PUBLISHED ON : ஜூலை 09, 2023

நிலைத்த சாதனைகள் என்று
இங்கு எதுவுமில்லை...
ஒருவரின் எல்லா சாதனைகளுமே
பின் வருபவரால் முறியடிக்கப்படும்
சாத்தியம் உள்ளவை தான்!
ஈடில்லா பிரமாண்டம் என்று
இங்கு ஒன்றுமில்லை...
வியப்பான எல்லா பிரமாண்டமுமே
மற்றொன்றால் தாழ்வாக்கப்படும்
வாய்ப்பு உள்ளவை தான்!
நிரந்தர வெற்றிகள் என்று
இங்கு எதுவுமில்லை...
இன்றைய எல்லா வெற்றிகளுமே
நாளைய நபரால் பறிக்கப்படும்
உறுதிப்பாடு உள்ளவை தான்!
அழிவில்லா அதிகாரம் என்று
இங்கு ஒன்றுமில்லை...
இப்போதைய எல்லா அதிகாரமுமே
இன்னொருவரால் விரட்டப்படும்
சூழ்நிலை உள்ளவை தான்!
நிலைத்த திறமை என்று
இங்கு எதுவுமில்லை...
ஒருவரின் எல்லா திறமையுமே
புதியவரால் முறியடிக்கப்படும்
சாத்தியம் உள்ளவை தான்!
எல்லையில்லா ஆஸ்தி என்று
இங்கு ஒன்றுமில்லை...
பிரமிப்பான எல்லா ஆஸ்தியுமே
மற்றொருவரால் கைப்பற்றப்படும்
வாய்ப்பு உள்ளவை தான்!
விலகாத உறவுகள் என்று
இங்கு எதுவுமில்லை...
ஒருவரின் எல்லா உறவுகளுமே
மரணத்தால் பிரிக்கப்படும்
உறுதிப்பாடு உள்ளவை தான்!
அகலாத துன்பங்கள் என்று
இங்கு ஒன்றுமில்லை...
வருத்தும் எல்லா துன்பங்களுமே
காலத்தால் களையப்படும்
சூழ்நிலை உள்ளவை தான்!
— சி. அருள்மொழி, கோவை.
