக்கு தலைமை வகிக்க வந்தேன். உன்னை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. விமானத்தில் போகும்போது பேசிக் கொண்டே போகலாம்...' என்றார்.

மிகப்பிரபல வழக்கறிஞர், சர்.ஏ.ராமசாமி முதலியார். மிகச்சிறந்த டாக்டர் சர்.ஏ.லட்சுமணசாமி முதலியார். இரட்டை பிறவிகளான, இவர்கள் இருவரும் மேதைகள். இருவரும் ஏறத்தாழ ஒரே உயரம். ஒரே சாயல். மீசையும் அப்படியே. சினிமாவில் ஒருவரே இரட்டை வேடம் அணிந்து வருவதை போல அவ்வளவு உருவ ஒற்றுமை.

வக்கீலை காண வருவோர், டாக்டரிடம் பேசிக் கொண்டிருப்பராம். டாக்டரை காண வருவோர், வக்கீலிடம் உடல்நிலையை பற்றி விபரமாக சொல்வராம். இவையெல்லாம், அவர்களை பற்றி நான் அறிந்து வைத்திருந்த விபரங்கள்.

விமானத்தில் அவர் அருகில் அமர்ந்து வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மருது பாண்டியர் வரலாற்றை விரிவாக அவர் பேசியது, சிவகங்கை சீமை படத்தில் நடிப்பதற்கு எனக்கு உதவியாக இருந்தது.

நானும், சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த அனைத்தும், வெற்றிப் படங்களே. தெய்வப் பிறவி படத்தில், சிவாஜிகணேசன், நான், பத்மினி ஆகியோர் நடித்தோம். அது, தமிழகத்தில், 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

தமிழில் பெரிய வெற்றி பெற்ற, தெய்வப் பிறவி படத்தை ஹிந்தியில் எடுக்கத் துவங்கினார், நண்பர் ஏவி.எம்.சரவணன்.

அப்போது, சிவாஜி கணேசன் ஒரு கருத்தை கூறினார். அது என்ன...

- தொடரும்

- எஸ்.எஸ். ராஜேந்திரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us