sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 30, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்ட நண்பர் ஒருவரை வரவேற்க விமான நிலையம் கிளம்பினோம் நானும், லென்ஸ் மாமாவும்!

அவரை வரவேற்க ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்திருந்தேன். தெரிந்த, அறிந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், குடியேற்ற அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளிடமெல்லாம் சொல்லி வைத்து இருந்தேன்.

அசிஸ்டன்ட் கமிஷனரான அந்த கஸ்டம்ஸ் அதிகாரி நெருங்கிய நண்பர்... அவர், என் காதை கடித்தார்... 'ஏம்ப்பா... பிஸ்கட், கிஸ்கட் (தங்கம்) ஏதும் எடுத்து வந்திர மாட்டாரே?'

கட, கடவென சிரித்த என்னைப் பார்த்து திகைத்தார் அதிகாரி...

'சார்... சாக்லெட், பவுடர் டப்பா, சென்ட்... இவைகளை எடுத்து வந்தாலே அதிசயம்... நீங்க நெனக்கிற மாதிரி ஆளெல்லாம் எனக்கு நண்பர்களும் இல்லை... அப்படிப்பட்ட, அதற்கு உதவும் நண்பர்களையும் எந்தத் துறையிலும் நான் சேர்த்துக் கொள்வது கிடையாது...' என்றேன்.

சந்தோஷமாகத் தலை அசைத்தார் அந்த அதிகாரி.

பல வருடங்களுக்கு முன் ஹாங்காங் செல்ல சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு, நானும், லென்ஸ் மாமாவும் எக்சிகியூட்டிவ் கிளாஸ் லவுஞ்சுக்கு மாடிப்படி ஏறும் நேரம், 'மணி... எந்த நாட்டுக்கு?' என்று கேட்டபடியே கையைப் பிடித்தார் நண்பரான அந்த கஸ்டம்ஸ் அதிகாரி.

போகுமிடத்தைக் கூறி, 'வாங்களேன்... ஒரு கப் காபி சாப்பிடலாம்...' என அவரையும் அழைத்துச் சென்றேன்.

அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவரது பேன்டின் வலது பாக்கெட் புடைத்தது போல் இருந்ததை கவனித்தேன். அதை உணர்ந்து கொண்ட அதிகாரி, 'டாலர்களும், யூரோக்களும்... சில, பல லட்சங்கள்...' என்றார் புருவங்களை உயர்த்தியபடி.

பிரம் அட்ரஸ் போலியாக ஒன்றை எழுதி, அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் ரூபாய் நோட்டுகளை, சிங்கப்பூர் முகவரி ஒன்றுக்கு யாரோ வானஞ்சல் செய்துள்ளனர். கவர் தடிமனாக இருக்கவே, சந்தேகம் கொண்ட கஸ்டம்ஸ் அதிகாரி நண்பர், அதைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தால்... சமாச்சாரம் உள்ளே இருந்திருக்கிறது.

அவர் நேர்மையான அதிகாரி, சேர்க்க வேண்டிய இடத்தில் அதைச் சேர்த்து விடுவார்... இப்படிப்பட்ட வேட்டைகளை, 'தேட்டை' போடும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் உண்டு... நண்பர்கள் வழக்கமாக கூடுமிடத்திற்கு வலிய வந்து நட்பு பாராட்ட முயற்சிப்பர் சில தேட்டையர்கள்... பட்டு கத்தரிப்பது போல கத்தரித்து விடுவேன்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்—

விமான நிலையம் செல்லும் முன் பாண்டி பஜார் சென்று, எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கிக் கொண்டேன்... நண்பரின் கையில் கொடுக்க...

'கஞ்சப் பிரபோ... ஆப்பிள் இருக்கு, சாத்துக்குடி இருக்கு... அதெல்லாம் விட்டு, ஏன் எலுமிச்சம் பழத்த வாங்குறே... நா வேணா காசு தரவா?' என எரிந்து விழுந்தார் லென்ஸ் மாமா.

நான் விளக்கம் சொன்னேன்: மாமா... அதிகாரிகளையோ, பிரமுகர் களையோ பார்க்கச் செல்லும் போது, எலுமிச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, வந்த விஷயத்தை சொல்வர்... இப்படிச் செய்பவர்களை பலரும் கஞ்சன் என்று தான் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த தத்துவம் என்ன தெரியுமா?

முக்கனி எனப்படும், மா, பலா, வாழை ஆகியவற்றை எடுத்துச் சென்று பிரமுகர்களிடம் கொடுக் கும்போது நசுங்கி விட வாய்ப்புண்டு. கையில் ஒட்டும்... மேலும், இவை எப்போதும், எக்காலத்திலும் கிடைக்காது... தூக்கி செல்வதும் சிரமம்...

எலுமிச்சம் பழத்துக்கு, 'சதா பலம்' என்று பெயர். இதற்கு, எப்போதும் கிடைக்கும் என்று பொருள். சவுகரியமாக எடுத்துச் செல்லலாம்! இதனாலேயே சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களைக் காணச் செல்லும் போது, எலுமிச்சம் பழம் கொடுப்பது வழக்கமாயிற்று. எலுமிச்சையின் நிறம் மஞ்சள்; மஞ்சள் மங்களகரமானது. பிரமுகரை பார்க்கச் சென்ற நோக்கமும் நல்லபடியாக முடியக்கூடும், என, நீண்ட ஒரு விளக்கத்தைக் கொடுத்தேன்.

அரைகுறையாக தலையை அசைத்து வண்டியைக் கிளப்பினார் மாமா.

உங்களுக்கு மட்டும் ரகசியமாக ஒரு சேதி... எலுமிச்சம் பழத் தத்துவம் என் கண்டுபிடிப்பு என, மாமா நினைத்துக் கொண்டிருக்கிறார்; ஆனால், இது கி.வா.ஜ., சொன்னது... அவரது கட்டுரை ஒன்றில் எப்போதோ படித்தது; மனதுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள்!

***

இப்பொழுதெல்லாம் தமிழில் ஆங்கிலம் மட்டும் கலக்கவில்லை... நம்மூர் ஆசாமிகளிடம், ஆங்கிலேயரின், நடை, உடை, பாவனை முழுமையாகத் தொற்றி விட்டது.

படிப்பதிலும், குடிப்பதிலும், ஆட்டம், பாட்டம் போடுவதிலும் மேற்கத்திய நாகரிகம் ஒட்டிக் கொண்டு விட்டது.

'அமுதைப் பொழியும் நிலவே...' காணாமல் போய் விட்டது... 'டகளு... டகுளு தான்...!' போன்ற மேற்கத்திய மெட்டும், புரியாத காட்டுக் கத்தலும் இனிமையாகி விட்டன நம்மவருக்கு!

நம்ம விஷயம் இப்படி இருக்க, இங்கிலாந்துக்காரர்கள், ராமாயண நாட்டியம் போட்டு ரசிக்கின்றனராம்... நாடகத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறதாம்.

சொன்னவர் அந்துமணியின் அதிதீவிர வாசகி. அவர் ஒரு சாப்ட்வேர் நிபுணி. 'அசைன்மென்ட்' ஒன்றுக்காக அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு மூன்று மாதம் சென்று வந்தவர், வரும் வழியில் லண்டனில் தங்கி இருக்கிறார். அப்போது தான் ராமாயண நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டு, பார்த்து வந்திருக்கிறார்.

அவர் சொன்னார்:

நம்ம அருமை நமக்கு தெரியல; ஆனா, இங்கிலீஷ் காரர்களுக்கு தெரியுது. பிரிட்டனில் பிர பலமான நேஷனல் தியேட்டரில், ராமாயண நாடகம் சக்கை போடு போடுகிறது; கூட்டம் தாள முடியவில்லை.

லண்டன், பர்மிங் ஹாம் உட்பட பல இடங்களில் நாடக தியேட்டர்களில் ராமாயண நாடகத்தைப் பார்க்க வரும் கூட்டத்தை கண்டு வியந்து போகின்றனர் தயாரிப்பாளர்கள்.

மேற்கத்திய நாடுகளில், பிரிட்டன் தான் அதிக அளவில் நாடகங்களை தயாரித்து சாதனை படைக் கிறது. காரணம், அங்கு இன்னும் நாடகம் பார்ப்பதில்,மக்கள் ஈடுபாடு குறையவே இல்லை. பொதுவாக கோடை சீசனில், ஆங்கில நாடகங்கள் போடுவது உண்டு; இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

லண்டன், பர்மிங்ஹாம் உட்பட சில நகரங்களில் நாடகக் குழுக்கள் நாடகம் போடும். கோடையில் இப்படி 10, 15 நாடகங்கள் பல ஊர்களில் வலம் வரும்.

ராமாயண நாடகத்தை பர்மிங்ஹாம் நாடகக் குழுவினர் தயாரித்துள்ளனர். இதை இயக்கியது ஒரு பெண்மணி. பெயர்: இந்து ரூப சிங்கம். இவர், பிரிட்டனில் பிறந்து வளர்ந்த முதுகலைப் பட்டதாரி. இலங்கையில் இருந்து இங்கிலாந்து வந்த குடும்பம்.

இவர், பல புத்தகங்களை பார்த்து கதை வசனம் எழுதினாலும், பீட்டர் ஆஸ்வால்டு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து நாடகத்தை தொகுத்துள்ளார். 'சர்ச்சை எதுவும் எழுப்ப பிரிட்டனில் ஆளில்லை. ஆனால், பிரிட்டனில் உள்ள ஆசியர்கள் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். அவர்கள் குறை சொல்லி விடக்கூடாது. அதனால் தான் பயந்து, பயந்து ஒவ்வொரு சீனும் எழுதினேன்...' என்கிறார் இந்து.

நாடகத்தில் பலருக்கும் பிடித்த கேரக்டர் ஆஞ்சநேயர்தான். வாலுடன் அவர் மேடையில் தோன்றி டயலாக் பேசும்போது, ஒரே கரகோஷம் தான். அடுத்து ராமன், சீதை வசனங்கள் தூள் கிளப்புகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய பண்பாடு பற்றி நாடகத்தை பார்த்த பலரும் திருப்தியாக விமர்சிக்கின்றனர்.

'இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா? உண் மையா? வெறும் கட்டுக்கதையா... என்றெல்லாம் விமர்சனக் கடிதங்கள் வருகின்றன...' என்கிறார் இயக்குனர் இந்து.

நாடகத்தில் பங்கேற்ற பலர் ஆங்கிலேயர்கள் தான். ராமர் உட்பட சில கேரக்டர்களில் நடித்தவர்கள் மட்டும் ஆசியர்கள். இந்தியர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு சரியாக இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

நம் பெருமையை நாமே மறந்து வருகிறோம்... அங்கே, 'ராக்' போய், ராமாயணம் வந்து விட்டது. ஹும்! எப்படி இருக்கிறது பாருங்க...

— அவர் சொல்லச் சொல்ல, ஆச்சர்யத்தால் மூக்கின் மீது வைத்த விரலை எடுக்கவே இல்லை.

***






      Dinamalar
      Follow us