PUBLISHED ON : ஜூலை 04, 2010

பிரெஞ்சு சக்கரவர்த்தி பதினாறாம் லூயியுடன், ஓர் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக, ஒரு தூதுக் குழுவை அனுப்ப முடிவு செய்தார் திப்பு சுல்தான். 10 ஆயிரம் பிரெஞ்சு வீரர்களை, இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென்றும், அந்தப் படை திப்பு சுல்தானின் நேரடித் தலைமையின் கீழ் செயல்படும் என்றும், அவர் தயாரித்த நகல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர், மீது போர் பிரகடனம் செய்வது என்றும், சென்னை, வங்காளம், பம்பாய் ஆகிய இடங்களைக் கைப்பற்றி, பிரிட்டிஷாரை இந்தியா விலிருந்து ஒழித்துக் கட்டும் வரை போர் தொடர வேண்டுமென்றும், நகல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில், தென்மாநிலங்களில் அவர்களை வேரறுக்க வேண்டும் என்றும், பின் வடமாநிலங்களில் எடுத்துக் கொள்ளலாம் என்றும், திப்பு கருத்து வெளியிட்டார். இந்தத் திட்டம் மிக ரகசியமாக இருக்க வேண்டுமென்று, தன்னுடைய தூதர்களைப் கேட்டுக் கொண்டார்.
ஜூலை மாதம் 1787ல், மூன்று தூதர்கள் உள்பட 45 பேரைக் கொண்ட குழு, புதுச்சேரியிலிருந்து, பிரான்சுக்குப் புறப்பட்டது. திப்புவின் அரசவையில், பிரெஞ்சுப் பிரதிநிதியாக இருந்தவரும் அக்குழுவுடன் சென்றார். தூதுக்குழு பிரான்சை அடைந்தது. பிரெஞ்சு சக்கரவர்த்தி பதினாறாம் லூயி, தூதுக் குழுவினருக்கு, சிறப்பான வரவேற்பு அளித்தார்.
ஆனால், அந்த சமயத்தில் பிரெஞ்சு நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. பெரும் புரட்சி ஏற்படுவதற்கான, சூழ்நிலை நிலவியது. எனவே, எத்தகைய ராணுவ ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடிய நிலைமையில், பிரெஞ்சு அரசாங்கம் இல்லை. தாம் சென்ற நோக்கம் நிறைவேறாமல், தூதுக் குழுவினர் பாரிசிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்து சேர்ந்தனர்.
***
"எலே' என்பது நெல்லை மக்கள் சகஜமாகப் பயன் படுத்தும் ஒரு சொல். அது, பல பாவங்களில் பிரயோகமாகும். "எலே... இந்த வருஷமாவது கலியாணச் சாப்பாடு போடுவியாலே?' - (அன்பு) "என்னலே நினைச்சுக் கிட்டே!' - (கோபம்) இந்த, "எலே' என்பது "எல்லே' என்ற பழைய தமிழ்ச் சொல்லின் மரூஉ. "எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?' என்று, திருப்பாவையில், பாடுகிறாள் ஆண்டாள். ***
என் பேரன், என் கண் முன்னாலேயே கண்டபடி ஊர் சுற்றுவதையும், பெண்கள் பால் அதிக ஈடுபாடு கொண்டு அழிவதையும், உழைப்பிற்கு அதிக மதிப்பு கொடுக்காது, சோம்பேறியாகக் கெட்டுப் போவதையும் கண்டு, மனம் நொந்திருக்கிறேன். ஒரு சமயம், குளியலறையில் நான் வழுக்கி விழுந்து விட்டேன். நடக்க முடியாமல் நான் திண்டாடிக் கொண்டிருந்த போது, "தாத்தா... என்னுடைய அன்புப் பரிசு இது!' என்று, ஒரு அழகான வாக்கிங் ஸ்டிக்கைக் கொடுத்தான். அவனுடைய பாக்கெட் செலவை மிச்சப்படுத்தி, அதை வாங்கியிருக்கிறான் என்று, பிறகு அறிந்தேன். பிறரது துன்பங்களைப் பார்த்து, இரங்கும் மனப்பான்மை அவனிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தவுடன், அவனுடைய வருங்காலத்தைப் பற்றி நான் பயப்படவில்லை! — சர்ச்சில் ஒரு கட்டுரையில்.
நம் வாழ்வை, கடவுள் ஒரு நோக்கத்தோடு தான் படைத்திருக்கிறார் என்பதற்கு, என்ன சான்று தெரியுமா? இந்த பூமி, இப்போது இருப்பதை விட, 10 சதவீதம் சூரியனுக்கு நெருக்கமாய் இருந்திருந்தால், எரிந்து போயிருக்கும்; 10 சதவீதம் தள்ளி இருந்திருந்தால், குளிரில் உறைந்து போயிருக்கும். 1/5 பங்கு, நிலவுக்கு நெருக்கமாய் இருந்திருந்தால், நாளுக்கு இரண்டு முறை பேரலைகள் பொங்கிவரும். மிகத் துல்லியமான கணக்கில், பூமியுருண்டை இருப்பது எதற்காக? நீங்களும், நானும் வாழ்ந்து வெற்றி காண வேண்டும் என்பதற்காக.
