PUBLISHED ON : ஜன 09, 2011

*ஆர்.உமாபதி, திருப்பூர்: நீண்ட நாள் வேலை இல்லாமல் இருந்த எனக்கு, பொறுப்பான வேலை வாங்கி தந்து, பெண்ணையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர் பெண் வீட்டில். இதனால், என் தன்மானம் இழக்கப்படுமா?
வாய்ப்புகள் தினமும் உங்கள் வீடு தேடி வந்து கதவைத் தட்டாது. இதுவரை வேலையில்லாமல் பட்ட அவதியையும், தன்மான இழப்பையும் எண்ணிப் பாருங்கள். மனதில் வேறு கேள்வியே எழாது.
** எஸ்.வேலாயுதம், விருத்தாசலம்: அரசின் பொறுப்பான பணியில் உள்ளவன் நான். சக அலுவலர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, மற்றவர்களது நியாயமற்ற வருத்தத்தை எதிர்நோக்கினேன். எல்லாருக்கும் உதவும் எண்ணம் உள்ளவர்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிக் கொள்ளலாமா?
எல்லாரும் இப்படி ஒதுங்கினால், கொஞ்சம் பெய்யும் மழையும் நின்று விடும். உங்கள் மனதில் நியாயம் என்று படும் செயல்களை, உதவிகளை தவறாது செய்யுங்கள்; புறம் பேசுபவர்களை புன்சிரிப்போடு ஒதுக்குங்கள்!
*கே.ஜூகல்ராஜ், ஊட்டி: டாக்டர்களின் மருந்து மாத்திரைகளின், பெயர்களின் பொருள் வெளியாவதில்லையே... ஏன்?
உங்க பேரு வள்ளி, உங்க அக்கா பேரு சரஸ்வதி, உங்க வீட்டு ஆடு பேரு ஜோதிலட்சுமி, கோழி பேரு சாந்தி... உங்க ஊரு பேரு மணப்பாறை... இந்தப் பேருக்கெல்லாம் அகராதியில் அர்த்தம் தேடுனா கிடைக்குமா? ஆங்கிலத்தில் இதை, 'ப்ராப்பர் நவுன்' என்பர். அதாவது, ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர் என்பது பொருள். மருந்து பொருட்களுக்கென தனி அகராதி உள்ளது. அதிலும், 'ப்ராபர் நவுனு'க்கு அர்த்தம் இருக்காது. ஆனால், மருந்துகளில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்களின் பெயர்களுக்கு விளக்கம் இருக்கும்.
** ச.அருள்மொழி, மணவாளநல்லூர்: ஆண்களுக்கு அமைதியான பெண்களைத்தான் பிடிக்கும் என்று என் சகோதரி கூறுகிறாள். ஆனால், நானோ, நகைச்சுவை உணர்வோடு, நன்றாக பேசும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும் என்கிறேன். எது சரி என்று நீங்கள் கூறவும்!
உங்கள் எண்ணம் முற்றிலும் சரியே - அந்தப் பெண், ஆணுக்கு தோழியாகவோ, காதலியாகவோ இருக்கும் வரை! மூன்று முடிச்சைப் போட்டபின், உங்கள் தங்கையின் கருத்தைத்தான் எதிர்பார்ப்பர்.
*ஏ.தெய்வானை, கோவை: மதியம் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் பழக்கம் உமக்கு உண்டா? மதிய தூக்கம் போடுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மதிய தூக்கம் நல்லதுதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்; அந்த குட்டித் தூக்கத்திற்கு பிறகு வேலை செய்யக் கிடைக்கும் உற்சாகம் அபாரம் என்கின்றனர். எனக்கு அந்த உற்சாகத்தை அனுபவிக்க வாய்ப்பே கிடையாது!
** சி.ராஜகோபாலன், உடுமலைப்பேட்டை: நான் ஒரு அரசு ஊழியன், என் துறையில், லஞ்சம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் சகட்டு மேனிக்கு லஞ்சம் வாங்குகின்றனர். ஒரு காசு கூட லஞ்சமாக நான் பெறுவது இல்லை. இதனால், அலுவலகத்தில் எனக்கு, 'இளிச்சவாயன்' என்ற பெயர். எனக்கு, உங்கள் அறிவுரை என்ன?
அரசு துறை மட்டுமல்லாமல், தனியார் துறையிலும் லஞ்சம் பெருத்து விட்டது. பணம் கொடுத்தால், இழுத்தடிக்காமல் வேலைகள் சுலபமாக முடியும் நிலை உருவாகி விட்டது. எல்லாருமே லஞ்சத்தை ஒரு, 'அக்சப்டட் நார்ம்' ஆக கருத ஆரம்பித்து விட்டனர். 'லஞ்சம்' என்ற பெயர், 'உழைப்புக்கு கூலி' என்று அழைக்கப்படும் காலம் விரைவில் வரலாம். சரி... போகட்டும்! நீங்கள் லஞ்சம் வாங்காத, உண்மை அரசு ஊழியராக இருக்கிறீர்கள்; மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! என்னுடைய அறிவுரையைக் கேட்கிறீர்கள்... மனசாட்சியுடன் பேசும் திறன் எல்லாருக்கும் உண்டு; அது, நாளை உங்களை ஏளனமாக, குற்றவாளியாக இடித்துரைக்கும். தாங்கிக் கொள்ள முடியுமா உங்களால்? ***
