
விருது பெற்றார் பாண்டியராஜன்!
படம் இயக்குவதில் இருந்து விலகி விட்ட நடிகர் பாண்டியராஜன், சமீபத்தில் மண்பானை என்றொரு, 20 நிமிட குறும்படம் இயக்கினார். அப்படத்தை, அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த, 'ஹைபல்ப்' திரைப்பட விழாவுக்கும் அனுப்பி வைத்தார். கதையும், அதை இயக்கிய விதமும் பாராட்டும்படியாக இருந்ததால், பாண்டியராஜனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அளித்து, கவுரவப்படுத்தியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
அஜீத் அறிவிப்பு!
'என் ரசிகர்கள் யாரும், எனக்காக கட் - அவுட், பேனர்கள் வைத்து, தங்களது சொந்த பணத்தை வீணடிக்க வேண்டாம்...' அப்படி நீங்கள் எனக்காக வீணடிக்கிற பணத்தை வறுமையில் வாடும் ஏழைகளுக்கு கொடுத்தால், நிஜமாலுமே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...' என்று ரசிக கோடிகளுக்கு அறிவித்துள்ளார் அஜீத்.
— சி.பொ.
'பிகினி' நயன்தாரா!
பில்லா படத்தில், பிகினி உடையணிந்த பின் தான், இளவட்டங்களின் கனவு தேவதையானார் நயன்தாரா. ஆனால், அதன் பின் அதை தக்க வைத்துக் கொள்ளாத அவர், இப்போது தன் மார்க்கெட்டில், பரபரப்பை கூட்டும் முதல் கட்ட முயற்சியாக, பிகினி உடையணிய மீண்டும், கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். அதோடு, அப்படி நான் நடிக்கும் படம் கண்டிப்பாக மேல்தட்டு ஹீரோக்களின் படமாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்று, சூசக அறிக்கை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
— எலீசா
ஐ.ஏ.எஸ்., கனவில் லட்சுமி மேனன்!
கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் படங்களில் நடித்த, கேரள நடிகை லட்சுமி மேனன், படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீபத்தில், பத்தாவது தேர்வு எழுதிய அவர், இப்போதும் நடிப்பு, படிப்பு இரண்டையும் தொடர்வதோடு, எதிர் காலத்தில், ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும், என்றெல்லாம் பெரிய கனவே வைத்துள்ளார். அதனால், தொடர்ந்து படிப்பு, நடிப்பு என்ற இரண்டு பாதைகளிலும், அவரது பயணம் தொடரும். இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல்!
— எலீசா
விஜய் ஆடிய ஆஸ்திரேலிய நடனம்!
தலைவா படத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து, விஜய்யை மும்பைக்கு கொண்டு வரும் வேடத்தில் நடித்துள்ளார் அமலாபால். அதற்காக, ஆஸ்திரேலியா செல்லும் அவருக்கும், விஜய்க்குமிடையே, ஒரு காதல் பாடல் இடம் பெறுகிறது. அந்த பாடலில் வழக்கமான நடனத்தில் இருந்து விடுபட்டு, ஆஸ்திரேலியாவின் பிரசித்தி பெற்ற சில நடன அசைவுகளையும் கலந்து ஆடியுள்ளார் விஜய். இதற்காக, அங்குள்ள நடன மாஸ்டர் மூலம் இரண்டு நாட்கள், விஜய்க்கு தீவிர பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
— சி.பொ.,
கிரேடு பார்க்கும் காஜல் அகர்வால்!
காஜல் அகர்வாலின் மார்க்கெட் எகிறி நிற்பதால், அவரிடம் கால்ஷீட் கேட்டு, சில படாதிபதிகள் படையெடுத்தனர். ஆனால், அப்படங்களில் நடிப்பது செகண்ட் கிரேடு ஹீரோக்கள் என்பதால், மறுபரிசீலனை இன்றி தவிர்த்து விட்டார் காஜல். அதோடு, தொடர்ந்து அந்த மாதிரி படங்கள் தன்னை துரத்தாமல் இருக்க, 'முதல் கிரேடு ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன்...' என்றும் அறிவித்துள்ளார். காற்றுக்கு தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு!
— எலீசா
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை!
தெலுங்கில், தான் இயக்கியுள்ள, ராமைய்யா வஸ்தாவைய்யா என்ற படத்தில், இரண்டாவது நாயகியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு, சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளார் பிரபுதேவா. இந்த விஷயத்தை, அவர் சீக்ரெட்டாக வைத்திருந்த போதும், மேற்படி நடிகை கொடுத்த பேட்டியில், விஷயம் அம்பலமாகிவிட்டது. இதனால், 'கோலிவுட் கலைஞர்கள் இலங்கைக்கு செல்லவே தடையிருக்கும் நிலையில், ஒரு சிங்கள நடிகையை இவர் எப்படி நடிக்க வைக்கலாம்...' என்று, பிரபுதேவாவை நோக்கி சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
மாணவர்களை தத்தெடுத்த ஜீவா!
நடிகர் ஜீவாவும் சப்தமில்லாமல், சில நற்பணிகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு, ஒரு நரிக்குறவ மாணவனை தத்தெடுத்து, டாக்டருக்கு படிக்க வைத்து வரும் அவர், தற்போது சென்னையைச் சேர்ந்த, ஒரு ஆட்டோ டிரைவர் மகனையும் தத்தெடுத்துள்ளார். அவரது முழு படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்ட ஜீவா, முதல்கட்டமாக, ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.
—சி.பொ.,
அவ்ளோதான்!