
** ஆர்.ராமலிங்கம், கோவை: 'விடா முயற்சி தேவை' என பலமாகக் கூறி வருகிறீர்களே... என்ன முயன்றும், அக்கலை கைவர வில்லை... யாரையாவது பார்த்துக் கற்றுக் கொள்ள முடியுமா?
முடியுமே! பிச்சைக்காரர்களை கவனியுங் கள்...'சில்லரை இல்லை போ... போ...' என எவ்வளவு விரட்டினாலும், காசு வாங் காமல் போகிறார்களா?
***
*வி.வேளாங்கன்னி, குமுளி: பெண்களைக் கவர, இந்த ஆண்கள் படும் பாடென்ன... கவர்ந்த பின், எங்களை படுத்தும் பாடென்ன...ஏன் சார் ஆண்களின் மனப்போக்கு இப்படி இருக்கு?
'பழகப் பழக பாலும் புளிக்கும்!' என்ற பழமொழியில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்களோ? (பெண் களுக்கு இப்பழமொழியில் நம்பிக்கை வராது என்ற மிதப்பும் காரணமாக இருக்கலாமோ?)
***
*வே.ஜார்ஜ் ஸ்டீபன், குன்னூர்: படிப்பது கஷ்டமான காரியமா?
ஆம்! திணிக்கப் படும் போது, கட்டாயப்படுத்தப்படும் போது!
***
** ரா.கோவிந்தன், திருவல்லிக்கேணி: திருமணமான ஆண்களை அடையாளம் கண்டு கொள்வதெப்படி?
திருமணமாகாத ஆண்களை விட, அதிகம், 'ஜொள்' கொட்டுவர் திருமணமான ஆண்கள்! எனவே, எக்கச்சக்க, 'ஜொள்' வடிக்கும் ஆசாமிகளைக் கண்டால், 'இவர் கால்களுக்கு கட்டு விழுந்து விட்டது!' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
***
* எஸ்.மாரிமுத்து, உத்தமபாளையம்: 'புத்திசாலித் தனமாக வாழ்கிறான்!' என எவரைக் குறிப்பிடலாம்?
கடன் வாங்காமலும், கடன் கொடுக்காமலும் வாழ்பவரை!
***
*ஆர். மதனா, கோட்டூர்: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?
உள்ளத்தில் இருந்து வராமல், உதட்டளவில் சிரிப்பைக் காட்டும், கள்ளச் சிரிப்பர்களைக் கண்டால், 'அலர்ஜி'தான்!
***
*கே.தங்கப்பாண்டி, மதுரை : எதிலும், எனக்கு சந்தேகம் வருகிறதே...
நீங்கள் உருப்பட போவதில்லை என்பதன் முதல் அறிகுறிதான் இது! சந்தேக குணத்தோடு ஒருவன் நீண்ட நாள் வாழ்வானா என்பதும் சந்தேகமே!
***