தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக...பகுதி-06 - ( தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் )

உயிரே உனக்காக...பகுதி-06 - ( தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் )

உயிரே உனக்காக...பகுதி-06 - ( தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் )


PUBLISHED ON : ஜன 09, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை:

மதுரிமாவின் அம்மா, சாண்டியாகோ நகரில் நடத்தி வரும் நடனப் பள்ளியில், நரேனுக்கும், மதுரிமாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக, அவர்கள் இருவரும் சென்றிருந்தபோது, நரேனின்

அலுவலக சி.இ.ஓ., வைத்தீஸ்வரன், நரேனுக்கு போன் செய்து, உடனடியாக பேச வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை தட்ட முடியாமல், அவரை சந்திக்கச் சென்றான் நரேன் —

அந்தப் புத்தகத்தை பார்த்ததும், மதுரிமாவின் கண்கள் விரிந்தன.

கனமான புத்தகம். இந்திய நடன வகைகள் பற்றிய ஆராய்ச்சி நூல். நுனிப்புல் மேய்பவர்கள் இந்த நூலைத் தொடக் கூட மாட்டார்கள். நடன வகைகளைத் தெரிந்து கொள்வதில், நரேனுக்கு அப்படி என்ன ஆர்வம். அதுவும், கதக் நடனம் பற்றிய கட்டுரைகளை படித்து, சில பகுதிகளில் பேனாவால் அடிக்கோடு வேறு போட்டிருந்தான்.

கதக் நடனமணிகளின் உடற்கூறு பற்றிய ஆராய்ச்சியில், நடனமணியின் கால்கள், கைகள், விரல்கள், விழிகள், மார்பு பற்றி விவரித்து, சிறந்த நடனமணியின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வேறு வகுத்திருந்தார் அந்த நூலாசிரியர். ஒரு கணம் புத்தகத்தை மூடி வைத்து, ஆளுயர கண்ணாடி முன் நின்று பார்த்தாள். அந்த இலக்கணப்படி, தன் உடம்பு இருக்கிறதா என ஒப்பிட்டுப் பார்த்தாள். அவள் செய்கை, அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அன்று மாலை நடக்கவிருக்கும் வரவேற்புக்கு, என்ன புடவை கட்டலாம் என யோசித்தாள்.

'நரேனை கேட்கலாமா...' என தோன்றியது. 'சே... இதுக்கா போன் செஞ்சே...' என்று கோபிப்பானா அல்லது கொஞ்சுவானா...'

மொபைல் போன் பட்டன்கள் மீது, மதுரிமாவின் தளிர் விரல்கள் நடனமாடின.

''ஏஞ்சல்...'' என்று செல்லமாக கொஞ்சினான்.

''ஒரு சின்ன சந்தேகம்...''

'' எஸ்...'' என்றான் உற்சாகமாக.

''உங்கள் பையில் இருந்து புத்தகம் ஒன்று எடுத்தேன்...''

''ஏ ஜோக்ஸ் புத்தகமா?''

''சேய்... எப்போதும் குறும்பு தானா... பக்கத்தில் யார் இருக்கா?''

''கவிதா...''

''என்னது...'' அதிர்ந்தாள் மதுரிமா.

''செல்லமே... சும்மா விளையாட்டுக்கு, உன்னை கோபமூட்டினேன். தனியா உட்கார்ந்திருக்கேன். எந்த நிமிஷமும் சி.இ.ஓ., வருவார். ரிசப்ஷன்ல உட்கார்ந்து, ஆம்பளை ரிசப்ஷனிஸ்ட்கிட்ட பேசிகிட்டிருக்கேன்.''

''போதும்... எப்பவும் உங்களுக்கு கவிதா நினைப்பு தானா?''

''டார்லிங்... சும்மா உன்னை டீஸ் பண்ணினேன். கமான்... என்ன சந்தேகம்?''

''சாயங்காலம் வரவேற்புக்கு, என்ன புடவை கட்டிக்கலாம்ன்னு யோசனை கேட்க நினைச்சேன்''

''வெயிட் பண்ணு... நானே உனக்கு கட்டி விடறேன். என்ன அற்புதமான வாய்ப்பு இது. இப்பவே நீ உள்ளாடையுடன் நிற்பதாக கற்பனை பண்றேன்''

''சீய்... கற்பனையை கட் பண்ணிட்டு, நிஜத்துக்கு வாங்க... வழக்கமா நீங்க ரசிக்கிற மஜந்தா கலர் கறுப்பு பார்டர் சாரி... ஓ.கே.,வா...''

''ஓ.கே., ஓ.கே.,''

''அடுத்த சந்தேகம்...''

''எஸ்...''

''உங்க பையில இருந்து ஒரு புத்தகம் எடுத்தேன்னு சொன்னேனே...''

''ஆமா...''

''இந்திய நடன வகைகளை பற்றிய புத்தகம் அது...''

'' படிச்சியா?'' ஆர்வமுடன் கேட்டான்.

''ம்... புரட்டினேன்.''

''கதக் நடனம்.''

''ம்...ம்...''

''பெண்ணின் அங்க இலக்கணம்...''

''படிச்சிட்டு...'' தயங்கினாள்.

''கண்ணாடி முன் நின்று பார்த்தியா...''

''அட... உங்களுக்கு எப்படி தெரிந்தது நரேன்!'' வியப்பால் துள்ளினாள்.

''பொதுவான சைக்காலஜி. அப்புறம் ஒண்ணு சொல்லட்டுமா...''

''அந்த உடம்பு இலக்கணம், உன்னை பொறுத்தவரை...'' என்று இழுத்தான்.

''என்ன சஸ்பென்ஸ்...''

''அதுல சொல்லியிருக்கிறது இலக்கணம். ஆனா, என் உயிரின் உயிர் மதுரிமா, அந்த இலக்கணத்திற்கு ஒரு நடனமாடும் இலக்கியம்!''

''நரேன்... இது ரொம்ப ஓவர்,'' என சொன்னாலும், மதுரிமாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

''சத்தியம் மதுரிமா... இங்க இருந்தே உன் தலையில் அடித்து சத்தியம் செய்யட்டா?''

''சரி போதும்... சீக்கிரம் வாங்க...''

''சந்தேகம் தீர்ந்ததா...''

''ம்...ம்...''

''என் பிரச்னைகள் தீரல...''

''என்ன?''

''சி.இ.ஓ., என்னை வரச் சொல்லிவிட்டு, அவர் எங்கேயோ போயிட்டார் போல இருக்கு. நான் எவ்வளவு நேரத்திற்கு ஆம்பள ரிசப்ஷனிஸ்டை பார்த்துட்டிருப்பேன்.''

''பொய் சொல்லாதீங்க... பக்கத்துல லேடி வாய்ஸ் கேட்குது...''

நரேனை கலாட்டா செய்தாள் மதுரிமா.

சாண்டியாகோ ஹாலிடே இன் ஓட்டல் ஜே... ஜேவென இருந்தது.

சுற்றுலா பயணிகள் மொய்த்துக் கொண்டிருந்தனர். வித்தியாசமான நகரம் அது. லாஸ் ஏஞ்சல்சுக்கு ஒருபுறம் லாஸ் வேஹாஸ்; இன்னொரு பக்கம் சாண்டியாகோ. எத்தனை முறை இங்கு வந்திருந்தாலும், இந்த முறை அதிக மகிழ்ச்சியில் திளைத்தான் நரேன்.

தொடர்ந்து, பயணமும், தூக்கமின்னையும், அவன் உடலை சோர்வுக்குள்ளாக் கினாலும், உணர்வுகள் அவன் இளமைக்கு ஈடு கொடுத்தன.

இந்த வைத்தீஸ்வரன் வந்ததும், நாலு வார்த்தை பேசிவிட்டு, ஓடிவிட வேண்டும்.

மதுரிமாவுடன் கொஞ்ச வேண்டும். அதுமட்டுமல்ல, சாண்டியாகோவை சுற்றி டிரைவ் போவதென்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

பக்கத்து சீட்டில் அவளை உட்கார வைத்து, தானே கார் ஓட்ட வேண்டும். சில்மிஷம் செய்ய வேண்டும் என திட்டம் போட்டான்.

அடிக்கடி அந்த பகுதியில் எரிமலை வெடித்து, தீ பிழம்புகள் கொப்பளிக்கும். அதையும் பார்த்து ரசிக்க வேண்டும். நரேனின் சிந்தனை, இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

அதனால், வைத்தீஸ்வரன் அவன் அருகில் வந்ததைக் கூட அவன் உணரவில்லை.அவரே நரேனை தொட்டு உசுப்பினார். விசுக்கென்று எழுந்தான்.

''என்ன நரேன்... பகல் தூக்கமா...''

''நோ சார்... ஜஸ்ட் திங்க்கிங் சம்திங்...''

''சாரி... உன்னை டிஸ்டர்ப் செஞ்சிட்டேன்.''

''நோ பிராப்ளம் சார்... நான் இங்கிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்.''

''என்னப்பா... டெக்னாலஜி யுகத்துல இருக்க... இது கூட தெரிஞ்சுக்க முடியாதா... லோக்கல், 'டிவி'யில நியூஸ் பார்த்தேன்...''

''என்ன நியூஸ் சார்...''

''உனக்கு வரவேற்பு நிகழ்ச்சி...''

''என்ன சார் சொல்றீங்க...''

''ஆமா... உன்னோட மனைவி என்ன சாதாரண ஆளா...''

''சாரி சார்... அவசர கல்யாணம். அதனால, அழைப்பிதழ் கூட தர முடியலே. நடனப் பள்ளியிலே வரவேற்பு... நீங்க அவசியம் வரணும்.''

''வர்றேன்... வர்றேன்...''

''என்ன சார்... அவசரமா வரச் சொன்னீங்க...''

''அதை அவ்வளவு அவசரமா சொல்ல முடியாது. வா... ரூமுக்கு போகலாம்...'' லிப்ட் முன் போய் நின்றார்.

ஆட்டுக்குட்டி போல பின்னால் போனான் நரேன்.

எட்டாவது மாடியில், வைத்தீஸ்வரனின் அறை. நரேனுக்கு படபடப்பாக இருந்தது. எப்படி இவரிடமிருந்து சடுதியில் கழட்டிக் கொண்டு விடுபடுவது என சிந்தித்துக் கொண்டே, அவருக்கு எதிரில் உட்கார்ந்தான்.

''சோ... நீயும் பெரும்பான்மையோட சேர்ந்துட்ட... என்ன புரியலையா? கல்யாணம் செய்து கொண்டோர் பட்டியல்ல சேர்ந்துட்ட...'' ஏதோ ஜோக் சொன்னதைப் போல, 'கலகல'வென சிரித்தார்.

என்ன சொல்வது என்று தெரியாமல், அசட்டு சிரிப்பு ஒன்றை பதிலாக தந்தான் நரேன். அமைதியாக தலையை ஆட்டினான், புன்னகையுடன்.

மெதுவாக, மிக மெதுவாக பாட்டிலை திறந்து, தீர்த்த யாத்திரைக்கு ஆயத்தமானார் வைத்தீஸ்வரன்.

''சார்... நான் அவசரமா திரும்பணும், சாப்பிடக் கூட இல்லை...''

''ஓ... இங்கே என் கூட சாப்பிடலாமே...''

''வேண்டாம் சார்...''

''ஆமாமாம்! உன் ஒய்ப் காத்துகிட்டு இருப்பாங்க... என்ன விருந்தா...''

தலையை மட்டும் ஆட்டினான் நரேன். நின்று நிதானித்து, நரேனிடம் பேச ஆரம்பித்தார் வைத்தீஸ்வரன்.

''நரேன்... நீ லீவ்ல போயிருந்தப்போ, ஒரு பிரளயமே உண்டாயிருச்சு தெரியுமா?''

''என்ன சார்...'' நரேனுக்கு உண்மையிலேயே அதிர்ச்சி.

''லீவ்ல போற அவசரத்தில் நீ செஞ்ச காரியம்...'' சி.இ.ஓ., முடிக்கவில்லை.

''எல்லாம் சரியாத் தானே செஞ்சு முடிச்சேன். நீங்க, ஓ.கே., சொன்னப்புறம் தானே இந்தியாவுக்கு போனேன்.''

படபடவென்று வார்த்தைகள் வந்தன. சற்றே நிசப்தம்.

தன் கைப்பெட்டியை திறந்தார் வைத்தீஸ்வரன். சின்ன ஒரு பைலை எடுத்து, அவன் பக்கம் நகர்த்தினார்.

கையில் எடுத்து பக்கங்களை புரட்டினான் நரேன்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

''என்ன சார் இது! எல்லாம் சரியாத்தான் இருக்கு...''

''அபத்தமா பேசாதே நரேன்... கவனமா பாரு... நீ செஞ்ச தப்பு புரியும்.''

நரேனுக்கு வியர்த்தது. இந்த மனுஷனோட தொடர்பு வைச்சுக்கிட்டதே தவறோ... நரேனின் உள் மனது, திடீர் பதைபதைப்புக்குள்ளானது. குப்பியில் இருந்ததை மெதுவாக உறிஞ்சி சுவைத்தார் வைத்தீஸ்வரன். சைலன்ட் மோடில் இருந்த நரேனின் மொபைல் போன் மின்னியது.

அது மதுரிமாவின் அழைப்பு. கிட்டதட்ட இருபது மிஸ்ட் கால்கள். நரேன் தவிப்பதை பார்த்த வைத்தீஸ்வரன், ''பேசு!'' என்றார்.

''ஏஞ்சல்... ஐ ஆம் இன் எ மீட்டிங்... கொஞ்சம் நேரம் கழித்து கூப்பிடுறேன்...''

''மனைவியை, 'ஏஞ்சல்'ன்னு தான் கூப்பிடுவியா நரேன்?''

சே... விவஸ்தை கெட்ட மனுஷன்னு நினைச்சுகிட்டு, அசடு வழிந்தான்.

ஒரு மர்மப் புன்னகையை உதட்டில் தவழ விட்டார் வைத்தீஸ்வரன்.

''உன்னால், கம்பெனிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?''

''நோ சார்... யூ ஆர் ராங்...'' வலிமையோடு எதிர்த்து பேசினான்.

எந்த வம்பில் இவனை இணைக்கப் பார்க்கிறார் என்று தெரியாமல், புரியாமல் திகைத்தான்.

இமைகளை உதறிக்கொண்டு, தீர்க்கமாக நரேனை பார்த்தார் வைத்தீஸ்வரன். பின் நிதானமாக அவனிடம் பேச ஆரம்பித்தார். வார்த்தை ஜாலங்களால், எதையும் வில்லாக வளைக்கும் ஆற்றல் அவருடைய திறமைக்கு அஸ்திவாரம்.

ஏதோ தவறு செய்துவிட்டு, தலைமையிடம் இருந்து தப்பிக்க தன்னை பலிகடா ஆக்கி விடுவாரா என, நடுங்க ஆரம்பித்தான் நரேன்.

அவன் சிந்திக்க தொடங்கினால் ஆபத்து என்பதை உணர்ந்து, கொஞ்சம் இறங்கி வந்தார் வைத்தீஸ்வரன்.

''நரேன்... எந்த பிரச்னைக்கும் ஒரு விடை இல்லாமல் போகாது. நடுங்காதே... நான் உன்னை காப்பாத்தறேன்.''

''சார்... நான் தப்பே செய்யல... ஐ ஆம் ஷ்யூர்...''

''ஆனா, பைல் வேற மாதிரி பேசுது நரேன்.''

குழப்பமடைந்த நரேன், ''சார்... நாளைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பறேன். மதியம் ஆபிஸ்ல பார்க்கலாம்,'' என்று கூறிவிட்டு, விசுக்கென்று எழுந்தான்.

''பார்க்கலாம்... அதுக்கு முன்னால பிரச்னை என் கையை விட்டு போயிருச்சுன்னா...''

ரொம்பவும் சீரியசாக இருந்தது அவர் முகம்.

நரேனின் மொபைல் போன் மீண்டும் மின்னியது. பொறுமையின்றி மதுரிமா தவிப்பது நரேனுக்கு புரிந்தது.

''ஓ.கே., சார்... இப்ப இதுக்கு என்ன தான் முடிவு? சந்தோஷமா ரிசப்ஷனில் கலந்துக்க முடியாதா? நான் போகலைன்னா, மதுரிமா நொறுங்கிப் போயிடுவா சார்...''

துடித்துப் போனான் நரேன்.

''ஓ.கே., நரேன்... உன் பிரச்னையை, என் பிரச்னையா நினைச்சு, இப்பவே லாயர் கிட்ட பேசி முடிச்சிடறேன். இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டுப் போ...'' வெகு அசால்டாக, வெற்றுத்தாளை நீட்டினார்.

''நான் உங்களை நம்பறேன் சார்...''

கையெழுத்திட்டுவிட்டு, வேகமாக அறையைவிட்டு அகன்றான் நரேன்.

தேவலோகம் போல இருந்தது, பிரமாண்டமான மேடை அமைப்பு. நூற்றுக்கணக்கில் இந்திய, அமெரிக்க யுவதிகள், ஒப்பனையின் உச்சத்தில் இருந்தனர்.

எங்கும் மகிழ்ச்சி வெள்ளம். பக்கத்தில் மதுரிமா அப்சரசாக மின்ன, மதியம் ஹாலிடே இன்னில் நடந்ததையெல்லாம் மறந்து, இளம் பெண்களோடு குதூகலமாக கை குலுக்கி கொண்டிருந்தான் நரேன்.

பரிசுப் பொருளை, பளபள காகிதத்தில் ரிப்பன் போட்டு கட்டி, வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவிலும், இந்த சம்பிரதாயத்தை இந்தியர்கள் இன்றும் மறக்கவில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மதுரிமாவை பார்த்து புன்னகை செய்தான். அவளுக்கும் பெருமையாக இருந்தது. கண் நிறைந்த ஆண்மகன், பொறுப்பான பதவியில் இருக்கும் கண்ணியமானவன்.

நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தவர்களிடம் எல்லாம், நரேனின் பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார், மதுரிமாவின் அப்பா.

மேடையில் சின்னப் பெண்கள், 'என்னை விட்டு ஓடிப் போக முடியுமா...' பாடலுக்கு அபிநயத்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ரிசப்ஷன் ஹாலின் வாயில் பக்கம் பார்வையை திருப்பினான் நரேன்.

மின்னல் போல, வேகமாக நுழைந்து கொண்டிருந்தார் வைத்தீஸ்வரன்.

— தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us