
அலிபாபா படம் எடுக்கும்போது இன்னொரு கடுமையான சோதனையும் ஏற்பட்டது. டி.ஆர்.சுந்தரத்துக்கு அதிகத் தொல்லை கொடுத்த நிகழ்ச்சி அது.
'ஆயிரத்திலலொரு இரவுகள்' கதைகளில் ஒன்றுதான் இந்த அலிபாபா. அந்தக் கதையை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் இல்லையா? சென்னையில் ஒரு பெரிய தயாரிப்பாளர் ஒருவரும், அலிபாபாவை வண்ணப்படமாக எடுத்தார். சேலத்தில் எடுக்கும் படத்திற்கு முன், தன் படத்தை வெளியிட்டு விடவேண்டும் என்று மிகவும் பாடுபட்டார். ஆனால், டி.ஆர்.சுந்தரம் அந்தப் படத்திற்கு, முன்பே தன் படத்தை வெளியிட்டு, மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். அதனால், மாடர்ன் தியேட்டர்ஸ் ஏதாவது ஒரு படத்தை எடுக்கத் திட்டம் போட்டிருக்கிறது என்றால், அதே கதையை வேறு யாரும் எடுக்க, யோசிக்கக் கூட மாட்டார்கள்.
அலிபாபாவின் வெற்றிக்குப் பிறகு டி.ஆர்.சுந்தரம் அதே ஆண்டில் இயக்கிய படம்தான், பாசவலை. ஜெமினியில் நிரந்தர நடிகராக இருந்த எம்.கே.ராதா,மாடர்ன் தியேட்டர்சில் நடிக்க வந்த முதல் படம்.
'அல்பாதுஷா' என்னும் பழைய, நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட கதை. எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்தனர்.
'லொள்... லொள்' என்று நாயைப் போல் குரைத்துப் பாடி, ஆடிய ராஜாமணி என்னும் நடிகையும் இதில் உண்டு. இந்தப் படத்தின் பெரும் வெற்றிக்குக் காரணமே பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் தான்.
இங்கே அவர் பாட்டு எழுத வந்ததே ஒரு தனிக்கதை. ஒரு முறை கல்யாணசுந்தரம் ரிகர்சல் ஹாலு<க்கு வந்தார். அங்கே அப்போது புரொடக்ஷன் மேனேஜராக இருந்தவர் சுலைமான். மாடர்ன் தியேட்டர்சில் பிலிம் ரெப்ரசென்டேட்டிவாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
பாடல் எழுத வாய்ப்பு கேட்டு வந்த பட்டுகோட்டையாரிடம், 'எங்கே ஒரு பாட்டை எழுதுங்கள் பார்ப்போம்...' என்றார்.
பட்டுக்கோட்டையார் எழுதினார்...
குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா
குறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால்
எட்டடிதான் சொந்தம்!
என்னும் பாட்டை எழுதி, சுலைமான் கையில் கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை, அப்போது அங்கே மியூசிக் டைரக்டராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுக்க, அதைப் படித்த எம்.எஸ்.வி., உடனே பாடலாசிரியரைத் தேடிப் பிடித்து, டி.ஆர்.சுந்தரம் முன் நிறுத்தினார்.
டி.ஆர்.சுந்தரம் ரிகர்சல் ஹாலில் உள்ள பரந்த வெளியில், தனியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பார். மாலை வேளையில், அவர் ராஜாங்கம் நடத்தும் இடமும் அதுதான். யார் வந்தாலும் அவர் எதிரில் நின்று கொண்டுதான், சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டும்.
எம்.எஸ்.விஸ்வநாதன், பட்டுக் கோட்டையாரை அழைத்துப் போய்,
டி.ஆர். சுந்தரத்தின் முன் நிறுத்தி விட்டுப் போய்விட்டார். நாற்காலியில் டி.ஆர்.சுந்தரம் அமர்ந்திருந்தார். உட்கார, கவிஞருக்கு இடமில்லை. ஒரு காகிதத்தை எடுத்தார், அதில் ஏதோ எழுதி, டி.ஆர். சுந்தரத்திடம் கொடுக்க, அடுத்த நிமிடமே அங்கே, பட்டுக் கோட்டையாருக்கு ஒரு நாற்காலி போடப்பட்டது.
வந்திருக்கும் நபர் மதிக்கத் தக்கவர் என்பதை, டி.ஆர். சுந்தரம் புரிந்து கொண்டார். அந்தத் துண்டு காகிதத்தில் கவிஞர் எழுதிக் கொடுத்த வாக்கியம், 'மரியாதை கொடுத்து மரியாதை பெறவும்' என்பது தான். மதிக்கத் வேண்டியவர்களை மதிக்கத் தெரிந்தவர் டி.ஆர்.சுந்தரம் என்பதற்கு இது உதாரணம்.
பாசவலை படத்தின் பாடல்கள் எப்படி வரவேற்பு பெற்றன என்பதை சொல்லத் தேவையே இல்லை.
நடிகர்களை போல சில பாடகர்களும் நிரந்தரமாகவே ரிகர்சல் ஹாலில் தங்கி இருந்தனர். அவர்களுக்கும் அப்போது மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. அதில் முக்கியமானவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்திரராஜன், ஏ.எல்.ராகவன் மற்றும் எஸ்.சி.கிருஷ்ணன். வேலையில்லாத நேரங்களில் இவர்கள் பாட்டுக்காக, 'சாதகம்' செய்வது வழக்கம்.
கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்தால் குரல் வளம் நன்றாக இருக்கும் என்பர். இதில் சீர்காழிக்கு தினமும் சாதகம் செய்தே ஆக வேண்டும்.
தைரியமாக டி.ஆர்.சுந்தரத்தை அணுகி, 'தனக்கும், மற்றவர்களுக்கும் சாதகம் செய்ய, தண்ணீர் தேவை' என்று மொட்டையாகச் சொன்னார்.
'என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்' என்றார் டி.ஆர்.சுந்தரம் சிரித்துக் கொண்டே.
சாதகம் செய்ய நீர் நிறைந்த ஒரு பெரிய தொட்டி வேண்டும் என்பதை அவரும் விளக்கினார்.
ரிகர்சல் ஹாலில் ஒரு மூலையில், ஆறு அடி நீளமும், நான்கடி அகலமும், மூன்றடி உயரமும் கொண்ட ஒரு தொட்டி மூன்றே நாளில் கட்டப்பட்டது. அதில் நிறைய தண்ணீர் நிரப்பிவிட, பாடகர்கள் கழுத்தளவுக்கு தண்ணீர் வரும் வரை அதில் உட்கார்ந்து சாதகம் செய்தனர். இது அவர்களுக்கு டி.ஆர்.சுந்தரம் கொடுத்த எக்ஸ்ட்ரா போனஸ்.
'சாதகம் செய்ய வேண்டுமென்றால், எங்காவது குளத்தைத் தேடு...' என்று, அவர் சொல்லவில்லை. மாறாக தன் ஸ்டுடியோவில் தொழில் செய்ய வந்தவர்களுக்கு, வேண்டிய சவுகர்யங்களைச் செய்து கொடுக்க வேண்டும், அது தன் கடமை என்று நினைத்தார். எம்.எஸ்.,விக்குப் பின் வந்தவர் கே.வி.மகாதேவன். அவர் மெட்டமைத்த பல படங்களின் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன.
திராவிட மொழிகள் யாவற்றிலும் படம் எடுத்தாயிற்று. மாடர்ன் தியேட்டர்சை பொறுத்தவரை இது ஒரு சாதனை. ஆங்கிலத்திலும் படம் எடுத்தாயிற்று. இந்திய மொழிகளில் முக்கிய மொழியான, இந்தியை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என, டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார். இந்தியில் படம் எடுக்க வேண்டும் என்று அவர் அஸ்திவாரம் போட்டுக் கொடுக்க, மீதி வேலைகள் அசுர வேகத்தில் நடந்தன.
இந்தி நடிகர்கள், டைரக்டர் எல்லாரையும் சேலத்திற்கு வரவழைத்து விட்டார்.
செவன் பிரைட்ஸ் பார் செவன் பிரதர்ஸ் எனும் ஆங்கிலக் கதை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தி மார்க்கெட்டுக்கு தேவையான மசாலாக்களை சேர்த்து, கதை செய்திருந்தார் ஐ.எஸ்.ஜோகர் எனும் காமெடி நடிகர்.
கதாநாயகனாக அஜீத் என்ற நடிகரும், கதாநாயகியாக நளினி ஜெயவந்தும் நடித்தனர். துணை நடிகர்கள் உட்பட எல்லாரும், பம்பாய் இறக்குமதி தான். படத்தை டைரக்ட் செய்தவரும் ஐ.எஸ்.ஜோகர் தான். பெரும் வெற்றியை எதிர்பார்த்த இந்தப் படம், மிகவும் சுமாராகத் தான் போயிற்று. படப்பிடிப்பு சமயத்தில், இந்தி நடிகர்கள் கொடுத்த தொல்லைகளை, டி.ஆர்.சுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டு போகாமல், சமாளித்து விட்டனர் அங்கிருந்த தொழிலாளர்கள்.
படம் வெற்றி அடையவில்லை. அதனால், தொடர்ந்து இந்திப்படம் எடுக்கும் யோசனையை தள்ளி வைத்து, தமிழ் படம் தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் டி.ஆர்.சுந்தரம். 1957ம் ஆண்டில், இந்தி படம் எடுத்த பின், அடுத்ததாக, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க எடுத்துக் கொண்ட படம், ஆரவல்லி.
இந்தப்படம், ஏற்கனவே, 1946ல் பி.எஸ்.சிவபாக்கியம் என்னும் நடிகை நடித்து, மாடர்ன் தியேட்டர்சாரே தயாரித்த படம்!
அதே படத்தை, மீண்டும் வேறு ஒரு பிரபல நடிகையை வைத்து, எடுக்க விரும்பினார் டி.ஆர்.சுந்தரம். அந்த நடிகை தான் ஜி.வரலட்சுமி. அப்போது, தெலுங்கு பட உலகில், பிரபலமாக இருந்த நடிகை வரலட்சுமி, ஆரவல்லியாக நடிக்க, அவரது மகளாக மைனாவதி நடித்தார். பழங்கால சரித்திரத்தில், கிளியோபாட்ரோ கழுதை பாலில் குளிப்பதாக சொல்லப்பட்டு இருந்தது. அதே போல், ஆரவல்லி கழுதை பாலில் குளிப்பது போல் காட்சியை அமைக்க வேண்டும் என்று நினைத்தார் டி.ஆர்.சுந்தரம்.
சுற்றுப்புறமுள்ள கிராமங்களில் இருந்த சலவைத் தொழிலாளிகளை ஒன்று சேர்த்து, அவர்களது ஒத்துழைப்புடன், நூறு கழுதைகளை தயார் செய்தார். சலவைத் தொழிலாளிகள், கழுதைகளிடம் பால் கறப்பது போல் லாங் ஷாட்டில் படமாக்கப்பட்டது. அதையே, குளோசப் ஷாட்டில் காண்பிக்கும் போது, காமெடியன்கள் கழுதைகளிடம் பால் கறப்பது போலக் காண்பிக்கப்பட்டது. ஏறக்குறைய, எல்லா காமெடியன்களும் சற்று பயத்துடன் இந்த காட்சியில் நடித்தனர். கழுதை உதைத்தால் என்னாகும் என்று அவர்களுக்கு தெரியாதா... பால் கறக்கும் காட்சிக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு அருமையான பாட்டை எழுதியிருந் தார். அது...
— தொடரும்.
ரா. வேங்கடசாமி

