PUBLISHED ON : மார் 04, 2018

சூடிக் கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாளை, பெரும்பாலும் நின்ற கோலத்தில் தான் தரிசிக்க முடியும். ஆனால், அமர்ந்த கோலத்தில் அவளைத் தரிசிக்க, திருச்சி மாவட்டம், அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். இது, 108 திவ்யதேசங்களில் ஒன்று!
'இந்த உலகத்தில் தானே அழகானவன்...' என்ற கர்வம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது; எனவே, அவரை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார், பெருமாள்.
பூலோகம் வந்த பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கேட்டு தவமிருந்தார். அப்போது மகாவிஷ்ணு, பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன் வந்தார். அவரைக் கண்ட பிரம்மா, 'ஐயா... இதுவரை தங்களைப் போன்ற அழகான எவரையும் நான் படைத்ததில்லயே தாங்கள் யார்?' எனக் கேட்டார்.
வந்தவரோ அதற்கு பதில் சொல்லாமல், 'அழகு நிலையற்றது; அதுகுறித்து ஆணவம் கொண்டால், அதுவே, அவனை அழித்துவிடும்...'என்றார். இதைக் கேட்ட பிரம்மா, தன் கேள்விக்கு, இது பதில் இல்லையே என விழித்தார். அப்போது, பாற்கடலில் பள்ளிக்கொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார், மகாவிஷ்ணு.
அவரைக் கண்ட பிரம்மா, உண்மையை உணர்ந்து, தன் ஆணவம் ஒழியப்பெற்றார். அவரது வேண்டுகோளுக்கிணங்க, இத்தலத்தில் பள்ளிக்கொண்ட கோலத்தில் எழுந்தருளினார். பிற்காலத்தில், சோழமன்னர் ஒருவர் இங்கு கோவில் எழுப்பினார்.
பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால், இவ்வூருக்கு, அன்பு இல் (அன்பு இல்லம்) என பெயர் ஏற்பட்டது. இதுவே, இணைந்து, 'அன்பில்' ஆகி விட்டது.
கருவறையில் மகாவிஷ்ணு, ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடனும், நாபியில் பிரம்மாவுடனும் காட்சி தருகிறார். இங்குள்ள, 'தாரக விமானம்' ராஜகோபுரம் போல் இருப்பது வித்தியாசம்.
கருவறையில் இருக்கும் உற்சவரான ஆண்டாள், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஆண்டாளின் அமர்ந்த கோலம் காண்பதுவும், ஒரே கோவிலில் நின்ற, அமர்ந்த கோலங்களில் ஆண்டாளை தரிசிக்க கிடைப்பதும் அபூர்வம். இங்குள்ள முன்மண்டபத்தில் ஆண்டாள் தனி சன்னிதியில் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கிறாள். மற்றொரு சன்னிதியில் அருள்கிறாள், அழகியவல்லி நாச்சியார்.
இத்தலத்தில் இருந்து சுமார், 2 கி.மீ., துாரத்தில், திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோவில் இருக்கிறது. இங்கும் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள் புரிகிறார், பெருமாள்.
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 26 கி.மீ., துாரத்தில் உள்ளது, அன்பில்!
தி.செல்லப்பா
