
*கா.தமிழ்ச்செல்வன், திருப்பூர் : மனைவி அடித்தால் வலிக்காது என்கிறார்களே... உண்மையா?
ப்ளீஸ் வெயிட்... லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்கிறேன்!
***
*எல்.ராஜேஸ்வரி, அரசரடி : நம்ம சமூகத்தில், ஒரு மெடிக்கல் ஸ்டூடண்டுக்கோ, இன்ஜினியர் ஸ்டூடண்டுக்கோ கிடைக்கும் மதிப்பு, ஒரு, 'லா' ஸ்டூடண்டுக்கு கிடைப்பதில்லையே...
இப்போது, ஸ்டூடண்ட் ஸ்டேஜில் கிடைக்கும் மதிப்பெல்லாம் வெறும், 'இல்யூஷன்!' ஐந்து வருட படிப்பை முடித்து, களத்தில் குதிக்கும்போது, திறமையினால் கிடைக்கும் புகழ், பணம், மதிப்பு இருக்கிறதே... அது நிரந்தரம்! மெடிசின் மற்றும் இன்ஜினியரிங் முடித்த பலர், மாதம், 4000த்துக்கும் 5000க்கும் கஷ்டப்படுவது எனக்குத் தெரியும்! தற்காலிக மாயையில் மயங்காமல், உண்மையான திறமையை வளர்ப்பதில் அறிவைச் செலுத்துங்கள்.
***
** எச்.முரளிதரன், மதுரை : அனுபவம் இல்லாமல் செய்யும் தொழில் எது?
சந்தேகமே இல்லாமல் அரசியல்தான். இதற்கு அனுபவம் வேண்டாம். ஆனால், லாபம் உண்டு என்று நிரூபித்து வருகின்றனர் நம் அரசியல்வாதிகள்.
***
*என்.ஸ்ரீவித்யா, விருகம்பாக்கம் : மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?
கணவன் கையை எதிர்பார்க்காத பொருளாதார சுதந்திரம் அடையும் பெண், துணிச்சல் பெறுகிறாள்;அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், 'பினான்ஷியலி இன்டிபென்டண்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை!
***
**ஜி.கவிதா, கடலூர் : விளம்பரங்கள் இல்லை என்றால், பத்திரிகைகள் என்ன செய்யும்?
அப்படியே விலையை டபுள் ஆக்கி விடும். விளம்பர வருமானம் இருப்பதால் தான் விலையை, 'சப்சிடைஸ்' செய்து, வாசகர்கள் சுமையைக் குறைக்க முடிகிறது!
***
*ஆர்.தனபால், நங்கநல்லூர் : தங்களிடம் கேள்வி கேட்கும் வாசக, வாசகியர் எதைப்பற்றி அதிகம் கேட்கின்றனர்?
அவ்வப்போது, பத்திரிகையில் பரபரப்பாக வெளியாகும் செய்திகளை அடிப்படையாக வைத்தே, 80 சதவீதம் கேள்விகள் வருகின்றன!
***
*எல்.கோமதி, கூட்டேரிப்பட்டு: ரூபாய் நோட்டுகள் அச்சிடும் காகிதம் இப்போதெல்லாம் தரமாக உள்ளதே... அவை இந்தியாவிலேயே தயார் செய்யப்படுபவையா?
இல்லை! வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது! பிரான்ஸ், ஸ்வீடன், இங்கிலாந்து, நெதர்லாந்து, உக்ரேன், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. ரூபாய் நோட்டு அச்சிட, பல ஆயிரம் டன் காகிதம் இறக்குமதியாகிறது!
***
*ஜெ.அபிராமி, விழுப்புரம் : பனிப் பிரதேசத்தில் வாழும் மக்களை, 'எஸ்கிமோ' என்று அழைக்கின்றனரே... அதன் பொருள் என்ன?
'எஸ்கிமோ' என்றால், பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பொருள்; இது செவ்விந்திய மொழி. இவர்களுக்கு இப்பெயரைக் சூட்டியவர்கள் ஐரோப்பியர்கள்!
***
**கண்மணி குணசேகரன், வல்லம் : நீர், காதலித்தவரா? காதலித்துக் கொண்டிருப்பவரா? காதலிக்கப் போகிறீர்களா?
காதலித்துக் கொண்டிருப்பவன்... என் நாட்டை, என் வேலையை, என் நண்பர்களை! ரசித்துக் கொண்டிருக்கிறேன்... காதலித்துக் கொண்டிருப்பவர்களின் அவஸ்த்தையை, இன்பத்தை, துக்கத்தை, சோகத்தைக் கேட்டு, பார்த்து! மற்றபடி நீர் கூறும், 'வம்பில்' சிக்கிக் கொள்ள நானொன்றும் விவரமில்லாதவன் இல்லை!
***

