PUBLISHED ON : ஏப் 15, 2012

தேச ஒற்றுமை ஆல்பம்!
இசையமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர் என்பவர், இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையிலான தேச ஒற்றுமை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆல்பத்தில், விக்ரம், மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, விவேக் ஓபராய், சுதிஷ், மம்தா, லட்சுமிராய் உள்ளிட்ட பல நடிகர்கள்- நடிகையர் இணைந்து பின்னணி பாடியுள்ளனர்.
— சினிமா பொன்னையா.
ப்ரியாமணி தவிர்த்த சர்ச்சைக்குரிய வேடம்!
நிழல் உலக தாதா அபுசலீம் வரலாறை மையமாக வைத்து, இந்தியில் ஒரு படம் தயாராகிறது. இதில், அபுசலீமின் காதலியான மோனிகாபேடி வேடத்தில் நடிக்க, இந்தி நடிகையர் யாரும் முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து, அந்த வேடத்தில் நடிக்க, தமிழ் நடிகை, ப்ரியாமணியை தொடர்பு கொண்டனர். அவரும், சர்ச்சைக்குரிய வேடம் என்பதால், 'கால்ஷீட் இல்லை' என மறுத்து விட்டார். அதனால், இப்போது அனுஷ்கா, சமீரா ரெட்டி போன்ற நடிகையரிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும், மெழுகுண்டையும்!
— எலீசா.
அனுஷ்காவுக்கு சண்டை பயிற்சி!
செல்வராகவன் இயக்கும், இரண்டாம் உலகம் படத்தில், அனுஷ்காவுக்கு இரண்டு வேடம். அதில் ஒன்று, மலைவாழ் பெண் வேடம். இது, ஆக்ஷன் கேரக்டர் என்பதால், சீன பயிற்சியாளர் ஒருவரை வரவழைத்து, அனுஷ்காவுக்கு கராத்தே, குங்பூ ஆகிய பயிற்சிகளை கொடுத்துள்ளார் செல்வராகவன். அதனால், 'அருந்ததிக்கு பின், நான் நடிக்கும் அதிரடிப்படமாக இப்படம் எனக்கு அமையும்...' என்கிறார் அனுஷ்கா. இட்டாருக்கு இட்ட பலன்!
— எலீசா.
மம்மூட்டியின் எதிர்ப்பு!
மலையாளத்தில், மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனாஸ் போன்ற நடிகைகளை அழைத்து பேசினர். ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம், மம்மூட்டியின் சம்பளத்தை விட அதிகமாக இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மம்மூட்டி, 'என்னுடன் நடிக்கும் நடிகைக்கு, என்னைவிட அதிகம் சம்பளம் கொடுப்பதா?' என்று எதிர்ப்பை காட்டியதில், மேற்படி நடிகைகளை ஏறக்கட்டி விட்டு, இப்போது ஷார்மியை அப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
— சி.பொ.,
திவ்யாவுடன் மோதும் ஹரிப்பிரியா!
முரண் படத்தில், சேரனுக்கு ஜோடியாக நடித்த ஹரிப்பிரியா, அதன்பின், தமிழில் நிலையான இடம் பிடிக்க, சில மாதங்களாக சென்னையிலேயே முகா மிட்டிருந்தார். ஆனால், எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லை. அதனால், இனி சென்னை பக்கமே வர மாட்டேன் என்று சொல்லி, பெங்களூருக்கே திரும்பி விட்ட ஹரிப்பிரியா, போன வேகத்திலேயே திவ்யா ஸ்பந்தனாசுக்கு செல்லயிருந்த இரண்டு கன்னட படங்களை, தடாலடியாக கைப்பற்றி விட்டார். இதனால், இவ்விரு நடிகைகளுக்கு மிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. உனக்கும் பெப்பே; உங்கப்பனுக்கும் பெப்பே!
— எலீசா.
* தான் இயக்கி நடித்த முதல் படமான சுப்ரமணியபுரத்திலேயே தயாரிப்பாளராகி விட்டார் சசிகுமார். அதேபோல், எங்கேயும் எப்போதும் படத்தில் தயாரிப்பாளரானார் ஏ.ஆர். முருகதாஸ். இவரைத் தொடர்ந்து, மெரினா படத்தில் தயாரிப்பாளரானார் இயக்குனர் பாண்டியராஜ். அவருக்குப் பின் இப்போது, தேசிய நெடுஞ்சாலை படத்தை தயாரிக்கிறார் வெற்றிமாறன். இந்த வரிசையில் இயக்குனர் சுசீந்திரனும், விரைவில் ஒரு படத்தை தயாரிக்கும் முடிவில் உள்ளார். இப்படியாக, தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள், தயாரிப்பாளராகிக் கொண்டிருக்கின்றனர்.
இரண்டாம் இடத்தில் இளையராஜா!
தற்போது, தமிழ் சினிமாவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமம் தான், அதிக விலைக்கு செல்கிறது. இவருக்கு அடுத்த இடத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இருக்கிறார். இந்நிலையில், தற்போது இளையராஜா இசையமைத்துள்ள, நீதானா என் பொன் வசந்தம் படத்தின் ஆடியோ உரிமம், ஒரு கோடி ரூபாய்க்கு சென்றுள்ளது. இது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை விட அதிக தொகை. அந்த வகையில், ரஹ்மானுக்கு அடுத்த இடத்துக்கு வந்துள்ளார் இளையராஜா. ஹாரிஸ் ஜெயராஜ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா.
வருகிறார் நயன்தாரா!
பில்லா-2 படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க அழைத்த போது மறுத்து விட்ட நயன்தாரா, இப்போது பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் நடிக்க, 'கமிட்'டாகி உள்ளார். இதில், ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து, கதாநாயகியாக மட்டுமே நடிப்பது என்ற முடிவிலும் இருக்கிறார் நயன். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட!
— எலீசா.
அவ்ளோதான்!
