sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 12, 2013

Google News

PUBLISHED ON : மே 12, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது 18. நான் கல்லூரி முதல்ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் எல்லாருடனும் சகஜமாகப் பழகுவேன். நான் +2 படிக்கும் போது எல்லா மாணவர்களுடனும் நன்கு பழகினேன். எனக்கு ஒரு ஆண் நண்பரும் உண்டு. வெறும் நண்பன்தான்; வேறொன்றுமில்லை. என் பிறந்த நாளன்று அவன் கிப்ட் அனுப்ப, அது என் அப்பா கையில் கிடைத்தது.

என்னை அழைத்து இது பற்றி கேட்டார். நானும் ஜஸ்ட் பிரண்ட் தான் என்று கூறினேன். என்னை ஏதேதோ சொல்லி குற்றம் சாட்டினார். எனக்கு முன் கல்யாணம் ஆகாத அக்காவும் இருக்கிறாள். இதனால், என் பெற்றோர்,'உன் அக்காவின் திருமணம் முடிந்ததும், யாருடன் வேண்டுமானாலும் செல்...' என்று கூறினர்.

இதைக் கேட்டு என் இதயமே வெடித்து விட்டது. நானும் என் பெற்றோரை அழைத்து சத்தியமும் செய்தேன். இருப்பினும், அன்று இரவே அவர்களின் சொற்களை தாங்க முடியாது, தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆம்... தூக்க மாத்திரையை விழுங்கி விட்டேன். ஆனால், என் விதியோ என்னவோ என்னைக் காப்பாற்றி விட்டனர். என் பெற் றோரும், 'உன்னை நம்புகிறோம்' என்றும் கூறி விட்டனர்.

என் நண்பனின் காலேஜ் பிரின்ஸ்பலுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் இங்கு நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார் என் அப்பா. என் நண்பனின் அப்பாவை அழைத்து கண்டித்துள்ளார் பிரின்ஸ்பல். அவனும், 'நாங்கள் இருவரும் நண்பர்களாகவே பழகினோம். எங்கள் இருவரிடமும் வேறு தவறான எண்ணம் இல்லை, என்றும் கூறி விட்டான். ஆனால், அவனின் தந்தை, என் அப்பாவை அழைத்து பேசியுள்ளார். என் பெற்றோரும் அவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவனின் பெற்றோரும் என்னைத் தான் குற்றம் கூறினர். ஆனால், என் நண்பனோ வாயைத் திறக்காது ஒன்றுமே தெரியாதது போல் நின்றுள்ளான். அது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. சரி விஷயத்துக்கு வருகிறேன்...

இதெல்லாம் முடிந்து பல நாட்கள் கழித்தும் என் பெற்றோர் ஒரு சந்தேகப் பார்வையுடனே பார்த்தனர். நான் அழாத நாளில்லை. எதற்கெடுத்தாலும் சந்தேகம், சந்தேகம், சந்தேகம்!

சமீபத்திய பண்டிகை ஒன்றின் போது, அது யாரென்றே எனக்கு தெரியாது, எவனோ ஒருவன் எனக்கு, 'வாழ்த்துகள்' என தந்தி அனுப்பியுள்ளான். அதை என் அம்மா பார்த்துவிட்டு, 'இவன் யார்?' என்று கேட்டார். நானோ, 'எனக்கு யார் என்றே தெரியாது...' என கூறி விட்டேன்.

ஆனால், என் பெற்றோர் நம்பவில்லை. 'இன்னும் எத்தனை ஆண்கள் உனக்கு பிரண்ட்ஸ்; ஊரெல்லாம் உனக்குத் தெரியுமோ?' என்று நா கூசாமல் கேள்வி கேட்டனர். அன்றும் என் அப்பா, 'அக்கா கல்யாணம் முடிந்த பிறகு யாருடனும் ஓடிப் போ...' என்று கூறினார். அன்றும் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.

ஆனால், முடியவில்லை. என்னை தடுத்து விட்டனர். அவர்கள் கூறியவாறு ஓடிவிடலாம் என்றால், நான் யாருடனும் அந்த எண்ணத்தில் பழகவில்லை. என்னால் தூங்க முடியவில்லை. ஆனால், ஓரேயடியாக தூங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். பெற்றோர் தான் மகளை நம்புவர். ஆனால், என் விஷயத்தில் பெற்றோரே என்னை சந்தேகிக்கின்றனர். நான் என்ன செய்வது?

இப்படிக்கு

கண்ணீருடன்

உங்கள் அன்பு மகள்.


அன்பு மகளுக்கு—

உன் கடிதம் கிடைத்தது.

உன் நிலை கண்டு பரிதாபப்படுகிறேன்.

நமது நாட்டில் இன்னமும் ஒரு பெண்ணும், ஆணும் நட்புடன் பழக முடியும் என்பதை யாராலும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. உன் பெற்றோர், மிகவும் பழைய காலத்திலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு, எங்கே தன் மகள் யாருடனாவது ஓடி விடுவாளோ என்கிற பயம்.

உன் நண்பனின் மவுனம் பற்றி அநாவசியமாய் மனசைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே... அவன் புத்திசாலி. தன் வரையில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். இந்த வாழ்த்து கூட, அவன் தான் அனுப்பினானோ என்னவோ!

போகட்டும். இப்போதைக்கு உனக்கு வேண்டியது, உன் பெற்றோரிடமிருந்து அன்பும், நம் பிக்கையும் நிறைந்த வார்த்தைகள்.

'அடடா... நம் குழந்தை எத்தனை நல்லவ... அவளைப் போய் இப்படியெல்லாம் அபாண்டமாச் சொன்னோமே' என்கிற உண்மையான வருத்தம்... அதுதானே?

அதை அடைய தற்கொலை ஒரு வழியா கண்ணம்மா? யோசித்துப் பார். அப்படியே நீ தற்கொலை செய்து கொண்டாலும், உன் பெற்றோர், 'எவனை நினைச்சுட்டு செத்தாளோ' என்றுதான் சொல்லி புலம்புவர்.

தவறே செய்யாத நீ எதற்காக அப்படியொரு பட்டத்தை வாங்க வேண்டும் அல்லது இவர்கள் மீதிருக்கும் ஆத்திரத்தில் கண்டவனுடன் ஓடிப் போய்... எதற்காக உன் மேல் நீயே சேற்றை வாரிப் பூசிக் கொள்ள வேண்டும்?

உனக்குத்தான் என்றில்லை... நிறைய பெண்களின் வீட்டில் இப்படித்தான் நடக்கிறது... நீயாவது சின்னப் பெண். எனக்குத் தெரிந்த ஒரு வி.ஐ.பி., சினேகிதி இருக்கிறாள். அவளுக்கு கிட்டத்தட்ட என் வயது. மிகவும் நல்லவள். எல்லாருடனும் பிரியமாகவும், கலகலப்பாகவும் பழகுவாள். அவளுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் சில வருடங்களுக்கு முன்தான் கால மானார்.

ஆனால், மிகுந்த தன்னம் பிக்கையும், சமுதாயத்தின் மீது அக்கறையும் கொண்ட அவளை, அவளது கூடப் பிறந்த சகோதரனே - உன் தந்தை உன்னைக் கூறுவது போலத்தான் கூறுகிறான். அவள் கருத்தரங்கத்துக்கு தலைமை தாங்க வெளியூர் போய் வந்தால், 'எவனுடன் போய் வந்தாய்...' என்று நெருப்பை அள்ளிக் காதில் கொட்டுவது போலக் கேட்கிறான். அதுமட்டுமன்றி, அவளது குழந்தைகளும் மாமா சொல்வதை நம்புகின்றனரே தவிர, பெற்ற தாயை நம்ப யோசிக்கின்றனர்.

ஆனால் —

இதற்கெல்லாம் என் தோழி பயப்படுவதே இல்லை தெரியுமா? 'ஆமா போ... 16 வயசுலே இருந்து, என்னை எத்தனையோ பேர் கூட சேர்த்து வச்சு, என் குடும்பம் பேசியாச்சு. 50 வயசுக்கு மேல என்னைப் பேசினாத்தான் என்ன...பேசட்டும். இவங்களோட சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறதை விட, நிறைய வேலைகள் இருக்கு எனக்கு!' — இப்படிச் சொல்லி சிரித்து விட்டு, மேலே மேலே - இன்னும் உயரத்துக்குப் போய் கொண்டிருக்கிறாள்.

நீயும் அதுபோல் இருக்க முயற்சி. உன் பெற்றோர் ஏதாவது சொன்னால், 'சாரி, எனக்கு படிப்பு முக்கியம். பரிட்சையை ஒழுங்கா எழுதி, நல்ல மார்க் வாங்கினதுக்கு அப்புறம் உங்க சந்தேகத்தை எல்லாம் காது கொடுத்து கேட் கிறேன்...' — இப்படிச் சொல்லி, உன் கவனம் முழுக்க படிப்பில் செலுத்து. எல்லாவற்றிலும் முன்னுக்கு வா.

உனக்கு, உன் பெற்றோர் மீது இருக்கிற கோபத்தை, இன்னும், 'உன்னால்தான் தன் படிப்பு கெட் டது' என்று தன் அப்பா சொன்னபோது, நட்டு வைத்த மரம் போல நின்ற மாணவன் மீதுள்ள எரிச்சலை, வாழ்த்து அனுப்பி, முகத்தை ஒளித்துக் கொண்டவனின் மீதுள்ள ஆத்திரத்தை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, நெருப்பை விழுங்குவது போல விழுங்கி, 'ஜில்'லென ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்து விட்டு களத்தில் இறங்கு; ஜெயித்து காட்டு...

பேசுகிறவர்கள் பேசட்டும். உன் பெற்றோரின் எதிரில் நீ இமயமாக உயர்ந்து நில். உனக்கு எப்பொழுதும் என் ஆசிகள் உண்டு.

இப்படிக்கு அன்புடன்,

சகுந்தலா கோபிநாத்.


***






      Dinamalar
      Follow us