தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேட்டை செய்யும் குழந்தைகளை அதட்டி அடக்கும் பெற்றோரும் உண்டு; அடித்து அடக்கும் பெற்றோரும் உண்டு. இது நம்மூர் கதை.

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், ஆஸ்திரே லியா போன்ற நாடுகளிலும் குழந்தைகளை அடிப்பது, மிரட்டுவது போன்றவை சட்டப்படி குற்றம்.

ஒரு குழந்தை உதைபடுவதாக பக்கத்து வீட்டுக்காரரோ, எதிர் வீட்டுக்காரரோ அல்லது அதே குழந்தையோ போன் மூலம் போலீசுக்கு புகார் செய்தாலே போதும்... 'தப தப'வென குறிப்பிட்ட வீட்டிற்குள் புகுந்து, குழந்தையை கொடுமைப்படுத்தும் தகப்பனையோ, தாயையோ அல்லது இருவரையுமே பிடித்துச் சென்று, தண்டனை கொடுத்து விடுவர் போலீசார்.

இப்போது நான் சொல்லப் போவது ஜெர்மன் நாட்டில் நடந்த சம்பவம் ஒன்று... புலம் பெயர்ந்த இலங்கை அன்பர் ஒருவர், ஜெர்மன் நாட்டில் செட்டிலாகி விட்டார். சுயதொழில் மூலம் நன்கு முன்னேறி கார், பங்களா என வசதியுடனும், செல்வாக்குடனும் திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு பத்து வயதிலும், எட்டு வயதிலும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் ஆண் குழந்தை செம வாலு; எப்போதும் ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருப்பான்.

ஒரு நாள், பையனின் குறும்பு அளவுக்கதிமாகப் போகவே, அவன் தந்தை நாலு சாத்து சாத்தி விட்டார். இதை, தன் நண்பனிடம் கூறியிருக்கிறான் அந்தப் பையன். நண்பனின் ஐடியாபடி, போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டான் பையன்.

கன ஜோரான உ.பா., பார்ட்டி ஒன்றில் பையனின் தகப்பனார் கலந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்து தகப்பனாரை கைது செய்து கொண்டு போனது போலீஸ். தன் நண்பர்கள், 'பிசினஸ்' கூட்டாளிகள் என, பெரிய வட்டத்தின் நடுவே, தான் அவமானப்பட்டு விட்டதாக கருதி, மிகுந்த மன வேதனை கொண்டார் தகப்பனார்.

ஒரு வழியாக போலீஸ் பிடியிலிருந்து தப்பி வந்த பின், பையனுடன் சுமூகமாகவே நடந்து கொண்டிருக்கிறார். பள்ளி விடுமுறை விட்டதும், சொந்த நாடான இலங்கைக்கு போய் வரலாமென, 'புரோகிராம்' போட்டு, கிளம்பி சென்றிருக்கின்றனர். விமானம், கொழும்பு பண்டாரநாயக்கா விமான தளத்தில் இறங்கியது.

விமானத்தை விட்டு வெளியேறி, விமான நிலைய வளாகத்திற்குள் அக்குடும்பம் வந்ததுதான் தாமதம்... அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தன் மகனை, 'பொளேர், பொளேர்' என முதுகில் சாத்தி, 'இப்ப போடுடா போலீசுக்கு போனை!' என்று கூறியபடியே தாக்கியிருக்கிறார்.

பையனின் அம்மா உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தியது அடுத்தக் கதை.

இதைப் படிக்கும் நீங்கள், 'ஜெர்மன் நாடு போன்ற இடத்தில் நாம் வசிக்கவில்லையே...' என சந்தோஷம் கொள்கிறீர்களா அல்லது அது போன்ற சட்டம் இங்கும் தேவை என நினைக்கிறீர்களா?

***

தேனி மாவட்டம், வீரபாண்டியிலிருந்து வாசகி ஒருவரின் கடிதம். அவர் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறாராம். அந்நிறுவனம் சார்பில் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபடுகிறாராம்.

சமீபத்தில், எட்டு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, தேனி மாவட்டத்தில் உள்ள தலித் பெண்களின் நிலை பற்றி தகவல் சேகரித்தனராம்.

கடிதத்தில் வாசகி எழுதியுள்ளது இது தான்...

கம்ப்யூட்டர் காலத்திலும் அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் தலித் மக்களின் நிலைமையை உயர்த்த, கடவுள் மனிதனாக பிறந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்...

வெளிப்பேச்சுக்கு மட்டுமே அரசியல்வாதிகள், தலித் மக்களிடம் உரிமை கொண்டாடுவது போல் தோன்றுகிறது.

பெண்களை விட ஆண்களிடம் ஜாதி வித்தியாசம் அதிகமுள்ளது. பெண்கள் பொறாமை குணம் படைத்தவர்கள் தான்; ஆனால், ஆண்களை மாதிரி ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல...

நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதுபோல், தலித்களுக்கு இட ஒதுக்கீடும், இலவச திட்டங்

களும் கொடுக்கின்றனர் ஆட்சி செய்வோர்.

தலித் மக்கள் அதிகம் உள்ள கிராமங்களில், தலித் மக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், மற்ற ஜாதி மக்களை தாழ்த்திப் பேசுவது கிடையாது. ஆனால், சிறுபான்மையாக தலித் மக்கள் உள்ள கிராமங்களில் அவர்களின் நிலைமையை

(குறிப்பாக, சக்கிலியர் நிலைமை.) நினைக்கும் போது, நாம் எந்த நூற்றாண்டில் உள்ளோம் என பதற வைக்கிறது.

சர்வேயில் கீழ்கண்ட கேள்விகளை தலித் மக்களிடம் கேட்டோம். இச்சர்வேயில் எஸ்.சி., பி.சி., குழுக்களிடம் தனித்தனியாக கலந்துரையாடினோம்.

தலித் மக்கள் உள்ள கிராமங்களில் நடந்த சர்வே (சதவீதத்தில்):

1. காலணி அணிந்து மேல் சட்டையுடன் ஊருக்குள் செல்ல முடியுமா?

ஆம் – 80, இல்லை – 20.

2. அனைத்து கோவில்களுக்கும் சென்று வர முடியுமா?

ஆம் – 2. இல்லை – 98.

3. பொது இடங்களில் மற்ற பெண்களுடன்

சமமாக உட்கார முடியுமா?

ஆம் – 10, இல்லை – 90.

4. பிற ஜாதியினர் வீட்டிற்குள் செல்ல முடியுமா?

ஆம் – 0, இல்லை – 100.

5. டீ கடைகளில் தனி டம்ளர் உண்டா?

ஆம் – 90, இல்லை – 10.

6. பொது சுடுகாடு வசதி உண்டா?

ஆம் – 0, இல்லை – 100.

7. இறந்த சேதி சொல்லுதல், அவ்வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலை செய்கின்றனரா?

ஆம் – 50, இல்லை – 50.

8. பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியுமா?

ஆம் – 75, இல்லை – 25.

மேற்கண்ட கேள்விகளை எஸ்.சி., மற்றும் பி.சி., பெண்களிடம் கேட்கும் போது, சில பெண்கள், 'உண்மையைச் சொன்னால் நாங்கள் ஊரில் வாழ முடியாது...' என்று பயந்தனர்; சில பெண்கள் உண்மையைத் தைரியமாகக் கூறினர்.

தேனி மாவட்டத்தில், குறிப்பாக, ஆண்டிபட்டி, கடமலை, பெரிய குளம், போடி, தேனி வட்டங்களில் இந்த சர்வே செய்தோம்.

டீ கடைகளில் தனி டம்ளர் முறை அதிகமாக உள்ளது. அலுமினிய டம்ளருக்கு பதில் எவர்சில்வர் டம்ளர் பயன்படுத்துகின்றனர். கடையில் எவர்சில்வர் மற்றும் பீங்கான் டம்ளர்கள் உள்ளன. எஸ்.சி.,க்கு எவர்சில்வர் என்றால், பி.சி.,க்கு பீங்கான்... எஸ்.சி.,க்கு பீங்கான் என்றால், பி.சி.,க்கு எவர்சில்வர். பார்ப்பதற்கு வித்தியாசம் தெரியாது; ஆனால், தனி டம்ளர் முறை உள்ளது.

தனி டம்ளர் முறை உள்ள கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் ஒரு குழு உள்ளது. ஆனால், அக்குழுவில் உயர் ஜாதியினர் மற்றும் பணக்கார தலித்துக்கள் உறுப்பினராக உள்ளதால், கமிட்டியால் சரியாக செயல்பட முடியவில்லை.

குறைந்தது ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, போடி தாலுக்காவில் 60 கிராமங்களில் தனி டம்ளர் முறை உள்ளது. இதை தடுக்கப் போவது யார் என்று தான் தெரியவில்லை.

— கடிதத்தை படித்து முடித்து, 'ம்...' என பெருமூச்சு விட்டேன்! 



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us