/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்!
/
தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்!
PUBLISHED ON : ஜூலை 14, 2013

உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,' என்ன வாழ்க்கை இது...பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துடலாமா...' என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பார்வையற்ற பத்து வயது சிறுவன், 'எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க...' என்று சொல்லியபடி, அடுத்தடுத்த சாதனைகள் தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று சொல்லத் தோன்றும். அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்.
கோவை-பாலக்காடு எல்லையில் வடகாடு என்ற இடத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதியருக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து, பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட். பிறந்த போதே பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தான்.
பார்வை குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை, வந்த விலைக்கு விற்றுவிட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு குடி வந்தனர்.
பார்வைக் குறைபாடு சிகிச்சைக் காக பலரையும் பார்த்ததில், கையிருப்பு கரைந்ததே தவிர, பலனேதும் இல்லை. முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட். பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளியில் சேர்த்தனர்.
பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் பார்வை இல்லாத சபரியும் சேர்ந்து படித்தான். தற்போது ஆறாம் வகுப்பு படித்து வரும் சபரி, எப்போதும் முதல் ஐந்து,'ரேங்க்'குள் வாங்கி விடுவான். கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி விட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க, எழுத கற்று வருகிறான்.
ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ, என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.
அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து, விவேகானந்தரின் புகழ் பெற்ற அமெரிக்கா சிகாகோ பேச்சை, தன் மழலைக் குரலில் அவன் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும், எழுந்து நின்று கைதட்டாமல் இருக்க மாட்டார்கள்.
விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில், முதல் இடத்தை பிடித்த சபரிக்கு, தமிழக முதல்வர் கையால் பதக்கம் அணிவிக்கப் பட்டு பாராட்டும் கிடைத்துள்ளது.
கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், 'உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்,' என்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டான் சபரி.
சபரியின் ஆசை, அப்துல்கலாமிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் ஒரு முறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான். சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு, 'சபரி என்னுடைய கோவைத்தோழன்' என்று எல்லாரிடமும் சொல்லி சந்தோஷப் பட்டுக்கொண்டார்.
சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன் றும். ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக் கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத் கீதையின் ஸ்லோகத்தை அச்சுப் பிசகாமல் அப்படியே சொல் கிறான். முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளா விட்டாலும், சபரி பாடி கேட்டால், கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் அவனை, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார்
சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள். கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ் தான் போனில் பேசுவார். அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்து சொல்லுங்கள். பின், அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வர். தொடர்புக்கு: 9942146558.
***
எல். முருகராஜ்