
அப்போது தான், ஆபீசிலிருந்து களைத்து வீடு திரும்பியிருந்தான் தயாளன். பைக்கை நிறுத்திவிட்டு, வாசலில் நுழையும்போது, அங்கிருந்த செருப்புகள், ஆட்கள் வந்திருப்பதை உணர்த்தியது. யாராயிருக்கும் என்று யோசனையாய் உள்ளே நுழைந்தான்.
அவனுக்கு திகைப்பு, தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது பலராமன் சித்தப்பாவா அல்லது அவர் சாயலில் வேறு யாரோவா என்று சந்தேகித்தான். பக்கத்தில் இருந்த சுரேஷை வைத்துதான், வந்திருப்பது பங்காளி சித்தப்பா தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, ''எப்ப வந்திங்க,'' என்று விசாரித்தான்.
அழுத்தமாய் உட்கார்ந்திருந்தார் பலராமன். அந்த வீட்டுக்கு வர நேர்ந்ததற்காக வருத்தப் படுபவர் போல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். சுரேஷ் தான், ''இப்ப தான் வந்தோம்,'' என்றான். அவன் முகம் பயத்தில் வெளிறியிருந்தது. ''காபி, டிபன் ஏதும் சாப்பிட்டிங்களா?''
''தம்பியாவது தண்ணி குடிச்சுது. அவர் அதைக் கூட குடிக்கலை,'' என்றாள் அரசி. ''காபி கலந்து வச்சிருக்கு,'' என்று நினைவூட்டினாள்.
''ஊர்ல எதுனா பிரச்னையா. எங்க அப்பா... எதாவது சண்டை போட்டாரா,'' என்று கேட்டான்.
'' இல்லை, நான் வேலை செய்ற இடத்துல சிக்கல்,'' என்றான் சுரேஷ்.
''எதுன்னாலும் பிறகு பேசலாம். முதல்ல காபி குடிங்க. ஊர்ல எத்தனை மணிக்குச் சாப்பிட்டிங்களோ என்னமோ,'' என்றபடி, அரசியிடம், ''சீக்கிரம் சமையலை முடி,'' என்றான். குழந்தைகள் ட்யூசனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
''சுரேஷ் வேலை பார்த்த இடத்துல, மூணு லட்சரூபாய் கையாடல் செய்துட்டாங்க. பழியை இவன் மேல் போட்டு,'பணத்தை கட்றியா... போலீசுக்குப் போகட்டுமா'ன்னு மிரட்டுறாங்க. 'கையாடலுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. தேவையில்லாம, என்னை சிக்க வைக்கிறாங்க'ன்னு சுரேஷ் சொல்றான். ஆட்கள் ஊர்ல போய் தகராறு செய்றாங்க. உண்மை தெரியாம ஊரெல்லாம் ஒரு மாதிரி பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். சம்பவம் நடந்தது சென்னையில். அதான் உங்களைத் தேடி வந்திருக்காங்க,'' என்று விஷயத்தை தெரிவித்தாள் அரசி.
''எங்க வேலை பார்த்தே,'' சுரேஷை விசாரித்தான் தயாளன்.
''பெரம்பூர்ல புஷ்பா பைனான்ஸ்ல கிளார்க். தப்பு செஞ்சவங்க யாருன்னு தெரியும். 'வெளியில் சொன்னால், கொன்னுடுவோம்'ன்னு மிரட்றாங்க. முதலாளிகிட்ட சொன்னாலும், நம்ப மாட்டேங்கறாரு. மேற்கொண்டு என்ன செய்றதுன்னு தெரியல. அவங்க போலீஸ், அது இதுன்னு போய்ட்டா ரொம்ப அசிங்கமாயிடும்,'' என்றான்.
இப்படியொரு, இக்கட்டு ஏற்பட்டதால் தான், சித்தப்பா, இந்த வாசலை மிதித்திருக்கிறார் என்பது புரிய, பலராமனைப் பார்த்தான். அவர் இன்னமும், அதே இறுக்கத்துடன் தான் அமர்ந்திருந்தார்.
சென்னையிலிருந்து நூற்றம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது மூவாவூர். தயாளனுக்கு அந்த ஊர்தான். விவசாயமும், நெசவும்தான் தொழில். படித்தவர்களை விரல்விட்டு எண்ணிடலாம். எல்லா குடும்பமும், ஒன்று விவசாயத்திலோ அல்லது நெசவிலோ மூழ்கியிருந்தது. போக்குவரத்து என்பதே, அதிகபட்சம் பக்கத்து டவுன் வரைக்கும் தான். சென்ற தலைமுறையில் தான், படிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து, பிள்ளைகளை படிக்க வைக்கத் தலைப்பட்டனர். அதில், தயாளனின் அப்பா சுந்தரம் தான் முன்னோடி. தன் மகனை ஐந்து வயதில், முறையாக பள்ளியில் சேர்த்தார். அதோடு அண்ணன், தம்பிகளையும் அவரவர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டினார்.
அது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
'படிச்சு கலெக்ட்டராவறது நின்னுடப் போகுதா... போடா பொழப்பத்தவனே. தயாளனை கூப்பிட்டு விவசாயத்துல போடு...' என்றனர். அவர்கள் பிள்ளைகளை விட, தயாளன் நன்றாக படித்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் படிப்பை தடுக்க என்னவெல்லாமோ செய்தனர், சுந்தரத்தின் பிடிவாதத்தாலும், தயாளனின் ஆர்வத்தாலும், படிப்பு தடைபடாமல் டவுன் பள்ளியில், பிளஸ் 2 முடித்த கையோடு, காஞ்சிபுரத்துக்கு பட்டப்படிப்பு படிக்க அனுப்பப் பட்டான். அப்போதுதான், உறவில் பிரச்னை பெரிதாக வெடித்தது.
'கூட்டுக் குடும்பம். இங்க எல்லாருக்கும் ஒரே சட்டம் தான். யாருக்கும் தனி சலுகை காட்ட முடியாது. ஒம் மகனை படிக்க வைக்க, இந்த வீட்டு பணத்தை வாரி இறைக்க முடியாது. அவன் படிப்பை நிறுத்தறதுன்னா ஒண்ணா இருக்கலாம். இல்லைன்னா கணக்கை முடிச்சுக்கிட்டு, வெளியேற வேண்டியது தான்...' என்றனர்.
'படிக்கறது பாவச்செயல் இல்லை; படிக்க வைக்கறதும் தவறு இல்லை. இதை நீங்க புரிஞ்சுக்காதது வருத்தமான விஷயம். உங்க விருப்பப்படி செய்ங்க...' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் சுந்தரம்.
அப்போதே சொத்தை ஐந்து பங்காக்கி, அதில் ஒரு பாகத்தில், அது நாள்வரை சுந்தரம் குடும்பத்துக்கு செலவானது என பெரிய தொகை ஒன்றை கணக்குக் காட்டி, அது போக மிச்சம் இதுதான் என்று, ஓட்டு வீடு ஒன்றையும், மேட்டு பூமியில் இரண்டு ஏக்கரும் ஒதுக்கி ஓரம் கட்டிவிட்டனர்.'இது அநியாயம். என்னமோ விளைஞ்ச எல்லாத்தையும் நாங்களே தின்னுட்டாப்ல கணக்கு போடறிங்களே... நீங்க ஒவ்வொருத்தரும் அஞ்சு பிள்ளை... ஆறு பிள்ளைகளை பெத்து வளர்க்கிறீங்களே, அதுங்கெல்லாம் வெறும் மண்ணை தின்னு, மர இலை கட்டிகிட்டா வாழறாங்க. செலவழிச்சதுக்கு கணக்கு சொல்றிங்களே... எங்க அப்பாவும்- அம்மாவும் ராவும் - பகலுமா பாடுபட்டாங்களே... அந்த உழைப்புக்கு யார் கூலி கொடுப்பாங்க ...' என்று தயாளன் பொங்கிய போது, நாலு பேரும் அடிக்க வந்து விட்டனர்.
மகனின் கைபிடித்து இழுத்து வந்து, வீட்டில் போட்டார் சுந்தரம்.'பெரியவங்கள எதிர்த்து பேசவா உன்னை படிக்க வச்சது? இந்த சொத்தை நம்பி இருக்கக்கூடாது. நீ படிச்சு சொந்தக் கால்ல நின்னு மத்தவங்களுக்கு முன்னோடியா இருக்கணும். எதிரிக்கு கூட நல்லவனா இருக்கணும்ன்னுதான் படிக்க வைக்கிறது. நீ யார் கிட்டயும் வம்பு செய்து பொல்லாதவனாகிறதுக்கு இல்ல. உன் வேலையை நீ கவனி...' என்றார்.
அப்பாவின் வார்த்தைகளை மதித்து, டிகிரி படித்தான். தொடர்ந்து அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதினான். இரண்டொரு மாதத்திலேயே வேலை கிடைத்து விட்டது. அவன் வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிப்பதைப் பார்த்த பின் தான், ஊரில் விழிப்புணர்வு ஏற்பட்டு, அவரவரும் பிள்ளைகளின் படிப்பில், அக்கறை எடுத்துக் கொண்டனர். அது சம்பந்தமாக, அவனைத்தான் தேடி வருவர். அவனும் தெரிந்ததைச் சொல்லி, வழிகாட்டுவான். யாரெல்லாமோ, அவனிடம் உதவி கோரி வந்தபோதும், பலராமன் மட்டும் அவன் பக்கம் திரும்பியதில்லை.
எதிர்த்துப் பேசினான் என்பதை மனதில் வைத்து, கசப்பு காட்டினார். அவனை, அவன் குடும்பத்தை மதிப்பதுமில்லை. அந்த வீட்டைக் கடக்க வேண்டியிருந்தால், முகத்தை திருப்பிக் கொண்டு போவார். அந்த வீட்டு ஆட்கள் எதிரில் தட்டுப்பட்டால், சத்தமாக காரி உமிழ்வார்.
நேரில் பார்த்து விசாரித்தாலும், பதில் சொல்ல மாட்டார்.
'கண்ட நாய்களுக்கெல்லாம் நின்னு பதில் சொல்ல, நான் ரோஷங்கெட்டவனா...' என்று, முகத்தில் அடித்தாற் போல் முணுமுணுப்பார்.
பழி வாங்க சந்தர்ப்பம் கிடைக்காதா என்று அலைவார்.
ஏதாவது பேசி, வம்புக்கு இழுப்பதும், புகார் சொல்வதுமாக அலம்பல் செய்வார்.
தயாளனுக்கு கல்யாண ஏற்பாடு நடந்த போது, அதை தடுக்க, அவர் ஆடிய கூத்து அனேகம்.
பெண் வீட்டாரிடம், 'அவனுக்கு தீராத வியாதி... ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, சென்னையில் குடிவைத்திருக் கிறான். வரதட்சணைக்காகத் தான், இப்ப கல்யாணம் செய்றான். சுந்தரம் கலகக்காரன். ஒற்றுமையா இருந்த, எங்களை பிரிக்கப் பார்த்தான். அவன் சதித்திட்டத்தை தெரிஞ்சு தான் ஒதுக்கி வச்சுட்டோம். அவனுக்கு உள்ளுர்ல பொண்ணு கொடுக்க ஆளில்லை. அதான், இங்க வந்திருக்கான்...' என்று இல்லாததும், பொல்லாததும் சொல்லி கலைத்துக் கொண்டிருந்தார்.
அரசி வீட்டார் தான், அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல், உண்மை என்ன என்பதை விசாரித்து அறிந்து, திருமணத்துக்கு சம்மதித்தனர். அதில் மூக்குடைபட்டதில், அவருக்கு கோபம் மேலும் அதிகரித்திருந்தது. அவங்களை ஒழிச்சுட்டு தான், மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். அப்படி இருந்தவருக்கு, எதிரியின் வாசலிலேயே போய் நிற்கும்படியான நிலைமை வந்தது துரதிருஷ்டம் தான்.
''இங்க இருக்கிறது உங்களுக்கு சங்கடமாயிருந்தால், சுரேஷை விட்டுட்டு காலையில நீங்க ஊருக்குப் போங்க. அவன் மேல இருக்கற பழியை, துடைச்சு, மறுபடியும் வேலையில உட்கார வைக்கிறது என் பொறுப்பு. நீங்க கவலைப்படாதீங்க. பழசையெல்லாம் நினைச்சு, மனசை குழப்பிக்காதீங்க. என்னைக்கும், நான் உங்களுக்கும் மகன் தான். உங்களுக்கு உதவ கடமைப்பட்டவன் தான். நீங்கள் எல்லாம் இல்லைன்னா, நான் இல்லை. அதனால், உரிமையோடு, 'இதை செய்து கொடு'ன்னு நீங்க எனக்கு உத்தரவு போடலாமே தவிர, இப்படி சங்கடப்பட வேண்டியதில்லை. வாங்க... சாப்பிடலாம்,'' என்று வற்புறுத்தி, கொஞ்சம் சாப்பிட வைத்தான். பிரச்னையை முடித்துக் கொண்டே, ஊருக்குப் போவதாக சொன்னார் அவர்.
காலையில் அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு, தனக்குத் தெரிந்த வக்கீல் நண்பர் வீட்டுக்கு, அவர்களை அழைத்துச் சென்றான் தயாளன். வேறு வழக்குக்காக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தவர், தயாளனுக்காக, அதைத் தள்ளிப் போட்டுவிட்டு, ''என்ன பிரச்னை?'' என்று கேட்க, உட்கார்ந்தார். சுரேஷையே சொல்லச் சொன்னான்.
''நான் வேலை பார்க்கிற இடத்துல, சீனியர்கள் இரண்டு பேர் இருக்காங்க. ஒருத்தர் கேஷியர். இன்னொருத்தர் அக்கவுண்ட்டன்ட். அப்பப்ப, முன்பின் தெரியாத ஆளுங்கள வரவழைச்சி, கையெழுத்து வாங்கிட்டு, 50 ரூபாய் அல்லது
100 ரூபாய் கொடுத்து அனுப்பிட்டு, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாக கணக்கு எழுதுவாங்க.
''சில மாசம், இவங்களே வட்டி கட்டிடுவாங்க. அப்புறம் வட்டி கட்டாம, அசலும் கட்டாம, பார்ட்டி ஊரை விட்டுப் போயிட்டது போல, 'செட்டப்' செய்திருவாங்க. அதைக் கண்டுக்காம இருக்கணும்ன்னு சொல்லி, எனக்கும் பங்கு தர வருவாங்க. நான் வாங்க மாட்டேன். இந்த வருஷம், பெரிய தொகை அடிக்க ப்ளான் செய்திருக்காங்க. நான், 'மேலிடத்துல சொல்லிடுவேன்'னு எச்சரிச்சேன். என்னை ராஜினாமா செய்யச் சொன்னாங்க.
''இதைவிட பெரிய வேலை வெளியில வாங்கித்தரேன்னாங்க. மாட்டேன்னதும் என்னை மிரட்டினாங்க. இது சம்பந்தமா முதலாளிக்கு தகவல் கொடுத்துட்டு, நான் லீவு எடுத்து ஊருக்கு போயிட்டேன். என்ன நடந்ததுன்னு தெரியல. திடீர்ன்னு கம்பெனி ஆளுங்க ரெண்டு பேர் வந்து, 'மூணு லட்ச ரூபாய் கையாடல் செய்துட்டே... ஒரு வாரத்துல பணத்தை திருப்பிக் கட்டலேன்னா, போலீஸ் வரும்'ன்னு பயமுறுத்திட்டுப் போனாங்க,'' என்றான்.
வக்கீல் சிறிது யோசனைக்குப் பின், ''முதல்ல பையனை, ஒரு புகார் கொடுக்கச் சொல்வோம். நிரபராதியான தன் பேரில் பொய்யாய் பழி போடறாங்க. கொலை மிரட்டல் விடறாங்கன்னு போலீசில் புகார் கொடுக்கட்டும். விசாரணை செய்வாங்க. பையன் பேர்ல குற்றம் சுமத்தறதுக்கு ஏதும் ஆதாரம் வச்சிருக்காங்களா...அது பொய்யானதுன்னா அதை உடைக்கணும். அதே சமயம் அவங்க மோசடி செய்ததை நிருபிக்கணும். பையன் கிட்ட ஏதாவது ஆதாரம் இருக்கான்னு பார்க்கணும்,'' என்று சொல்லிக் கொண்டு போனார்.
அவர் வழிகாட்டுதலின்படி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
கொலை மிரட்டல் விடுத்ததாக, சம்பந்தப்பட்ட இரண்டு ஊழியர்களை வரவழைத்து, விசாரித்த போதே தடுமாறி விட்டனர். அவர்கள் போலியாக கையெழுத்து வாங்கிய நபர்களில் கைரிக்ஷா ஆசாமி, ப்ளாட்பார இட்லிக்கடை பெண்மணி போன்றோரை சுரேஷுடன் சேர்ந்து தேடி அலைந்து கண்டுபிடித்தான் தயாளன். இதற்கிடையில் கம்பெனி முதலாளி தலையிட்டு, 'விஷயம் பெரிசாக வேண்டாம். கம்பெனி பேர் கெடும். தப்பு செய்தவர்களை நான் கவனிச்சுக்கிறேன். வழக்கு வேண்டாம்' என்று சமரசம் செய்து கொண்டார். சுரேஷுக்கு, அதிக சம்பளம் கொடுக்க முன்வந்தார்.இதெல்லாம் நடந்து முடிய, ஒரு வாரம் ஆயிற்று.
வேலை முடிந்து ஊருக்கு கிளம்பும் போது, சுரேஷ் தான் நன்றி சொன்னானே தவிர, பலராமன் வாயிலிருந்து, ஒரு வார்த்தை கூட வரவில்லை.
வெகுண்டாள் அரசி.
''என்ன மனுஷன்க இவர், கொடுமை செய்ததெல்லாம் அவர். அப்படியிருந்தும், அவருக்கு ஒரு பிரச்னைன்னு வரும்போது, இருக்கிற வேலையெல்லாம் ஒதுக்கிவச்சுட்டு, ஓடிஓடி பாடுபட்டு தீர்த்து வச்சதுக்கு, ஒரு வார்த்தை சொல்லவும் மனசில்லாமல் போறாரே...ச்சே இந்த மாதிரி ஆட்களுக்கு உதவி செய்வதால், பாவம் தான், வரும். இனிமே, இந்தப் பக்கம் வரட்டும் சொல்றேன்,'' என்றாள்.
''உதவி எதையும் எதிர்பார்த்து செய்யக்கூடாது, ஒரு காலத்துல படிப்பே கூடாதுன்னு பிடிவாதமா இருந்தவரு, தன் மகனை சென்னைல வந்து வேலை பார்க்கிற அளவுக்கு படிக்க வச்சதே, அவர் எவ்வளவு தூரம் மனம் மாறி இருக்கார்ங்கறதுக்கு சாட்சி. அது ஒண்ணே போதும். அவருக்கு விரோதம் பாராட்டாமல், முடிஞ்ச உதவியை செய்ய முடிஞ்சதே, நான் படிச்ச படிப்புக்கான வெற்றி.
''இப்படித்தான் இருக்கணும்ன்னு, அப்பா அன்றைக்குச் சொன்னார். அதனால் சித்தப்பா, நன்றி சொல்லணும்ன்னு நான் எதிர்பார்க்கலை. வரும் போதிருந்த கடுகடுப்பு, போகும்போது இல்லை அவரிடத்தில். இதுவே, அவர் பகையை மறந்துட்டார்ங்கறதுக்கு அடையாளம்ன்னு நினைக்கிறேன். சிலர் வெளிப்படையாய் சொல்வாங்க. சிலர் பூடகமாய் வெளிப்படுத்துவாங்க,'' என்றான்.
அவன் சொன்னது சரி தான் என்பதை, சித்திரை திருவிழாவுக்கு அழைக்க, வழக்கமாய் வரும் தயாளனின் அப்பாவிற்கு பதில், பலராமனே நேரில் வந்ததை கண்டு, உணர்ந்து கொண்டாள் அரசி.
***
ப. வெற்றி வேந்தேன்

