PUBLISHED ON : மார் 04, 2018

* கே.சம்பத், வந்தவாசி: போலீசாருக்கு யோகாசனப் பயிற்சி அளித்தால் தொப்பை குறையுமென்று கருதுகிறீர்களா?
தொப்பை மட்டுமல்ல, அவர்களிடம் உள்ள மனிதாபிமானமற்ற தன்மையும் குறையும். இத்துறை முதல்வரிடம் தான் உள்ளது... முதல்வர் மனது வைத்தால், பேர் கெட்டு, சீர் கெட்டு போய்விட்ட இத்துறையை, யோகா மூலம் போலீசாரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி, காப்பாற்ற முடியும்!
ஜே.ராஜா, திருவண்ணாமலை: 'காதலியே கதி' என, சுற்றிக் கொண்டிருக்கும் என் நண்பனை திருத்துவது எப்படி?
காதலி கழுத்தில் மூன்று முடிச்சு போட வையுங்கள்!
* டி.நிர்மலா, சென்னை: நாம் சாப்பிடும் உணவு வகைகள், உடலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பவையா?
அனேகமாக இந்தியர்கள் அனைவரும் விஷத்தைத் தான் சாப்பிடுகிறோம். பயிர் பாதுகாப்புக்கு தெளிக்கப்படும் மருந்துகள் யாவும் விஷம் தானே... மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளில், 55 சதவீதத்தை நாம் இன்னும் பயன்படுத்தி வருகிறோம். அவர்களோ, இப்போது, இயற்கை உரம், பூச்சி கொல்லிகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்!
ஆர்.பிரகாசம், திண்டுக்கல்: தமிழ் தெரிந்தும், ஆங்கிலத்தில் பேசும் தமிழர்களைப் பற்றி...
இவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை... அதே நேரம், எரிச்சலும் வருகிறது.
டி.வாசுதேவன், பண்ருட்டி: என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது; என் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. இதை சாக்காக வைத்து, என் மாமியார் அடிக்கடி வந்து, 'டேரா' போடுகிறார். இவருக்கு என் குடும்பச் சூழ்நிலையை நாசூக்காக எப்படி புரிய வைப்பது?
இது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படும் விஷயங்களில் நாள், நேரம், நாசூக்கு பார்ப்பது வீண். நேரடியாகவே விஷயத்தை, மாமியாரிடம் புட்டு புட்டு வைத்து, பண உதவி கேட்டுப் பாருங்கள்... உங்கள் ஊர் மற்றும்- வீடு இருக்கும் திசை பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்!
* எஸ்.ஜானகி, கடலுார்: சமூக ஒழுக்கக் கேட்டுக்கு முக்கியக் காரணம் அரசியலா... சினிமாவா?
விஷுவல் மீடியாக்களான சினிமாவும், 'டிவி'யும் தான் காரணம். உலகிலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் ஜப்பானைக் கூட, 'டிவி' விட்டு வைக்கவில்லை. 'டிவி'யில் படம் பார்த்த பாதிப்பில், 15 வயது சிறுவன் ஒருவன், தன் பள்ளியில் படித்த, 11 வயது சிறுவன் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
எஸ்.ராம், நாகப்பட்டினம்: மனிதனை விட மிருகங்கள் உயர்ந்தது என்கிறேன்...
ஏற்றுக் கொள்கிறேன்... அவைகளில் தான், 'உக்காந்து' கொட்டிக் கொள்ளும் ஜென்மங்கள் இல்லை!
