PUBLISHED ON : ஆக 25, 2013

*கே.ஸ்ரீனிவாசன், அசோக்நகர்: பனியனைத் துவைக்காமல், மூன்று நாள் போட்ட அனுபவம் உண்டா? ஹி... ஹி...
ஐயா, 'கப்பரே...' முண்டா பனியனா, கை பனியனா... சொல்லலியே... நம்ம, 'சைடி'லே பனியன் வாங்குவதே கிடையாது... அதற்கு வேறு தண்ட செலவு எதுக்கு?
***
** பி.கவுரிசங்கர், மேற்குமாம்பலம்: பட்டதாரிகள் அதிகம் பேர், 'டீ' கடை வைத்துள்ளனரே... இதுதான் படித்த தமிழனின் நிலையா?
'டீ' கடை நடத்துவதால், எந்த விதத்தில் குறைந்து போய் விட்டான் படித்த தமிழன்? 1000த்துக்கும், 2000த்துக்கும், 12 மணி நேரம் எவருக்கோ வேலை செய்வதற்குப் பதில், சுயமாக சம்பாதிக்கிறானே... பாராட்டுகள்!
***
*எஸ்.மயில்சாமி, கிருஷ்ணாபுரம் காலனி: பதினாறு வயது இளம் பெண் எழுதும் காதல் கடிதங்களை நம்பலாமா?
முதுகில், 'டின்' கட்டிக் கொள்ள ஆசை இருந்தால் நம்பலாம்!
***
*சி.துரைச்சாமி, சென்னை: பிரியாணி சாப்பாடு இக்காலத்து கண்டுபிடிப்பா, அக்கால கண்டுபிடிப்பா?
அக்கால முகலாய கண்டுபிடிப்பாகத்தான் இருக்க வேண்டும்! எப்போதோ, எங்கோ படித்த இன்னொரு அக்கால கண்டுபிடிப்பு இப்போது நினைவுக்கு வருகிறது... அப்பா ஷாஜகானை ஜெயிலில் போட்ட அவுரங்க சீப், அவருக்கு ஒரு வேளை உணவு மட்டும், ஒவ்வொரு நாளும் வழங்க உத்தரவிட்டாராம். இளம் ஆட்டின் தொடைக் கறியுடன், ஒரு மனிதன் உயிர் வாழத் தேவையான அளவு புரோட்டீன், விட்டமின், மினரல்களும், மற்ற சத்துக்களும் சேர்க்கப்பட்டு, தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க (ஷாஜகான் குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்பது மகன் உத்தரவு) சில வகை காய்கள் போட்டு தயார் செய்யப்படுமாம் இந்த உணவு. இதன் பெயர், 'ஷாஜகானி கூர்மா!'
- என்ன நாவில் நீர் சுரந்து விட்டதா?
***
**ஆர்.சங்கர், காளம்பாளையம்: வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், பிச்சைக்காரர்கள், பிச்சை எடுப்பதை விட்டு விடுவர் தானே?
அது உழைக்கச் சோம்பல்படும் கூட்டம்; வேலை கொடுத்தாலும், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த கதை தான் நடக்கும்!
***
*எஸ்.சந்திரன், லிங்கனூர்: சிலர் மது அருந்திய பின், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகின்றனரே எப்படி?
சரக்கு உள்ளே இறங்கியதும், 'டெம்ப்ரரி'யாக அசட்டுத் தைரியம் வந்து விடுகிறது. உடனே, 'இன்ஹிபிஷன்ஸ்' மறைந்து 'இஸ்'க்கு 'வாஸ்' போட்டு விடுவோமோ, 'ஹேஸ்'க்கு 'ஹேட்' சொல்லி விடுவோமே என்ற பயமெல்லாம் ஓடிப் போய், ஆங்கிலத்தை அவிழ்த்து விடுவார் ஐயா... சரக்கின் வீரியம் இறங்கிய அடுத்த நாள் அவரைப் பாருங்கள்... வெட்கப்பட்டு ஓடிவிடுவார்!
***
*வி.நடராஜன், காரைக்குடி: சமையலில் ஆண்கள் இறங்கினால், பெண்களால் ஜெயிக்க முடியுமா?
முடியாது! ஆண்கள் என்றுமே சிறந்த, 'குக்'குகளாக இருந்தே வருகின்றனர். அன்று: நளன்! இன்று: சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது... (யார் எனப் புரிந்திருக்குமே!)
***
** வி.ராசு: வீரபாண்டி: சராசரி மனிதன் ஒருவனின் வாழ்வில் எப்போது வெற்றி ஆரம்பமாகிறது?
கைமாற்று கேட்டு தலையை சொறிவதை என்று நிறுத்துகிறானோ அன்று!
***
