
**ஜெ.பெர்னாட்ஷா, தேனி: எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறதே...
உங்கள் பையிலும், கையிலும், பேங்கில் உங்கள் அக்கவுண்டிலும் காசு இல்லை என நினைக்கிறேன்! காசு இல்லாதவர்களிடம் எப்போதும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
***
*டி.மகேஸ்வரன், சென்னை: இப்போது அமலில் இருக்கும், 'மெட்ரிக்' அளவு முறை எப்போது இந்தியாவில் ஆரம்பமானது?
அக்., 1, 1958ம் ஆண்டில்! அதற்கு முன் இருந்த அளவைகள்: பலம், வீசை, மணங்கு, கண்டி. 40 பலம் என்பது ஒரு வீசைக்கு சமம்; எட்டு வீசை ஒரு மணங்குக்கு சமம்; 20 மணங்கு ஒரு கண்டிக்கு சமம். என்ன... தலை சுற்றுகிறதா? இன்னும் கேளுங்கள்: ஒரு பலம் என்பது 35 கிராம், ஒரு வீசை என்பது ஒரு கிலோ 400 கிராம்; ஒரு மணங்கு என்பது 11 கிலோ 200 கிராம்; ஒரு கண்டி என்பது 224 கிலோ! அப்பாடா, 'மெட்ரிக் சிஸ்டம்' வந்ததே...' என்கிறீர்களா?
***
*ஜா.இஸ்மாயில், திருப்பூர்: நண்பர் டில்லிக்கு, 'டூர்' செல்கிறார்... என்ன வாங்கி வரச் சொல்லலாம்?
டில்லியில் கிடைக்கும் எல்லாமும் உங்கள் ஊரிலும் தான் கிடைக்கும்; வெளியூர் செல்பவர்களை சுமை தூக்க வைத்து தொல்லைப்படுத்தாதீர்கள்!
***
**என்.வெண்மதி, குச்சனூர்: ஒருத்தர் சம்பாதிக்க - ஐந்து பேர் உட்கார்ந்து சாப்பிடும் குடும்பம் பற்றி...
'உட்கார்ந்து சாப்பிடுபவர்' என நீங்கள் குறிப்பிடுவதிலிருந்தே... சம்பாதிக்கும் திறமை கொண்டவர் நீங்கள் என்பது புரிகிறது. இருந்தும் உட்கார வைத்து சோறு போடுகிறாரே அந்த சம்பாதிக்கும் ஒருத்தர்... அவரைத் தான் குறை சொல்ல வேண்டும். 'அடுத்த வேளை சோறும், தங்கும் இடமும் இங்கே கிடையாது...' என அவர் சொல்லிப் பார்க்கட்டும்!
***
*ஏ.இசக்கிமுத்து, சங்கரன்கோயில்: ஒரே ராசிக்கு ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு பலன் சொல்கிறதே... இதில் எதை நம்புவது?
எந்த இதழில் சாதகமாக இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்களேன்!
***
க.சுமத்திரன், மயிலாப்பூர்: கடன் வாங்குபவன், கொடுப்பவன், இக்கடனுக்கு ஜாமின் கையெழுத்துப் போடுபவன்... இவர்களில் யார் முட்டாள்?
கண்டிப்பாக மூன்றாவது ஆசாமிதான்; ஜாமின் போட்டு, ஓட்டாண்டியாகி தெருவில் நிற்போர் அனேகம் பேரை எனக்குத் தெரியும்!
***
*பி.கருப்பையா, கொடைக்கானல்: அந்தக் கால, 'பெரிசு'களை வழியில் கண்டால் பேசுவீரா, ஓடுவீரா?
அவர்களே கண்டு கொள்ளாமல் போனாலும், வலியச் சென்று பேச்சுக் கொடுப்பேன்; காசு செலவில்லாமல் அனுபவச் செல்வம் கிடைக்குமே!
***