PUBLISHED ON : ஏப் 15, 2012

பாரதியாரை முதன் முதல் சந்தித்ததை, வ.உ.சிதம்பரம் நினைவு கூர்கிறார்...
அது, கடந்த 1906ம் ஆண்டின் ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது, தூத்துக்குடியிலிருந்து, சென்னை சென்றிருந்தேன். நான் தூத்துக்குடியில், வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தேன்.
சென்னை திருவல்லிக்கேணியில், சுங்குராம செட்டித் தெருவில், என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் செல்லும் வழியில், ஒரு பெரிய வீடு இருந்தது. அதுதான், 'இந்தியா' பத்திராதிபர், ஸ்ரீமான் திருமலாசாரியார் வீடு என்று தெரிந்து கொண்டேன்.
ஒரு நாள், மாலை நாலு மணிக்கு, அங்கு பத்திரிகை ஆசிரியரை பார்ப்பதற்காக, அப்பெரிய வீட்டிற்குள் புகுந்தேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில், 'அவர் மாடியிலே இருக்கிறார்...' என்றனர்.
நான் மாடிக்குச் சென்றேன். அங்கு ஒரு அய்யங்கார் அமர்ந்திருந்தார். அவர் இளம் வயதினராகக் காணப்பட்டார். அவர்தான், திருமலாசாரியாராக இருக்க வேண்டும் என்று நினைத்து, அவரைக் கேட்டேன்.
'ஆமாம்...' என்றார். அவரிடம் என் ஊரும், பேரும் சொன்னேன். அவர் மாடியின் உள் அரங்கை நோக்கி, 'பாரதி... உங்கள் ஊரார் ஒருவர் உம்மைத் தேடி வந்திருக்கிறார்...' என்று, உரக்கக் கூறினார். உடனே உள்ளிருந்து இருவர் வந்தனர்.
முண்டாசுக் கட்டுக்கும், முறுக்கு மீசைக்கும் பெயர் பெற்றது, எங்கள் ஜில்லா. எனவே, தலைப்பாகைக் கட்டைப் பார்த்தவுடனே, அவர் தான் பாரதியார் என்று தெரிந்து கொண்டேன்.
முறைப்படி, 'இவர்தான் இந்தியா ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி...' என, பாரதியாரைச் சுட்டிக் காண்பித்து, அறிமுகப்படுத்தினார். பாரதியார் என் ஊரையும், பெயரையும் பற்றி உசாவினார்.
'நான், ஒட்டப்பிடாரம் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை மகன், சிதம்பரம் பிள்ளை...' என்றேன்.
'ஓ அப்படியா... பிள்ளைவாளின் பிள்ளையாண்டானா தாங்கள்... உட்காருங்கள்...' என்று கூறி, அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். அவரும், மற்றவரும் வேறு இரு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர்.
பாரதியார் ஆரம்பித்தார்...
'<உங்கள் தகப்பனார், என் தகப்பனாரின் அத்யந்த நண்பர்... அவாளை எனக்கு நன்னாத் தெரியும்... உங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்...' என்றார் பாரதியார். எங்கள் ஜில்லாவிற்கே, உரித்தான தமிழ் பாணியில் பேசினார் அவர். தேச காரியங்கள் பற்றிய பேச்சுக்களே, எங்கள் அளவளாவுதலில் தலைமை வகித்தன.
இந்த முதல் சந்திப்பும், பேச்சுமே என்னை சோழனாகவும், அவரை கம்பனாகவும் நான் நினைக்கும்படி செய்தது.
என்னை கடற்கரைக்கு அழைத்தார் பாரதியார்.
நால்வரும், திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று, வெகு நேரம் அரசியல் விஷயங்களைப் பற்றி, பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தோம். என் உள்ளத்தில், மின்மினிப் பூச்சி போன்று மின்னிக்கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு, விளக்கு போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. இதே சமயத்தில், கடற்கரை மின்சார விளக்குகளும், 'பளிச்' சென ஒளிவிட்டு எரிய ஆரம்பித்தன.
'பிள்ளைவாள்... சக்தி துணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும் போது, நம் முன் ஒளியையும் பிரகாசிக்கச் செய்தது, நம் அன்னை பராசக்தியே... அவள் வாழ்க... இனி, நம் முயற்சி வெற்றி, எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான, சுப சகுனம் இது தான். வாழி அம்மை... சக்தி வாழி...' என, ஆவேசம் வந்தவர் போல பேசினார் பாரதி.
அவர் முண்டாசுக் கட்டின் முந்தானைத் துணி, காற்றில் வெற்றிக் கொடி போல, படபடவென்ற சப்தத்துடன் பறந்து கொண்டிருந்தது. கடல் அலை பேரிசைத்து விட்டது. உ<ள்ளம் நிரம்பிய மகிழ்வோடு, நாங்கள் திரும்பினோம்.
***
முதல் தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவரான ராஜமய்யர், வத்தலகுண்டில் பிறந்தவர். தம், 26வது வயதிலேயே காலமானார். ராஜமய்யர் எழுதிய ஒரே நவீனம் - 'கமலாம்பாள் சரித்திரம்!'
விவேகானந்தர் தம் அமெரிக்கப் பயணத்துக்குப் பின், சென்னையில், 'பிரபுத்த பாரதா' என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் துவக்கினார். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக, விவேகானந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுரவத்தை அடைந்தார் ராஜமய்யர்.
பிரபுத்த பாரதத்தில், வெளிவந்த, 'வேதாந்தம், ராஜாதி ராஜன்' எனும் கட்டுரைகளுக்காக, அவர் மீது ராஜதுரோகக் குற்றம் சாட்டினர். அரசு பிடிவாரன்ட் அனுப்பியது; போலீசார் வந்தனர்.
ஆனால், வாரன்ட்டை, பெறுவதற்கு அவர் தான் இல்லை. ஆம்... ராஜமய்யர் இரண்டு நாட்களுக்கு முன்னரே காலமாகி விட்டார்.
***
நடுத்தெரு நாராயணன்
