தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப


PUBLISHED ON : ஜூலை 04, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலிபோர்னியா (அமெரிக்கா)வில்இருந்து வந்திருந்தார் ஆன் என்ற கருப்பு அம்மணி. ஏழு அடி உயரம், மூன்றடி அகலம் கொண்டவர். சென்னை தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தார். தோல் ஆடைகள் இறக்குமதியாளர் இவர்.

ஒரு மாலை வேளையில், "ஷாப்பிங்' முடித்துவிட்டு, தெரு வழியே நடந்து திரும்பும்போது, இஸ்திரி வண்டியை பார்த்து, ஆவலாக அதனருகே ஓடி, இஸ்திரி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், "இந்த இஸ்திரி ஆளை என்னோடு கூட்டிச் சென்றால், எவ்வளவோ பிரச்னைகள் எனக்குத் தீரும். அயர்ன் செய்யாமல் இருப்பதற்காக என் கணவரிடம் தினமும் பாட்டு வாங்க வேண்டாம். இவருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்?' எனக் கேட்டார்!

"தினமும் 150 ரூபாய் கூலி, மாதம் 4500 ரூபாய். அதாவது, 100 டாலர் உங்க பணத்தில்... இதற்கு மேல் எவ்வளவு கொடுத்தாலும் உங்க இஷ்டம்!' என்றேன்.

"நூறு டாலர் என்ன... 500 டாலர் கூடத் தரத் தயார்!' என்றார் ஆன்.

நம்மூர் ஆட்களுக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன; அதை பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறோம். இருந்தாலும், பிழைக்கப் போன இடத்தில், "பிரிவினை பேச ஆரம்பிக்கிறோம்; சங்கம் அமைக்கிறோம்; கட்சிக் கொடிகளைப் பறக்க விடுகிறோம். இதெல்லாம் அவர்களுக்கு பிடிக்காமல், 30 பிரம்படியுடன், தலையை மொட்டையும் அடித்து அனுப்பி விடுகின்றனர். தமிழனுக்கு புத்தி வரும் நாள் என்றோ?

***



"ஓர்க்மென் பப்ளிஷிங்' என்ற நியுயார்க் நிறுவனம் வெளியிட்ட, "தி புக் ஆப் கொஸ்டின்ஸ்!' என்ற புத்தகம் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுதியவர் கிரிகோரி ஸ்டாக் என்பவர். 217கேள்விகள் உள்ளன. அவற்றுடன் தொடர்பான 50 கேள்விகள், கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஒருவர் தன்னைப் பற்றியே, தானே அறிந்து கொள்ளும் விதத்தில் கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவரின் மதிப்பு, நம்பிக்கை, வாழ்க்கை, காதல், பணம், செக்ஸ், நேர்மை, தயாளம், பெருமை, இறப்பு போன்ற, "சப்ஜெக்ட்'களில் கேள்விகள் உள்ளன.

ஒருவர் தன்னைத் தானே தன் கடந்த காலம் - நிகழ்காலம் பற்றி, உண்மையாக ஆராய்ந்து பதிலளிக்கும் விதத்தில் கேள்விகள் உள்ளன.

இப்படி பதில் காண்பதால் என்ன பயன்?

"தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளவும், மற்றவருடனான உறவை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும்!' என்கிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர்.

கேள்விகளைப் படித்துக் கொண்டே வரும்போது, இதே கேள்விகளை சமீபத்தில் தமிழில் படித்ததாக, "பொறி' தட்ட, எல்லா தமிழ் வார இதழ்களையும் புரட்டினேன்.

சிக்கியது அந்த வார இதழ்.

ஆங்கிலப் புத்தகத்தில் வெளியாகியுள்ள கேள்விகள் சிலவற்றை அழகாகத் தொகுத்து, சில சினிமா – நாடக நடிகர், நடிகைகளிடம் கேட்டு, பதில் வாங்கி வெளியிட்டு இருந்தனர்; பதிலும் சுவையாகத் தான் இருந்தது.

"நல்ல கருத்துக்கள் - விஷயங்கள் எங்கு, எந்த மொழியில் வெளியானாலும், அதை நம் வாசகருக்குக் கொடுக்க வேண்டும்!' என்ற எண்ணத்தில் செயல்பட்ட அந்த வார இதழை நினைத்து, பெருமை கொண்டேன்.

சாம்பிள் கேள்விகள் சில:

* உங்களுடைய குழந்தைக்கு ஒரு வயது; நல்ல அழகு. பிரசவ ஆஸ்பத்திரியில் நடந்த தவறால், குழந்தை மாறி விட்டது. உங்களது என நினைத்து வளர்க்கும் குழந்தை, உங்களது அல்ல எனத் தெரிய வருகிறது. என்ன செய்வீர்கள் — குழந்தையை மாற்றிக் கொள்வீர்களா?

* உங்கள் எதிரே 10 துப்பாக்கிகள் - ஒன்றில் மட்டும் குண்டு உள்ளது; அது, எது எனத் தெரியாது. 10ல் ஒரு துப்பாக்கியை எடுத்து, பொட்டில் சுட்டுக் கொள்ள வேண்டும். உயிர் தப்பினால் பத்து லட்சம் டாலர் பரிசு! பந்தயத்தில் கலந்து கொள்வீர்களா?

— இதுபோன்ற கேள்விகள். எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம்!



***



வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த தமிழ் அன்பர் ஒருவருடன், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் செல்ல வேண்டி இருந்தது. அந்தத் தமிழன்பர் பல வருடங்களுக்குப் பின் தமிழகம் வந்திருந்தார்.

விசேஷ தரிசனத்திற்கான கட்டணத்தை செலுத்தி வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன், புதுமண தம்பதியர் நின்று இருந்தனர். காசு வசூலித்து தரிசனம் காட்டும் வரிசையும், தர்ம தரிசன வரிசையும் கொஞ்சம் கூட நகரவில்லை.

ஐந்து, பத்து என நிமிடங்கள் ஓடி, பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தன.

எங்களுக்கு முன்புறம் நின்று இருந்த தம்பதியரில், மணமகள் கொஞ்சம், "போல்டு டைப்!' அர்ச்சகரை அழைத்து, தாமதத்திற்கு காரணம் கேட்டார்.

நீதியை நிலை நாட்டும் பதவியில் உள்ள சென்னை, "கனவான்' ஒருவர், தரிசனத்திற்கு வர இருப்பதாகவும், அவருக்காக பொதுமக்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினார்.

அம்மணிக்கு வந்ததே ஆத்திரம்... "ஆண்டவன் சன்னதியில் அரசனும், ஆண்டியும் ஒன்று தான். இங்கே பாருங்க... பச்சை குழந்தைகள் புழுக்கம் தாங்காமல், சிணுங்குகின்றன. நீதியை நிலை நாட்டும் மிகப் பெரிய பணியில் இருக்கும் அவர், இதுபோல பொதுமக்களை நிறுத்தி இருக்க சொல்ல மாட்டார். அவர் வரட்டும்... நீதி கேட்கிறேன்!' என, கண்ணகி போல பொரிந்து தள்ளி, பெரிய பதவியில் இருப்பவர்களே பொதுமக்களுடன் வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்... என, வி.வி.ஐ.பி.,களின் பெயரைக் கூறி, ஆதாரத்துடன் பேசினார்.

நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்குப் பின், "டவாலி' புடை சூழ, சென்னையில் உள்ள ஒரு நீதிமன்றத்தைத் சேர்ந்த அந்த, "நீதிமான்' தரிசனத்திற்கு வந்தார். இதனிடையே சிறு குழந்தைகள் அழத் துவங்கி இருந்தன.

"நீதிமான்' அடுத்த சன்னதிக்கு தரிசனத்திற்கு செல்லுமுன், நம், "கண்ணகி' அம்மணி வழிமறித்தார் அவரை; நான் வழக்கம் போல ஒட்டுக் கேட்டேன்.

"நீங்க தானே நீதிமான்...' என, அவரது பெயரைக் கேட்டார் ஆங்கிலத்தில். (முன்னமே அவரது பெயரை விசாரித்து, அறிந்து கொண்டார் அர்ச்சகரிடம்.)

அறிமுகமில்லாத பெண்கள் திடீரென வந்து பேசும்போது, ஆண்களுக்கே உரிய ஒரு அசட்டு, "ஹி... ஹி...' இருக்கிறது அல்லவா... அதை உதிர்த்து, "எஸ்... எஸ்...' என்றார்.

"நீங்கள் இங்கு வருவதற்கு முன் நடந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நீங்கள் தரிசனத்திற்கு வரப் போகிறீர்கள் என்பதால், 45 நிமிடங்கள் சிறுகுழந்தைகள் உட்பட பல பக்த கோடிகளை காக்க வைத்து விட்டனர் உங்களது கைத்தடிகள். நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருக்கும் நீங்கள், இச்செயலைச் செய்ய உத்தரவிட்டு இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருப்பதற்காகத் தான், இப்போது உங்களிடம் விஷயத்தைச் சொல்கிறேன்...' என முடித்தார்.

ஒரு பேச்சுக்காகக் கூட, நீதிமான், "சாரி' சொல்லவில்லை. அதிகார மமதையுடன், "டவாலி'யைத் திரும்பிப் பார்க்க, அது வழக்கம் போல், "வழி விடுங்கள்... வழி விடுங்கள்!' எனக் கூறியபடியே, அம்மணியை பின்னுக்குத் தள்ளி விட்டுச் சென்றது.

"இவனுங்களைப் போல உள்ள, அரசு ஊழியம் செய்யும், மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி, வயிற்றைக் கழுவும் ஆசாமிங்க, "ரிட்டயர்' ஆன பின், ஒரு சொறி, "டி.ஓ.ஜி.,' கூட மதிக்க மாட்டேங்குதுன்னா என்ன காரணம்ன்னு, புரியுதா இப்போ...' என, தன் கணவரைப் பார்த்து கேட்டார் அம்மணி; தலை அசைத்தார் அவர்.

அம்மணியின் கருத்தில் உள்ள நியாயம் எனக்கு புரிந்தது; உங்களுக்கும் தானே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us