தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விண்ட் சர்பிங் - கடல் மற்றும் ஏரியில் பலகை ஒன்றின் மீது நின்று, காற்றுக்கு ஏற்றபடி, கைகளால் பாய் மரத்தை லாவகமாக கையாண்டு, தண்ணீரில் சறுக்கி செல்லும் விளையாட்டு! இந்த விளையாட்டை நானும், லென்ஸ் மாமாவும் ஒரு காலத்தில் கற்றுக் கொண்டோம்.

பல ஆண்டுகள் உருண்டோடி விட்டது, 'விண்ட் சர்ப்' செய்து!

திடீரென, 'விண்ட் சர்பிங்' ஆசை தொற்றிக் கொண்டது எனக்கு!

கிழக்கு கடற்கரை சாலையில், கடற்கரையை ஒட்டி, நண்பர் ஒருவரின் தோட்டம் உண்டு. அங்கு, மோட்டார் போட், வாட்டர் ஸ்கூட்டர், விண்ட் சர்ப் போர்ட் போன்றவை உண்டு. அவருடன் தொடர்பு கொண்டு பேசியும் நீண்ட நாளாகி விட்டது.

என்னவென்று அவரிடம் பேச்சை ஆரம்பிப்பது... கடற்கரை தோட்டத்தை ஓசியில் பயன்படுத்திக் கொள்ள எப்படி கேட்பது...

அன்று காலை, நாளிதழில், அவருடைய தொழில் தொடர்பான ஒரு செய்தி வெளியாகியிருந்தது; அதை சாக்காக வைத்து, ஒரு போன் அடித்தேன்.

'அடடே... என்னப்பா... தெய்வமே நேரில் வந்தது போல் இருக்கு...' என, என் குரல் கேட்டு, அவரும், என் தலையில் பெரிய ஐஸ் கட்டியை துாக்கி வைத்தார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், 'வரும் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு வாயேன்... ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற என் வடமாநில நண்பர் ஒருவரை, 'இன்வைட்' பண்ணி இருக்கேன்... அவர் உலக அறிவு, அரசியல், ராணுவம்ன்னு எல்லாத்திலும் கரை கண்டவர். முகமட் (நண்பரின் சமையல்காரர்) இப்போது சைவ சமையலில், 'எக்ஸ்பர்ட்' ஆகிட்டான்... செவிக்கும், வயிற்றுக்கும் உணவு கிடைக்கும்; லென்ஸ் மாமாவையும் கூட்டி வாயேன்...' என்றார்.

பழம் நழுவி, பாலில் விழுந்தது!

அந்த ஞாயிறு, நண்பரின் தோட்டத்தில், ஹரிஹர் பாண்டே என்ற அந்த ரிடையர்ட் மிலிட்டரி ஆபீசரை அறிமுகம் செய்து வைத்தார், நண்பர்.

அறிமுகப்படலத்திற்கு பின் பாண்டே, கடலில் நீச்சலடிக்கச் செல்ல, நானும், லென்ஸ் மாமாவும் அரை டவுசர் மாட்டி ஆளுக்கொரு, 'சர்ப்' போர்டுடன் கடலில் நுழைந்தோம்... மோட்டார் போட்டில், எங்களை வேடிக்கை பார்க்க ஆயத்தமானார், தொழிலதிபர் நண்பர்.

விண்ட் சர்ப்பிங் கலை மறந்து போயிருக்குமோ என பயந்தபடி, போர்ட்டில் நின்று பாய்மரத்தை துாக்கிப் பிடித்து, லாவகமாக கையாண்டேன்... 'சர்' என்று கடலில் பறந்தது போர்ட்... ஒரே உற்சாகம்!

சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒருவர், பல காலம் அதை தொடா விட்டாலும், ஒரு கட்டத்தில் அவசியம் ஏற்படும் போது அக்கலை எப்படி மறந்து போகாமல் இருக்கிறதோ, அதைப் போலத்தான் இதுவும் என எண்ணிக் கொண்டேன்.

ஒருவரை, ஒருவர் முந்தி, வளைந்து, திரும்பி என, அரைமணி நேரம் விளையாடினோம்; படகுக்கு வரும்படி சைகை செய்தார், நண்பர்.

நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில், போர்டை கட்டி விட்டு அமர்ந்தோம். ஐஸ் பாக்சில் இருந்து, 'பட்வைசர்' கேன் பீர் இரண்டை எடுத்து லென்ஸ் மாமாவிடம் நீட்டினார், நண்பர்; எனக்கு ஜில் என்ற, 'கேன்ட்' ஜூசை தந்தார்.

ஹாட் பேக்கில் சூடாக இருந்த சிக்கன் லெக் பீஸ்களை, லென்ஸ் மாமாவிற்கு பரிமாறினார். பின், என்னிடம், 'பாண்டேயிடம் நிறைய பேசு... விவரமான ஆசாமி...' எனக் கூறினார்.

இரண்டு கேனையும், இரண்டு கோழித் தொடைகளையும் முடித்த மாமா, 'வா... போகலாம்....' என்றார்.

அடுத்த அரைமணி நேரமும் சர்பிங்! பின், கரை திரும்பி, ஷவரில் ஒரு குளியல் போட்டு, அங்கே இருந்த நீச்சல் குளத்தில், இக்கரைக்கும் அக்கரைக்குமாக இரண்டு முறை நீந்திய பின், டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தோம்.

வெந்தயக்கீரை கீமா, மட்டன் கோளா, வஞ்சிரம் ப்ரை, சிக்கன் கபாப், ருமாலி ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி, மட்டன் பிரைடு ரைஸ் என, அசத்தி இருந்தார், முகமட்.

எனக்கு சப்பாத்தியும், நவரத்ன குருமா மற்றும் பாலக் பனீர் கொடுத்தார்.

சாப்பிட்டுக் கொண்டே, பாண்டேயிடம் பேச்சுக் கொடுத்தேன்... நேரு கால அரசியல் பற்றியும், காங்கிரஸ் ஆட்சியில், முதன் முதலாக ஊழல் எப்படி ஆரம்பித்தது, ஊழலுக்கு யார் பிள்ளையார் சுழி போட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

லென்ஸ் மாமா இந்தப் பக்கம் செவியே சாய்க்கவில்லை. உணவை வளைத்துக் கட்டியபடி இருந்தார். ரசித்து, ருசித்து, லென்ஸ் மாமா சாப்பிடுவதைப் பார்த்து, பூரித்து நின்றார் சமையல்காரர், முகமட்!

'இந்திரா காந்தியின் கணவர், பெரோஸ் காந்தியும் ஒரு பார்லிமென்டேரியன்தானே... எம்.பி.,யாக இருந்தார் அல்லவா... அவர், பார்லிமென்டில் சிரிக்க சிரிக்க பேசுவதில்

வல்லவர் எனக் கேள்விப்பட்டு இருக்கேன்... அவர் குறித்து நீங்கள் அறிந்தது ஏதாவது கூறுங்களேன்..' எனக் கேட்டேன் பாண்டேயிடம்!

'உண்மை தான்... பெரோஸ், பிலுமோடி, ராஜ்நாராயணன் போன்றோர், பாராளுமன்றத்தில் நக்கலாகப் பேசுவதில் வல்லவர்கள். பெரோஸ், காங்கிரஸ் எம்.பி., தான் என்றாலும், பாராளுமன்றத்தில் ஒரு காங்கிரஸ் மந்திரியைப் பற்றி அடிக்கடி குற்றம் சாட்டிப் பேசுவார்.

'ஒருமுறை பெரோஸ் இப்படி குற்றம் சாட்டி பேசி அமர்ந்த பின், மந்திரி மிகக் கோபத்தோடு, 'பிரதமரின் மடியில் இருக்கும் நாய்க்குட்டி பெரோஸ்... அந்த தைரியத்தில் அது குலைக்கிறது...' என்று காட்டமாகத் தாக்கினார்.

'கொஞ்ச நாள் சென்றபின், ஒரு ஊழல் விவகாரத்தில் மாட்டிக் கொண்டார், அந்த மந்திரி. சபையில், காரசாரமாக விவாதம் நடந்தது; பெரோஸ் பேச வேண்டிய கட்டம் வந்தது.

'அவர் எழுந்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மந்திரியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, கடைசியாக, 'அன்றொரு நாள், இவர், என்னை பிரதம மந்திரியின் மடியில் இருக்கிற நாய்க்குட்டி என்றார். மந்திரி என்பவர் அரசாங்கத்தின் துாண் போன்றவர்; துாணைக் கண்டால் நாய் என்ன செய்யுமோ அதைத் தான் பிரதம மந்திரியின் மடியில் இருக்கும், இந்த நாய்க்குட்டி செய்தது...' என்று ஒரு போடு போட்டு, அமர்ந்தார்...' எனக் கூறி முடித்தார் பாண்டே!

இன்னும் பல, 'அந்த' கால விஷயங்களை பாண்டேயிடமிருந்து அறிந்து, அந்தி சாயும் நேரம் சென்னையை அடைந்தோம்!

இப்போதெல்லாம் குப்பண்ணா ரொம்பவும் பிசி... நாலு இடங்களுக்குச் சென்று சுற்றி, டீ கடை பெஞ்சுக்கு தகவல் சேகரிக்கிறார். ஆளைப் பார்ப்பதே அரிதாகி விட்ட நிலையில், அன்று, அலுவலகத்தில் அவரைக் கண்டேன்.

'ஏதாவது விஷயதானம் செய்யுங்களேன்...' என்றேன்.

'வட மொழியில் ராமாயணத்தை எழுதினார், வால்மீகி. அது போல், கம்பர் எழுதிய ராமாயணம், துளசிதாசர் எழுதிய ராமாயணம் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பாய்... ஆனால், தெலுங்கில், ராமாயணத்தைப் பாடியவர் யார் தெரியுமா?' என்று கேட்டார்.

'அல்லசாணி பெத்தண்ணா, நந்திதிம்மண்ணா - இப்படி யாராவது இருக்கும்!' என்றேன்.

'ஊஹும்...'

'கொண்டப்பள்ளி ராவ், குடிவாடு ரெட்டி என்று யாராவது...'

'சும்மா அளக்காதே... தெலுங்கிலே ராமாயணத்தைப் பாடியது, 'மொல்ல' என்ற பெண்; அதுவும் சைவ மங்கை. வைணவ இலக்கியமான ராம காதையைப் பாடி வைத்தாள். இந்தியாவில் பல மொழிகளில் ராமாயணம் பாடப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஒரு பெண் பாடியது தெலுங்கு, 'மொல்ல ராமாயணம்' மட்டும் தான்...' என்றார்.

குப்பண்ணா மேற்கொண்டு சொன்னது... கடந்த '16ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவள், மொல்ல. நெல்லுார் ஜில்லா, கோபவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவள். குயவர் குலத்தைச் சேர்ந்தவள் என்பது கர்ண பரம்பரைக் கதை. இவளுக்கு முன், தெலுங்கில் காவியம் இயற்றிய பெண்மணி யாருமில்லை.

'படிப்பிலும், கவிதை இயற்றுவதிலுமே கவனம் செலுத்தினாள், மொல்ல. அதனால், திருமணம் செய்து கொள்ளவில்லை. எப்போதும் சிவபூஜையும், செய்யுள் எழுதுவதுமே வேலையாக இருப்பவளை ஊரார் கேலி பேசக் கேட்க வேண்டுமா... தெருவில் போகும்போது வம்பர்கள் ஏதாவது நையாண்டி பேசுவர்.

'ஒருநாள், எங்கேயோ போய், வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், மொல்ல. அவள் கையில் கோழிகள் இருந்தன; வழக்கம் போல் வழியில் வம்பர் கூட்டம் ஒன்றைத் தாண்டி வரவேண்டி இருந்தது. அவர்களில் ஒருவன் சிலேடையாக, 'மொல்லா மொல்லா... பெட்ட இஸ்தாவே?' என்று கேட்டான். 'பெட்ட' என்றால் பெட்டைக் கோழி; அவள் கையில் கோழி இருக்கிறதல்லவா... 'பெட்டையைக் கொடுக்கிறாயா...' என்று ஒரு பொருள்; 'நீ பெண்டாட்டி ஆகிறாயா?' என்பது மற்றொரு பொருள்.

'மொல்ல, கோபிக்கவோ, நிற்கவோ இல்லை. அவளும் சிலேடையாக, ஆனால், நிதானமாக, 'நீரு அம்மனுரோய்...' என்று சொல்லி, போய் விட்டாள். 'உனக்கு விற்க மாட்டேனடா...' என்பது ஒரு பொருள்; 'உனக்கு நான் தாயடா...' என்பது மற்றொரு பொருள். கேட்டவன், வாயடங்கிப் போனான்.

'இவளுடைய ராமாயணம், வால்மீகி ராமாயணத்தை ஒட்டியதே! நாரதரிடம், வால்மீகி கதை கேட்பது போல் அமைந்திருக்கிறது. தெலுங்கில், பாஸ்கரா, ரங்கநாதர் முதலியோர் எழுதிய ராமாயணங்கள் இருந்த போதிலும், பெரும்பாலான மக்கள் மொல்ல ராமாயணத்தையே படிக்கின்றனர்...' எனக் கூறி விடை பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us