தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என்றும் பன்னிரண்டு!

என்றும் பன்னிரண்டு!

என்றும் பன்னிரண்டு!


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுமையிலும் இளமையாகத் தோற்றமளிப்பவர்களைப் பார்த்தால், இவர், கலியுக மார்க்கண்டேயர் என்பர்.

மார்க்கண்டேயன் என்ற சிறுவனுக்கு, 16 வயதில் இறப்பு என்று விதிக்கப்பட்டிருந்த வேளையில், சிவனருளால் அவன் தப்பினான். அத்துடன், என்றும் பதினாறு வயதுடையவனாக இருக்கும் வரம் பெற்றான்.

அவனையும் முந்தி, ஒரு சிறுவன், 12 வயதுடையவனாய் இருக்கும் மகிமை பெற்றான். இவன் தான், சித்ரகுப்தன். எமதர்ம ராஜாவின் உதவியாளரான இவன், சிவனருள் பெற்ற தலம், கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, ஆதிமூலேஸ்வரர் கோவில்.

சித்ரகுப்தரின் பிறப்பு பற்றி பல கதைகள் உண்டு. ஒருசமயம், அவர் மனிதனாக பூமியில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் வசுதத்தன். தன் மகனுக்கு, 12 வயதே ஆயுள் என்பதை, அவன் பிறந்ததுமே தெரிந்து கொண்டார்.

இந்த விஷயம் எப்படியோ சித்ரகுப்தனுக்கும் தெரிந்து விட்டது. இறப்பு பற்றிய பயத்தில் உறைந்து போனான். அவனைத் தேற்றிய வசுதத்தன், 'சித்ரகுப்தா, நீ நம் ஊரில் இருக்கும் ஆதிமூலேஸ்வர பெருமானைத் தரிசித்து வா. அவரைச் சரணடைந்தால், நீ மரணத்திலிருந்து தப்பலாம்.

'அவரது வரலாற்றைத் தெரிந்து கொள். ஒருமுறை, உலக நன்மை கருதி, காஷ்யப முனிவர், யாகம் செய்த போது, மழை பொழிவித்து, யாக குண்ட நெருப்பை அணைத்தான், வருணன். முனிவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

'யாகத்தைத் தடுத்து நிறுத்திய வருணனை, 'நீ எங்கும் பொழியாமல் போக...' என சபித்து விட்டார். உலகமே பஞ்சத்தில் ஆழ்ந்தது. வருணன் இத்தலத்து சிவனைச் சரணடைந்து, சாப விமோசனம் பெற்றான்.

'உலக நன்மைக்காக பாடுபடுவர்களை இத்தலத்து ஆதிமூலேஸ்வரர் கை விட மாட்டார். அது மட்டுமல்ல, அவரது தேவி அமிர்தவல்லி, கருணை உள்ளம் மிக்கவள். அவள் உன் மீது கரிசனம் கொண்டு காப்பாற்றுவாள்...' என்றார்.

சித்ரகுப்தனும், இருவரையும் வணங்கி உயிர்ப்பிச்சை கேட்டான். ஆனாலும், எமதர்மன் அவரது கடமையைச் செய்ய வந்து விட்டார். உடனே, அம்பாளை அனுப்பி, எமனைத் தடுத்து நிறுத்த உத்தரவிட்டார், ஆதிமூலேஸ்வரர்.

அம்பாளும் எமனைத் திருப்பி அனுப்பி, சித்ரகுப்தனை, என்றும் 12 வயதுள்ளவனாக இருக்க அருள்பாலித்தாள்.

இந்தக் கோவிலில், திருநள்ளாறைப் போல சனீஸ்வரர் கிழக்கு நோக்கி இருப்பது மற்றொரு விசேஷம். இங்கு சுண்ணாம்பு களஞ்சியம் என்ற பழங்கால பாத்திரம் உள்ளது. இதில் சுண்ணாம்பு கலக்கி தான், கோவிலுக்கு வெள்ளை அடிப்பர்.

இமயமலை அவதார புருஷர், பாபாஜி இவ்வூரில் பிறந்தவர். காஞ்சிப் பெரியவரின் தந்தை இத்தலத்தில் ஆசிரியப்பணி செய்தவர். மொத்தத்தில், பல விசேஷங்களைக் கொண்ட புண்ணியத்தலம் இது.

இளவயதில் நோயின் பிடியில் சிக்கியுள்ள குழந்தைகளின் ஆயுள் விருத்திக்காகவும், முதுமையில் நிம்மதியாக வாழவும், இங்கு சென்று வரலாம்.

சிதம்பரத்திலிருந்து, 22 கி.மீ., துாரத்தில் பரங்கிப்பேட்டை உள்ளது. சேவாமந்திர் பேருந்து நிறுத்தம் அருகில், கோவில் இருக்கிறது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us