
எழுநூறு ஆண்டுகளுக்கு முன், உலகத்தை சுற்றி வந்த மார்க்கோ போலோ இந்தியா வந்த போது, தமிழகத்தில் தான் கண்டவற்றை, தனி அத்தியாயமாக எழுதி உள்ளார். அதில்:
யாரேனும் ஒருவன், மன்னனால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால், அவன் வெட்டிக் கொல்லப்படுவான். இப்படி, தான் வெட்டிக் கொல்லப்படுவதை, ஒரு குற்றவாளி விரும்பவில்லை என்றால், தான் வணங்கும் கடவுளுக்கு முன், தன்னைப் பலியிட்டு கொள்ள, மன்னனின் அனுமதியை கோருவான். மரண தண்டனைக் குற்றவாளி, எந்த வகையிலாவது மரணமடைய வேண்டும் என்பது தானே, மன்னனின் விருப்பம்.
அதனால், குற்றவாளியின் கடைசி ஆசையை, மன்னன் மறுக்காமல் அனுமதிப்பான்.
பின், அவனது உறவினர், ஊர்க்காரர்கள் எல்லாரும் சேர்ந்து, அவனிடம் பன்னிரண்டு கட்டாரிகளைக் கொடுத்து, அவனை ஒரு பல்லக்கில் ஏற்றி, 'இந்த வீரன், இன்று கடவுளுக்கு முன்பாகத் தன்னைப் பலியிட்டு கொள்ளப் போகிறான்...' என்று கோஷமிட்டபடி, ஊரை வலம் வருவர். பல்லக்கு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தண்டனை விதிக்கப்பட்டவனை, பல்லக்கில் இருந்து இறக்கி, நிற்க வைப்பர்.
அவன், 'என் தெய்வத்திற்கு, என் உயிரை காணிக்கையாக்கு கிறேன். எனக்கு அவர் மோட்சத்தை அருளட்டும்...' என்று கூறி, இரண்டு கைகளிலும் இரண்டு கட்டாரிகளை எடுத்து, தன் தொடைகளில் வெட்டிக் கொள்வான். அப்படியே கொடு வாள் கொண்டு, தன் வயிற்றிலும், மார்பிலும் குத்திக் கொண்டு, அவ்விடத்திலேயே விழுந்து, உயிர் விடுவான்.
பின்னர், உறவினர் அவனது உடலை எடுத்துச் சென்று, மயானத்தில் வைத்து தீ மூட்டுவர்.
சில சமயம், அவனது மனைவியும், அவனுடன் உடன்கட்டை ஏறி, தீப்பாய்ந்து உயிர் துறப்பதும் உண்டு. அப்படி இறப்பவளை, 'சதி மாதா' என்று, தெய்வமாக வழிபடுவர்.
— 'மார்க்கோ போலோவின் கடற்பயணங்கள்' என்ற நூலிலிருந்து...
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறுகிறார்: 'நம் நாட்டில் எல்லாம் உள்ளது. நம் அதர்வண வேதத்தில் இருந்துதான் ஜெர்மானியன் பறக்கும் குண்டு, ஆகாய விமானம் முதலியவற்றைத் தெரிந்து கொண்டான். நம் நாட்டில் இல்லாத விமானமா... என்னென்ன அஸ்திரங்கள் இருந்தன. அக்கினியாஸ்திரம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம் என்று! இன்று என்ன புதுமையாய் வந்து விட்டது...' என்று, நாட்டைப் பற்றி பெருமையோடு பேசுகின்றனர். ஆனால், அந்தப் பழம் பெருமை எங்கே இப்போது? அந்நியனுக்கு நாட்டைக் கொடுத்து விட்டு, ஆந்தை போல் விழிப்பது ஏன்? இதனால், உண்மையிலேயே நமக்குப் பெருமை இல்லை, சிறுமைதான்.
இது அந்நியனுடன் கொஞ்சிக் குலாவும் அழகிய நங்கையைக் கண்டு, அருகில் இருப்பவரிடம், 'இவள் யாரோ என்று எண்ணாதேயும்; இவள் என்னுடைய மனைவியாக இருந்தவள் தான். இப்போது, இவளை, அவன் ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டான். ஆனாலும், என்னிடம் இருந்தவள் தானே... இதனால், எனக்கு எவ்வளவு பெருமை!' என்று கூறுவதற்கு சமமாகும்!
— முல்லை முத்தையா தொகுத்த,'அண்ணாவின் அறிவுக் கனிகள்' நூலிலிருந்து...
மதுரை வீரனுக்கு கம்பீரமான மீசை இருப்பதைச் சிற்பங்களில், சித்திரங்களில் காணலாம். ஆனால், வீரனுக்கு அரும்பு மீசை வைப்பது தமிழ்பட ஸ்டைல் ஆகிவிட்டது. மதுரை வீரனுக்கு அரும்பு மீசை வைக்கலாமா? கட்டுடல் கொண்ட அழகான கதாநாயகன் எம்.ஜி.ஆருக்கு, 'மதுரை வீரன்' படத்தில் அரும்பு மீசை! இது பற்றி அந்நாளைய ரசிகர்கள் குறைபட்டு, பத்திரிகை களில் வாசகர் கடிதங்கள் எழுதினர்.
— 'எது நல்ல சினிமா?' நூலில், பசுமைக் குமார்.
***
நடுத்தெரு நாராயணன்