
*வி.ஜலஜா, விழுப்புரம்: இரவல் நகை அணிந்து, விசேஷங்களுக்கு செல்வது சரிதானா?
சரியே இல்லை! நம்மிடம் இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை; இந்த நகைக்காகத்தான் விசேஷ வீட்டினர், 'நகை'ப் பார்கள் என்றால், அந்த உறவோ, நட்போ தேவையே இல்லை!
புன்னகை இருக்கும்போது, பொன் நகை எதற்கு?
***
* கி.ஜித்தன், புதுச்சேரி : நம்பிக்கையானவர்களிடம் கூட சில நேரங்களில் சந்தேகம் ஏற்படுகிறதே...
நீங்கள், அவரை இன்னும் முழுமையாக அறிந்து, புரிந்து கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம்... உங்கள் நம்பிக்கைக் குரியவரைப் போட்டுக் கொடுத்து, தான் பலனடைய நினைப்பவரின் பேச்சுக்கு, நீங்கள் செவிமடுத்தது அடுத்த காரணமாக இருக்கலாம்!
ஆனால், ஒரு போதும் அவசர முடிவெடுத்து விடாதீர்கள். தீர ஆராய்ந்து செயல்படுங்கள்!
***
* மா.சுப்பிரமணியன், விருகம்பாக்கம் : உண்மையான அறிவாளியை அடையாளம் காணுவது எப்படி?
அவன் முட்டாளைக் கண்டு சிரிக்க மாட்டான். முன்னேறி விட்டதாகச் சொல்லி குதிக்க மாட்டான். முந்திரிக் கொட்டையைப் போல தலையை முன்னால் நீட்டி அவமானப்பட மாட்டான்.
***
* கே.ராஜேந்திரன். சிவகாசி : அரசியல் நாகரிகம் படிப்படியாகக் குறைந்து, சுய லாபத்திற் காக கொள்கையற்ற கூட்டு வைக்கின்றனரே... இவர் களுக்கு பாடம் புகட்டுவது எப்படி?
ஓட்டு சீட்டின் மூலம் தான்! நேற்று வரை வேறு ஒருவருக்கு ஜால்ரா தட்டி, இன்று அப்படியே திசை மாறுகிற அரசியல் வியாபாரிகளின் கட்சிக்கு ஓட்டு போடவே போடாதீர்கள்!
***
* பி.ஜோதிலட்சுமி, சென்னை: ஆண் பிள்ளை, பெண் பிள்ளை- பெற்றோரிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் யார்?
பெரும்பாலும், நான் பார்த்த வரையிலும், கேட்ட வரையிலும் பெண் பிள்ளைகள்தான்! பெற்றவர் சொத்துக் கொடுக்கிறாரோ இல்லையோ சீர் செனத்தி செய்கிறாரோ இல்லையோ... பெற்றவர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் பெண் பிள்ளைகளே!
***
*ச.லட்சுமணன், நங்கநல்லூர் : சேமிப்பு பழக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உள்ளதே... என்ன காரணம்?
பெண்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம்; எதிர்காலத்தை நினைத்து பயமும் அதிகம்... அதனால்தான் சேமிப்பில் கெட்டியாக உள்ளனர்.
***
* எம்.ஆனந்தராஜா, பெண்ணாடம் : எனக்கு வாழ்க்கை கசக்கிறதே...
'ரொட்டீன்' வேலைகளிலிருந்து சற்றும் விலகாமல் இருப்பது - ஒரே மாதிரி எண்ணம் கொண்டிருப்பது - ஒரே மாதிரி நடப்பது - இப்படி இருந்தால் வாழ்க்கை கசக்கத்தான் செய்யும். உடையில், உணவில், நடையில் மாறுதல் வேண்டும்! நண்பர் களில் புதியவர்கள் சேர்க்கை வேண்டும். பேச்சில், எண்ணத்தில் மாறுதல் வேண்டும்!
***
* ஆர்.சாந்தி, கள்ளக்குறிச்சி : துன்பம் வந்தால் ஆறுதல் தேடுவது எப்படி?
'ஏதோ... இதோடு போயிற்றே...' என்று எண்ணி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்!
***