sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 21, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு —

நான் 24 வயது பட்டதாரி பெண். என் மாமா வேறொரு பெண்ணை விரும்பி, பெற்றவர்களின் விருப்பப்படியும், என் பிடிவாத குணத்தாலும் அவருடைய அக்கா பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கல்யாணத்திற்கு முன் என்னிடம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினார். ஆனால், அவர் மேல் உள்ள நம்பிக்கையில் நான் அதை மறுத்து, 'உங்களைத் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று சொல்லிவிட்டேன். என் கணவர், வெளியூரில் கல்லூரியில் வேலை பார்ப்பவர்; அவரிடம் படிக்கும் மாணவிதான் அந்தப் பெண்.

திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. என்னை அவர் வேலைபார்க்கும் இடத்திற்கு, கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிட்டார். என் பெற்றோர் வெளியூரில் இருக்கின்றனர். அவர்களிடமும் என்னை கூப்பிட்டு போக மாட்டார், பேச மாட்டார், சிரிக்க மாட்டார்.

படுக்கையறையில் மட்டும் அவரின் சந்தோஷத்திற்காகவோ இல்லை என்னுடைய சந்தோஷத்திற்காகவோ தெரியவில்லை... சில நாட்கள் மட்டும் சேர்ந்திருப்போம். நானும், அவர் இன்று மாறி விடுவார், நாளை... மறுநாள் என்று எண்ணி புது மணப்பெண்ணின் ஆசைகளோடு இருந்து ஏமாந்து விட்டேன். குழந்தை இல்லை.

நான் செய்த தவறு, அவர் என்னிடம் அந்தப் பெண்ணை விரும்புவதாக கூறியும், பிடிவாதமாக என்னை கல்யாணம் செய்யச் சொன்னதுதான். அது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத தவறு. என் அத்தை, அவரிடம் விசாரித்ததில் அவர் கூறியது... 'இவள் என்னை விரும்பி கல்யாணம் செய்து கொண்டாள். அந்தப் பெண்ணை நான் விரும்புகிறேன். அந்தப் பெண்ணிற்கு நான் துரோகம் செய்ய நினைக்கவில்லை. ஆகையால், அந்தப் பெண்ணையும் எனக்கு திருமணம் செய்து வையுங்கள்; இருவரையும் நான் நன்றாக வைத்துக் கொள்கிறேன். இதுதான் என் முடிவு...' என்று கூறிவிட்டார்.

மேலும், அந்தப் பெண் வெளியூரில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அதை முடித்தால் என் கணவருக்கு சமமாக (படிப்பில்) ஆகிவிடும். என்னிடம், 'நீ, உன் மாமாவிற்காக அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் தா' என்று கூறினார். அவர் மேல் வைத்த அளவு கடந்த அன்பினாலும், தூய்மையான காதலினாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதி கொடுத்து விட்டேன்.

அன்றிலிருந்து சுத்தமாக நான் அவரிடம் பேசவில்லை. ஆனால், லெட்டர் கொடுத்த பிறகு என்னிடம் மிகவும் பிரியமுள்ளவராக மாறிவிட்டார். ஆனால், என்னால்தான் அவரிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. 'உனக்கும் சரி, அந்தப் பெண்ணிற்கும் சரி துரோகம் செய்ய மாட்டேன்...' என்று கூறுகிறார்.

என் வீட்டில் உள்ளவர்களும் அவருடைய சந்தோஷத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். நான், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் விலாசம் என்னிடம் உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணிடம் பேசக் கூடாது என்று சொல்லி விட்டார்.

என் வாழ்க்கையில் இன்னொருத்திக்கு பங்கு கொடுக்க முடியாமல், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் உங்களின் மகளுக்கு ஒரு பதில் சொல்லுங்கள்.

பெயர் வெளியிட விரும்பாத உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. செய்வதை எல்லாம் செய்து விட்டு, யோசனை கேட்டால் எப்படி?

உன்னைப் பிடிக்காத, வேறொருத்தியை விரும்புகிற மனிதரை, பிடிவாதமாய் மணந்து கொண்டது படு முட்டாள்தனம் என்று நீயே எழுதியிருக்கிறாய். அதனால், அதைக் கூறி, நானும் உன்னைக் காயப்படுத்துவதில் எந்தவித பயனும்இல்லை.

இரண்டாவதாக இப்போது நீ செய்திருக்கிறாயே... அதுதான் படு மோசமான முட்டாள்தனம்.

மனமொப்பாமல் வாழ்க்கை நடத்த உன் கணவருக்கு பிடிக்கவில்லை என்றால் - நீ செய்த தவறுக்கு ஒரு பிராயசித்தம் செய்ய விரும்பினால் - விவாகரத்து பெற்று, உன் பிறந்த வீட்டோடு போயிருக்கலாமே நீ!

எதற்காக, நீயும் இருந்து, இன்னொருத்தியும் உன் கணவருடன் சேர்ந்து வாழ கடிதம் மூலம் அனுமதி கொடுத்தாய்? இது என்ன சினிமாவா? சினிமாவில் பார்க்கத்தான் இதெல்லாம் உருக்கமாக, சோகத்தைப் பிழிந்து தருவதாக இருக்கும்; ஒரிஜினல் வாழ்க்கைக்கு இதெல்லாம் ஒத்து வராது.

நாளைக்கு அவளும் நீயும் ஒரே வீட்டில் வாழ்வீர்களா? உனக்கு குழந்தைகள் இல்லை என்கிறாய். நாளைக்கு அவளுக்குப் பிறந்தால், நீ மனமொப்பித் தாலாட்டு பாடுவாயா அல்லது உன் கணவரும், அவளும் ஒரு படுக்கையறையில் கதவைத் தாழிட்டு படுக்க - நீ தனியே படுத்து, 'கடவுள் தந்த இரு மலர்கள்...' என்று சோக கீதம் பாடுவாயா? எதற்கு இந்த விஷப்பரிட்சை?

சொந்த அக்காள், மகளை மணந்த உன் மாமா, தன் அக்காள் குடும்பத்துக்குத் துரோகம் செய்யாமல், அதே நேரம் தன் மனசுக்குப் பிடித்தவளையும் கைவிடாமல் வாழ இப்படியொரு திட்டத்தை வகுத்திருக்கலாம். உனக்கும், தற்போதைக்கு மாமாவை மனங்குளிரச் செய்து விட்டோம் என்கிற எண்ணம் இருக்கலாம்.

ஆனால், புதுசாய் வரப் போகிறவள், இதையெல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று என்ன தலையெழுத்து? அவள் யோசிக்காமலா இருப்பாள்? என்னதான் காதலராக இருந்தாலும், வேறு ஒருத்தியை மணந்து இரண்டு வருடம் வாழ்ந்தவரை, அந்த முதல் மனைவியையும் வைத்துக் கொண்டு, உன்னையும் வைத்து காப்பாற்றுகிறேன் என்கிறவரை மணக்க - அந்தப் பெண் யோசிக்க மாட்டாளா?

அவளிடம் உன் கணவர் என்ன சொல்லியிருக்கிறாரோ!

'கொஞ்ச நாள் பல்லைக் கடித்துக் கொண்டு இரு... அப்புறம் அவளை பிறந்த வீட்டுக்கே அனுப்பி விடுகிறேன். பார், அவளிடமிருந்து மறுமணத்துக்கு கடிதம் கூட வாங்கி விட்டேன்...'

- இப்படிச்சொல்லியிருக்கலாம் அல்லது அந்தப் பெண்ணே, மணமாகி வந்த பிறகு, உன்னை விரட்டி விடலாம் என தீர்மானித்திருக்கலாம்.

அந்தப் பெண்ணை மணக்க நீ சம்மதம் அளித்ததனாலேயே உன் கணவர் உன்னுடன் பிரியமாகப் பேசுகிறார் என்றால் அந்த பிரியம் வேண்டாமே! ஒன்றைக் கொடுத்துத்தான் அன்பைப் பெற முடியும் என்றால் அது வியாபாரம் கண்ணம்மா.

மனைவியாக வந்தவளை ஏமாற்றாமல் ஏற்றுக் கொள்வோம். அவளுடன் நல்லபடியாக வாழ்வோம் என்றில்லாமல், பழைய காதலியையே நினைத்துக் கொண்டிருப்பது உன் கணவர் செய்யும் தவறு. எப்போது காதலன் ஒருத்திக்குச் சொந்தமாகி விட்டானோ - அந்தக் கணமே அவனை மறக்க வேண்டியது நல்ல பெண்ணுக்கு அடையாளம். அதை விட்டு, இரண்டாம் தாரமாய் வர அவள் சம்மதிப்பது பெரிய தவறு.

ஆதலால், இந்த வாரமலர் இதழை எடுத்துக் கொண்டு, உன் கணவரின் காதலியைப் பார். நான் கூறியவைகளைப் படித்த பின்பும், 'இல்லை, என்னால் அவரை மறந்து இருக்க முடியாது' என்று அவள் அழுது ஆகாத்தியம் செய்தால், 'அப்படியானால் நீயே அவரது மனைவியாக இரு; நான் விலகிக் கொள்கிறேன்...' என்று கூறி விலகி விடு.

இதற்காக அழாதே. உனக்குச் சொந்தமில்லாத எதுவும் உனக்கு வேண்டாம். அடுத்த வீட்டிலிருந்து ஒரு கரண்டி காபிப் பொடி இரவல் வாங்குகிறாய். திருப்பிக் கொடுக்கும் போது அழுவாயா என்ன? வாங்கின பொருளைத் திருப்பித் தர வேண்டியதுதானே முறை. ஆதலால், உன் கணவரிடம் கூறி, விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு விலகப்பார். அவரே, தன் மனதை மாற்றிக் கொண்டு, 'நீ போதும்' என்றால், அவருடன் வாழ்க்கையைத் தொடரு. ஒரு உறையில் இரண்டு கத்திகள்... ஒரு மனிதனுக்கு இரு மனைவிகள்... எப்போதும் பிரச்னை தான்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us