தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*வி.கார்த்திகேயன், பாளை: அறிவு, தன்மை, புரட்சி, மனிதாபிமானம், பணிவு போன்ற சொற்களின் கலவை தான் உங்கள் பெயர் என்கிறானே, என் நண்பன்...

உங்கள் நண்பருக்கு கோடி நன்றி! பெயர் காரணம் கேட்டு எழுதுபவர்களுக்கு ஏற்ற பதில் சொல்ல உதவி இருக்கிறாரே!

***

** ஜே.டேவிட், கோவில்பட்டி: எப்படிப்பட்டவர்களை நம்பக் கூடாது?

'நீங்க நல்லா இருந்தா அதுவே போதும்...' என்கின்றனரே... அவர்களை நம்பவே கூடாது! 'உங்களால், எனக்கும் நன்மைகள் சில கிடைக்கும் என்பதால் தான் உங்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன்...' என நேரடியாகச் சொல்கின்றனரே... அவர்களை முழுமையாக நம்பலாம்!

***

*எல்.குணவீரபாண்டியன், காரைக்குடி: மனிதனுக்கு பணம் முக்கியமா? குணம் முக்கியமா?

முதலாவது வந்த உடன், இரண்டாவது சென்று விடக் கூடாது என்பது தான் முக்கியம்!

***

*சே.பழனி, திருத்தணி: தங்களிடம் கேள்வி கேட்கும் வாசக, வாசகியர் எதைப் பற்றி அதிகம் கேட்கின்றனர்?

அவ்வப்போது பத்திரிகையில் பரபரப்பாக வெளியாகும் செய்திகளை அடிப்படையாக வைத்தே, 80 சதவீதம் கேள்விகள் வருகின்றன!

***

*மு.ஆனந்தன், காஞ்சிபுரம்: மனைவி அடித்தால் வலிக்காது என்கின்றனரே... உண்மையா?

ப்ளீஸ் வெயிட்... லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்கிறேன்!

***

*டி.ஹெப்சிபா மேரி, திருச்சி: ஒருவரோடு ஒருவர் மனதால் வாழ்ந்து, பின், வேறு ஒருவரோடு எப்படி வாழ முடியும்?

தட் இஸ் லைப்... அதுதான் வாழ்வின் நிதர்சனம் - என்பதைப் புரிந்து கொள்கின்றனர். வாழ்ந்தாக வேண்டுமே!

***

*சி.மருது, கோவை: சீன நாட்டுப் பொருட்கள், குறைந்த விலையில் நம்மூரில் கிடைக்க ஆரம்பித்து விட்டனவா?

ஓ... குழந்தைகளின் விதவிதமான விளையாட்டு பொம்மைகள், சென்னையில் வெள்ளம் போல குவிய ஆரம்பித்து விட்டன. பேட்டரியில் இயங்கும் ரயில் - புகை, கூ கூ சவுண்டுடன், விமானம் — அதன் ஒலியுடன்... குதித்து சென்று, திரும்பிப் பார்க்கும் குதிரை... 100 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கின்றன. கேரளாவில், 'பிரான் சைஸ்' கேட்டு விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன!

***

** டி.இசக்கிராஜா, தேனி: உலகில் மிகவும் கடினமானது, சுலபமானது எது?

ரொம்பவும் எளிதானது உபதேசம் செய்வது; கடினமானது, செய்த உபதேசப்படி தானும் நடப்பது!

***

*ஏ.ராஜ்குமார், சிவகாசி: எக்கச்சக்கமாக எழுதி அனுப்பினாலும், ஏதோ ஒரு படைப்பை எப்போதோ பத்திரிகைகள் வெளியிடுகின்றன. பத்திரிகைகள் செய்வது நியாயமா?

ஒரே ஒரு சிவகாசி ராஜ்குமார் மட்டும் எழுதி அனுப்பினால், அவரது அனைத்து படைப்புகளையும் வெளியிட முடியும்... ஆனால், மதுரை ரஞ்சனிப்ரியன், திருச்சி மதுக்குமார், வேலூர் சஞ்சீவ பாரதி, பாளை கோவிந்தராஜன் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிக் குவிக்கின்றனரே... அனைத்தையும் வெளியிட, வாரம், 120 பக்கம் அல்லவா வேண்டும்!

***

*எம்.நித்யா, புதுவை: இப்போதைய குழந்தைகள் அனைத்தும் புத்திசாலிகளாக இருப்பது எதனால்?

'எக்ஸ்போஷர்'- ஏராளமாக அறிந்து கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளால்... கம்ப்யூட்டர், இன்டர்நெட், உருப்படியான, 'டிவி' நிகழ்ச்சிகள், பத்திரிகைகள், புத்தகங்கள் என, நம் தாத்தா - பாட்டி, அப்பா - அம்மா காலத்தில் கிடைக்காத வாய்ப்பு, இப்போதைய பொடிசுகளுக்கு தாராளமாகக் கிடைக்கிறது... புத்திசாலித்தனம் வளர்கிறது!

***

*எஸ்.சமுத்திரம், செய்யாறு: கோடை சுற்றுலாவுக்கு எந்த நாட்டைத் தேர்ந்தெடுப்பீர்? ஏன்?

சந்தேகம் இல்லாமல், ஸ்விட்சர்லாந்து தான்! இத்தாலி நாட்டின் எல்லையை ஒட்டி, ஸ்விஸ்சில் அமைந்துள்ள, 'வில்லார்ஸ்' என்ற குக்கிராமம்... பூலோக சொர்க்கம் என்றே சொல்லலாம். தூசி, குப்பை, புகை, புழுதி, சப்தம் எதுவுமே கிடையாது... திரும்பும் இடங்கள் எல்லாம் பச்சைப் பசேல்... ம்... அடுத்த சான்ஸ் எப்பவோ... நீங்க ஒரு முறை போய் வாருங்களேன்!

***

*கே.முரளிதரன். மதுரை: நான் முன்னேற துடிக்கிறேன். என்னிடம் என்ன 'குவாலிட்டி' எல்லாம் இருக்க வேண்டும்?

யானையின் வலிமை, சிங்கத்தின் துணிவு, ஒட்டகத்தின் பொறுமை, மீனின் துள்ளல், நாயின் மோப்பம், எறும்பின் சுறுசுறுப்பு, தேனீயின் உழைப்பு, கொக்கின் விழிப்பு, புலியின் பாய்ச்சலும் இருந்தால், உங்களைக் கையிலே பிடிக்க முடியாது... அவ்வளவு உயரத்திற்கு சென்று விடலாம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us