தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 15, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** ம.ஜோதி, திருத்தணி: வருமானத்திற்கு ஏற்ப செலவை குறைக்க வேண்டும் என்கிறார் என் கணவர். செலவுக்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்கிறேன் நான். எது சரி?

உங்கள் கணவர் சொல்வது தான் சரி; இந்த கிணற்றில் எவ்வளவு ஊறும், எவ்வளவு தான் இறைக்க முடியும் என்பது அவருக்கே தெரியும்! மாதம், 25 ஆயிரம் ரூபாய் நீங்கள் செலவு செய்ய ஆசைப்படுகிறீர்கள்; அவருக்கு அதைக் கொடுக்க ஆசை இருந்தாலும், சம்பாதிக்க முடிய வேண்டாமா?

***

*பீ.பிரான்சிஸ், கருவம்பாளையம்: நகரத்தில் உள்ளவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக வருகிறதே ஏன்?

கொழுப்பு! கொழுப்பு சத்து மிகுந்த உணவை, நகர வாழ் மக்கள் அள்ளி அள்ளி சாப்பிடுவதாக, டில்லியில் உள்ள, 'நேஷனல் நியூட்ரிஷியன் மாஸ்ட்டரிஸ் பீரோ' என்ற ஆய்வு கூறுகிறது. கிராமத்து மக்களின் உணவில், ஒரு கிராம் கூட கொழுப்பு இல்லை எனவும், நகர வாழ், 'மிடில் இன்கம்' மக்களின் ஒவ்வொரு உணவிலும், 61.74 கிராம் கொழுப்பு இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. கொழுப்பு அதிகமானால் மாரடைப்பு தானே!

***

*ஆர்.பாஸ்கரன், தேவராயபுரம்: எந்த முன்னேற்ற மும் தெரியவில்லையே என் வாழ்க்கையில்...

இப்படி நினைத்து இடிந்து போய் உட்கார்ந்திருந்தால் முன்னேற்றமே வராது! வாழ்க்கையில் முன்னேற, வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வாய்ப்புகளை, புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

***

** ஆர்.மணி, கொளத்தூர்: மத்திய அரசில், ரயில்வே துறைக்கு மட்டும் ஏன் தனி பட்ஜெட் போடுகின்றனர்?

அரசின் மிகப் பெரிய துறைகளில் இது தலையாயது. ரயில்வே மந்திரியாவதை, மிகப் பெரிய கவுரவமாக கருதுகின்றனர் அரசியல்வாதிகள். 'என்ஜின் டிரைவர் வரவில்லை; கார்டு லீவு!' என என்றாவது, ஏதாவது ரயில் ஓடாமல் இருந்திருக்கிறதா? மத்திய அரசு ஊழியர்களில், ஐந்தில் இருவர், ரயில்வே ஊழியர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

***

*ஆர்.கல்யாண சுந்தரம், ஆத்திக்குளம்: பயங்கரவாதிகளில் இந்து, இஸ்லாமியர் தவிர, கிறிஸ்துவ பயங்கரவாதிகள் உண்டா?

இருக்கின்றனர்! அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற சில நாடுகளில், கிறிஸ்துவ பயங்கரவாதிகள் உண்டு! இப்படிப்பட்டவர்களில் சிலர், கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களாக, மன்னராட்சிக்கு எதிரானவர்களாக உள்ளனர். இன்னும் சிலர், கத்தோலிக்க பிரிவு ஆதரவாளர்களாகவும், புராட்டஸ்டண்ட் பிரிவை எதிர்க்கும் பயங்கரவாதிகளாகவும் உள்ளனர்.

***

* என்.கவிதா, திருப்பரங்குன்றம்: நம் அரசு தீட்டும் திட்டங்கள், 90 சதவீதம் வெற்றி அடைவதில்லையே...

வெற்றி பெற வைக்க வேண்டிய திறமையோ, ஆர்வமோ அதிகாரிகளிடம் இருப்பதில்லை; திட்டத்தில் இருந்து, தாம் எவ்வளவு அடிக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பதால், தோல்வியைத் தருகின்றன!

***

* ஆர்.முரளி, புதுமாகாளிப்பட்டி: மனதால் ஒன்றுபட்ட காதல், திருமணமாய் கனிய, ஜாதக பொருத்தம் ஒன்று மட்டுமே தடையாய் இருக்கும் பட்சத்தில், நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள்?

மனதிற்குத்தான்! ஜாதகம், ஜோசியம், 16க்கு 10 பொருத்தம் உள்ளது என்றெல்லாம் கூறி முடிக்கப்படும் திருமணங்கள் எல்லாம், 'சக்சஸ்புல்' என்று சொல்லிவிட முடியுமா? தகுதியுடைய மணமகன், தன் காலில் நிற்கக் கூடிய வசதி உடையவர் என்றால், ஜாதகத்தை காரணம் கூறுபவர்களை அலட்சியப்படுத்தி விடலாம்!

***

*ஆ.விஜயலட்சுமி, ஆர்.ஏ.புரம்: அரிதான உலோகமான பிளாட்டின நகைகள் அணிய, பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனரா?

இல்லை! பிளாட்டினம் பற்றிய அறிவு இன்னும் பெண்களிடையே பரவவில்லை. யாராவது பிளாட்டின நகை அணிந்திருந்தால், 'என்ன வெள்ளிக்கு மாறிட்டே?' என்றே கேட்கப்படுவதால், பிளாட்டினம் பிடிக்க, நாள் பிடிக்கும்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us