
நண்பர் ஒருவரது கெஸ்ட் ஹவுஸ்... இளம் தொழிலதிபர்கள் சிலர், வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர், வங்கி அதிகாரி ஒருவர் என, ஒரு சிறு கூட்டம்; பொழுதுபோக்கான, 'கெட் டு கெதர்' அபீஷியலான பேச்சுக்கள் எதுவுமே கிடையாது...
அனைவரும் நண்பர்கள் என்பதால், வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு, பொழுதுபோக்குச் சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.
தொழிலதிபர்களில் ஒருவர் விழுப் புரத்துக்காரர்; 40 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அவரது மூத்த மகன், இந்த வருடம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறார். தேர்வுக்குப் பின், சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் பிளஸ் டூ சேர்க்க எண்ணியுள்ளார்.
அப்பள்ளியில் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்றும், அதனால், என்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பது எளிது என்றும் நினைத்து, சென்னையில் உள்ள அப்பள்ளியை அணுகிய போது, அதற்கான தேர்வுகள் முடிந்து விட்டதென மொட்டையாகக் கூறி, கதவை அடைத்து விட்டனர்.
பணம் படைத்தவர், தொழிலதி பராயிற்றே... பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, அணுக வேண்டியவர்களை அணுகி, அவரது மகனுக்கென்று விசேஷ தேர்வு நடத்த வைத்து விட்டார்.
அவர் கூறினார்:
அந்தப் பள்ளியில், இந்த கல்வியாண்டில் பிளஸ் 1க்கு உள்ள காலியிடங்கள் மொத்தமே இருபது தான். இது நன்கு தெரிந்துமே, மொத்தம் 4,000 விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். ஒரு விண்ணப்பப் படிவத்தின் விலை, 500 ரூபாய். அப்ளிகேஷன் பாரத்தை விற்றதன் மூலமே, 20 லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டனர். கல்வி சிறந்த வியாபாரமாகி விட்டது, என்றார்.
'எல்.கே.ஜி., முதல் பிளஸ் டூ வரை பள்ளி நடத்துவதென்றால் பெரிய தொல்லையாக உள்ளது... நிறைய இடம், கட்டடம், ஆசிரியர்கள் தேவை என்பதால், இப்போது பிளஸ் டூ வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன தெரியுமா...' எனக் கேட்டேன்.
'இது பழைய சமாச்சாரங்க... அப்போல்லாம் இந்த மாதிரி பள்ளி ஆரம்பிக்க ஐம்பது ஆயிரம் ரூபாய், 'அன்பளிப்பு' கொடுத்தா போதும்...' என்றவர் இடையே நிறுத்தி, ஒரு வெண்குழல் வத்தியை பற்ற வைத்தார்; கல்வித் துறையில் உள்ள என் அறியாமையை எண்ணி நொந்தபடி, நண்பரின் வாய் பார்த்தேன்...
'இப்போ, இதே அன்பளிப்பு 75 ஆயிரமாயிடுச்சு... அப்புறம் என்ன... பள்ளி ஆரம்பித்து, கூடையில் பணத்தை அள்ளிச் செல்ல வேண்டியதுதான்,' என்றார் சேலத்தில் தொழிலதிபராக இருக்கும் இன்னொரு நண்பர்... இவ்வளவுக்கும் அவர் ஆளும்கட்சி அனுதாபி!
'அதெல்லாம் தூக்கி ஒடப்புல போடுங்க சாமியோவ்... என் பொண்ண எல்.கே.ஜி., யில சேர்க்கப் போனேன்... என்னையும், என் சம்சாரத்தையும் பரீட்சை எழுத சொல்லிப் போட்டாங்க....'என்றார் அந்த மது ரைக்கார நண்பர். அவரது இரண்டாவது குழந்தையின் வயது 12... எக்குத் தப்பாக வந்து சேர்ந்து விட்டது இந்தக் குழந்தை. அவர் ஒரு லாரி பிளீட் ஆபரேட்டர் - மிகப் பெரிய லாரி, 'மந்தை' யின் அதிபர்.
'க்ளுக்' எனச் சிரிப்பு வந்தது எனக்கு... அடக்கிக்கொண்டு, 'சொல்லுங்க, மொதலாளி... என்ன நடந்திச்சு?' எனக் கேட்டேன். அவரது பதிலுக்கு முன், லாரி அதிபரை பற்றி விவரிப்பது அவசியம்...
பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர், குடும்பத்தினர் அனைவருமே காங்கிரஸ்காரர்கள். நண்பரின் தகப்பனார், நேருவுடன் மாஸ்கோ சென்ற பெருமை பெற்றவர். அனுபவச் செல்வம் தான்; அவரிடம் கல்விச் செல்வம் பெரிதாகக் கிடையாது. தான் பெறாத செல்வத்தை தன் மகன், தவமிருந்து பல வருடங்கள் காத்திருந்து பெற்ற பிள்ளையாவது பெறட்டு@ம என்று எண்ணினார். பிள்ளையை ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார்.
'நம்ம ரத்தத்துல வீச்சருவா இல்ல ஓடுது.... நமக்கு எங்க படிப்பு ஏறும். அழுது, அடம் புடிச்சு மதுரைக்கே திரும்ப வந்து சேர்ந்துட்டேன். எங்க லாரி எல்லாம் ஒரு பெரிய கம்பெனியில பாடி கட்டுவோம்... அந்தக் கம்பெனி ஒரு ஸ்கூல் நடத்துது... அந்த ஸ்கூல்ல சேத்துவிட்டுது எங்க பெரிசு (அப்பா).
'அப்படியிப்படி பத்தாப்பு (பத்தாம் வகுப்பு) வந்துட்டேன். அப்பமே எனக்கு காதல் வந்திருச்சு... கூடப் படிச்சபுள்ள ஒன்னை லவ்வு பண்ணேன்... நான் மைதானத்துல (விளை யாட்டு) பஸ்டு... அந்த புள்ள பாடத்துல பஸ்டு...
'ஒரு நாளு, பள்ளிக் கூடத்துப் பக்கத்துல இருக்கற ரயில்வே தண்டவாளத்துல ரெண்டு பேரும் நடந்துகிட்டு இருக்கம்... இப்பம் போலவே, அப்பமும் எனக்கு பின் பாட்டு தேவை... பின்னாலேயே பள்ளித் தோழன் நடந்து வந்துக்கிட்டு இருந்தான்...
'அந்த நாள் வரையில நானும், அந்த புள்ளயும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறதா சொல்லிக்கிட்டது கிடையாது... அன்னைக்கு, எங்கிட்ட, 'ஐ லவ் யூ'ன்னு அந்தப் புள்ள சொல்லிச்சு... எனக்கு இங்கிலீசும் வெளங்காது...ஒரு மண்ணும் வெளங் காதுல்லா... 'என்ன... என்ன சொல்றே?'ன்னேன்.
'பின்னாலேயே வந்த பையன், 'அண்ணே... அக்கா உங்களை காதலிக்குதாம்... அதத்தான் இங்கிலீசுல சொல்லிச்சு...' என்றான். இத எதுக்கு சொல்லுதேமுன்னா, நம்ம இங்கிலீசு அறிவு அவ்வளவு தான்...' என்று முன்பு எப்போதோ கூறியிருக்கிறார். இப்போது, அவர் மகளை அதே பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, அவருக்கே பரீட்சை என்றதும் வந்தது, 'க்ளுக்!'
கம்மிங் பேக் டு த பாயின்ட் - லாரி அதிபரே தொடர்ந்தார்...
'நா பரீட்சை எளுத முடியாதுன்னு பேப்பரை தூக்கிப் போட்டுட்டேன்... மொத்தம் 28 கேள்வி... அதுவும் இங்கிலீசுல... எவனுக்கு எழுதத் தெரியும்... எம் பொண்டாட்டி கெஞ்சிக் கூத்தாடுனா... 'ஏங்க... நம்ம கொளந்த எதிர்காலம்...' அது, இதுன்னு கெஞ்சுனா... 'அடி போடி களுதை!'ன்னுட்டேன்.
'இருந்தாலும் மனசு கேக்கலே... என் புள்ள யாச்சே... இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சு, கூடவே ஒரு, 'சாமி'யார கூட்டிப் போயிருந்தேன். அவரு வெளியே காருல உக்காந்து இருந்தாரு... அவரக் கூப்புட்டு பரீட்சை எழுதச் சொன்னேன்.
'அப்புறம், ஸ்கூல் பிரின்சுபால் நேர்முகம் வச்சாங்க... அப்ப அவங்கள்ட்ட கேட்டேன்... 'ஏங்க... நாங்க தான் படிக்காத முண்டங்களா போயிட்டோம்... எங்க புள்ள குட்டியாவது நாலு எழுத்து படிக்கட்டுமேன்னு தானே பெரிய ஸ்கூல்ல சேக்க ஆசப்படுறோம். படிக்காத பெத்தவங்களுக்கு பரீட்சை வச்சு, புள்ளகள வெளிய தள்ளுனா, எங்க புள்ளைங்களும் மூடங்களாயிடுமே...' எனக் கேட்டேன்... வெத்து சிரிப்பு ஒண்ணு தான் பதிலா கெடச்சுது...' என்று முடித்தார்.
சேர்வராயன் மலையில் இருந்து சிலு சிலு வென காற்று வந்து முதல் மாடியில் இருந்த அந்த சிட் - அவுட்டைத் தழுவ, ஏலகிரிக்குச் செல்லும் வாகனங்களின் விளக்கொளி அவ்வப்போது மினுக், மினுக் என்று தெரிவதை ரசித்தபடி அமர்ந்து சிந்தித்தபோது, லாரி அதிபரின் வாதத்தில் இருந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது!
***