தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆடம்பர வீடியோ அவசியமா?

சமீப காலமாக, திருமணம், சஷ்டியப்தபூர்த்தி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா வீடியோக்கள், அதிகளவில், 'யு டியூபில்' வலம் வரத் துவங்கியுள்ளன.

இரண்டு, மூன்று மணி நேர வீடியோக்கள், சினிமாவையும் மிஞ்சி விட்டன. பணத்தை தண்ணீராக செலவிட்டு எடுக்கப்படும் வீடியோக்கள், சம்பந்தப்பட்ட சொந்த பந்தங்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருந்தால், பரவாயில்லை. பொது வலைதளமான, 'யு டியூபில்' உலா வரும் அவலத்தை என்னவென்று சொல்வது.

வக்கிர புத்தி கொண்ட இளைஞர் பட்டாளம், இத்தகைய வீடியோவை பார்த்து, அதில் வரும் பெண்களை வர்ணிக்கும் கேவலமான,

'கமென்டு'களை கேட்க நேர்ந்தது.

சம்பந்தமே இல்லாத இவர்கள், வீடியோவில் வரும் இளம்பெண்களுக்கு மார்க் போடுவது மற்றும் வயதானவர்களை கேலி செய்வதையே, பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.

நேரம், நேர்மறை சிந்தனைகள் அழிந்து போக காரணமான, இதுபோன்ற வீடியோக்களை போடுவதால், சமூக ஒழுக்கம் தடம் மாறும் அபாயம் உள்ளது.

சம்பந்தப்பட்டோர் சிந்திப்பது நல்லது.

- பி.என். நரசிம்மமூர்த்தி, சென்னை.

திருநங்கையரின் அவசியமான சேவை!

சென்னையில் வசித்து வந்த நாங்கள், பணி மாறுதலால், சென்னையிலிருந்து வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றி, அதிகாலையில் கோவை வந்து சேர்ந்தோம்.

காலை, 9:00 மணி அளவில், வீட்டுப் பொருட்களை இறக்க ஆட்களை தேடினோம்.

அப்போது, பக்கத்து வீட்டு பெண் ஒருவர், 'காம்ப்ளக்ஸ்' ஒன்றின் பெயரை கூறி, அதன் மாடியில், பொருட்களை ஏற்றி இறக்குவது, முதியோருக்கு உதவி செய்வது, வீட்டு விசேஷங்களுக்கு உதவுவது போன்ற சேவைகளை, திருநங்கையர் செய்து வருவதாகவும், அவர்களை அணுகும்படி கூறினார்.

'கூலி எவ்வளவு கேட்பாங்க...' என்றேன்.

'ஆண்கள் வாங்கும் கூலியை விட, பாதி பணம் தான் கேட்பர். இப்பகுதியில் உள்ளோர், தங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், அவர்களை தான் அழைப்பர். ஆறு திருநங்கையர் உள்ளனர்...' என்றார்.

அங்கு சென்று விபரம் கூறினோம். நான்கு திருநங்கையர் வந்து, ஒரு மணி நேரத்தில் அனைத்து பொருட்களையும் சேதாரமின்றி இறக்கி வைத்தனர். அத்துடன், பால்காரர், சிலிண்டர்காரர், லைன்மேன், தபால்காரர், தெரு குழாயில் தண்ணீர் விடுபவர், பூக்காரர், ஆட்டோக்காரர் ஆகியோரது போன் நம்பர் நோட்டீஸ் ஒன்றை தந்தனர்.

'நீங்க, இந்த ஊருக்கு புதிதாய் வந்திருக்கீங்க. இவர்களை தேடி நீங்க அலைய வேண்டியதில்லை. இதில் உள்ள நம்பருக்கு போன் செய்து, வீட்டின் முகவரியை கூறினால், அந்தந்த உதவிகளை செய்து, நியாயமான கூலியை பெற்றுக் கொள்வர்...' என்றனர்.

அவர்களின் சமூக சேவையை பாராட்டி, கேட்ட தொகையுடன், கூடுதலாக பணம் தந்தோம்; வாங்க மறுத்தனர்.

வித்தியாசமான முயற்சியும், சிந்தனையும் இருந்தால், சமுதாயத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை, அந்த திருநங்கையர் நிரூபித்துள்ளனர்.

ம. காவியா, கோவை.

தையல்காரரின் சேவை!

சமீபத்தில், துணி தைக்க வேண்டியிருந்ததால், தையல் கடைக்கு என்னையும் அழைத்துச் சென்றாள், என் சகோதரி.

அந்த கடையில், 'ஆடை தான பெட்டி' என, ஒரு அட்டை பெட்டியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

அதுபற்றி தையல்காரரிடம் விசாரித்தேன்.

'அளவு சரியில்லாமல், அணியாமலேயே வீட்டில் வீணாக, நல்ல நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களின் ஆடைகளை, தானமாக வாங்கி, அதில் ஏதாவது குறையிருந்தால், சரி செய்து, அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்குகிறேன்.

'வாடிக்கையாளர் மட்டுமின்றி, அவர்களின் நண்பர்களும் ஆடை தானம் செய்து உதவுகின்றனர்...' என்றார்.

அவரை நெகிழ்ச்சியோடு பாராட்டி, வாழ்த்தினேன்.

— மு.நாவம்மா, விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us