தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்மையை பெருமைபடுத்துவோம்!

என்னுடன் பணியாற்றும் நண்பர், தன் மனைவியை ஒருபோதும் குறை கூற மாட்டார்; பெருமையாகவே பேசுவார். அதனால், 'உங்க மனைவியிடம் எந்த குறையுமே இல்லயா, அவர் தப்பே செய்ய மாட்டாரா...' என்று கேட்டபோது, 'குறை இல்லாத மனிதன் யார் இருக்கா... எல்லாரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத் தான் செய்யும். தவறு செய்யாத மனிதர்களே இல்ல; இதற்கு நானும் கூட விதிவிலக்கல்ல எனும்போது, என் மனைவி மட்டும், 100 சதவீதம் சரியா இருக்கணும்ன்னு நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்... என் குறைகளையும், தவறுகளையும் அவள் பொறுத்துக் கொள்ளும்போது, அவளது குறைகளையும், தவறுகளையும் நான் பொறுத்துக் கொள்வதே சரி.

'நான், அவளிடம் இருக்கும், 'பாசிட்டிவ்' விஷயங்களை மட்டுமே பேசப் பேச, அவளுடைய குறைகளும், தவறுகளும் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்கிறேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மட்டுமல்ல, கணவன் அவளை நடத்தும் விதமும் கூட...' என்றார். இவரை போல எல்லாரும் சிந்தித்து நடந்தால், பெண்மைக்கு என்றும் பெருமை தான்!

— ஆர்.கவிப்பிரியன், கோவை.

மருமகளை மெச்சும் மாமியார்!

என் உறவுக்கார பெண்ணை சந்திக்க சென்றிருந்தேன். கட்டிலில் அவள், 'ஹாயாக' துாங்கிக் கொண்டிருக்க, அவளது மாமியார், அடுப்படியில் வேலை செய்தபடி இருந்தார். அவருக்கு ஒத்தாசை செய்தபடி இருந்தார், மாமனார். என்னை வரவேற்று உபசரித்த அவர்கள், 'மருமகளுக்கு உடம்புக்கு முடியலம்மா... அதான், ஓய்வுல இருக்கா. நீ விஷயத்தை சொல்; அவள் எழுந்ததும் சொல்லி, போன் பண்ண சொல்றேன்; துாங்கறவள எழுப்ப வேணாம்...' என்றனர்.

வந்த விஷயத்தைக் கூறி விடைபெற்று திரும்பினேன். சில மணி நேரத்துக்கு பின், அவளிடமிருந்து அழைப்பு வந்தது... 'என்னடி உடம்புக்கு?' எனக் கேட்டேன்.

'பீரியட் டைம்டி... அதுதான், அசதியில் துாங்கிட்டேன்...' என்றவள், 'இந்த மாதிரி சமயங்கள்ல நாலு நாளைக்கு என்னை, என் மாமனாரும், மாமியாரும் எந்த வேலையும் செய்ய விட மாட்டாங்க. சமைப்பது, கூட்டுவது, துவைப்பது என, எல்லாமே அவங்க தான்...' என்றாள்.

வியந்த நான், 'கொடுத்து வைச்சவடி நீ...' என, அவளை வாழ்த்தினேன்.

'அந்த நேரம்' வந்தாலே, மருமகளை கரித்துக் கொட்டும் மாமியார்களிடையே, தானும், 'அதை' அனுபவித்தவள் தானே என புரிந்து, பரிவு காட்டிய அவளது மாமியாரை, மானசீகமாய் பாராட்டினேன். மற்ற மாமியார்களும் இப்படி இருப்பரா!

— ஜி.சக்தி, திருப்பூர்.

'பள பள' மேனியின் ரகசியம்!

என் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினரின் பாட்டி, ஒரு வயது நிரம்பிய, தன் கொள்ளுப் பேத்தியை, ஏதோ பொடியை தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அந்த பொடி நல்ல வாசனையுடன் இருந்தது.

'இது என்ன பொடி?' என்று கேட்டேன். 'இது, மூலிகை பொடி; பாசிப்பயறு, சந்தனம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு என எல்லாம் கலந்தது. இவற்றை தனித்தனியாக உலர்த்தி, பொடி செய்து, கலந்து வைச்சுக்கலாம்; இதற்கு பெயர் நலங்கு மாவு. இதனுடன், கஸ்துாரி மஞ்சள் துாளையும் சேர்த்துக்கலாம். இதை பூசி குளிச்சா, நாள் முழுவதும் உடலில் மணம் வீசும். இந்தக் கலவையில், அவரவர் விருப்பத்திற்கேற்ப உலர்ந்த ரோஜா இதழ்கள், வேப்பிலை, ஆவாரம்பூ, வெந்தயம், ஏலரிசி மற்றும் அகிற்கட்டை அகியவற்றையும் சேர்த்துக்கலாம்...' என்றார்.

வீட்டிற்கு வந்த பின், இந்த நலங்கு மாவில், அப்படி என்ன இருக்கிறது என்று புத்தகங்களை புரட்டிய போது, கிச்சிலிக்கிழங்கு - வாசனை தரக்கூடியது; தோல் புண் ஆற்றும். கோரைக் கிழங்கு - சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் போக்கும்; பாசிப்பயறு - குளிர்ச்சி; வெட்டி வேர் - பித்தம் தணிக்கும்; கொப்புளம், வேனல் கட்டியை நீக்கும். சந்தனம் - கிருமி நாசினி, வாசனை. கார்போகரிசி - தோல் நோய், படர் தாமரையை நீக்கும். இப்பொடி குளியல், கொசு கடியிலிருந்து தப்பிக்க உதவுமாம்.

இயந்திர உலகில் நாம் சோம்பேறிகளாக, சோப்புக்கு மாறி விட்டோம். சற்று நிதானமாக, பொறுமையாக நேரம் ஒதுக்கி இந்த குளியல் பொடியை தயார் செய்து பயன்படுத்த பழகினால், ஆரோக்கியமாக, 'மணம்' நிறைவாக உலா வரலாம். என்ன... மூலிகை குளியல் பொடி தயாரிக்க கிளம்பிட்டீங்களா?

—எஸ்.ராமு, திண்டுக்கல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us