PUBLISHED ON : ஆக 25, 2013

பள்ளி நேரம் முடிந்து விட்டது. ஆனாலும், குழந்தைகள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
''அக்கா... அக்கா, கதை சொல்லுங்கக்கா.''
''இன்று என்ன கதை சொல்லப் போறீங்கக்கா?''
''இன்னிக்கு நான் சொல்லப் போகிறது நிஜமான சம்பவம்... உங்களை மாதிரி ஒரு சின்னப் பொண்ணுப்பத்தின அற்புதமான உண்மைக்கதை.''
''எங்களை மாதிரியா... தயவு செய்து சொல்லுங்கக்கா,'' மின்னும் விழிகளுடன், அவளைச் சூழ்ந்து கொண்டனர் சிறுமிகள்.
''அமெரிக்காவுல சிகாகோ மாகாணத்துல, ரோஸ்ன்னு ஒரு சின்னப் பொண்ணு இருந்தாள். ஆப்ரகாம் லிங்கன், அரசியலில் போராடி மேலே வந்து கொண்டிருந்த நேரம் அது. நகர்மன்ற தேர்தல், மேயர் தேர்தல், சிண்டிகேட் தேர்தல்ன்னு எல்லாத்துலயும் தோல்வியை சந்தித்ததால், ஆப்ரகாம் லிங்கன், கொஞ்சம் தளர்வாக இருந்தார். ஒரு நாள் ஒரு தேர்தல் கூட்டத்துல அவர் பேசிகிட்டு இருக்கும் போது, ரோஸ் அவரைப் பார்த்தாள்.
''அடுத்த நாள் அந்த சின்னப்பொண்ணு என்ன செய்தா தெரியுமா... லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதினா... அந்தக் கடிதத்தில், 'உங்க முகம் அழகாத்தான் இருக்கு. ஆனால், தாடி வெச்சுகிட்டா, அந்த ஒல்லி கன்னம் மறைஞ்சு, உங்க முகம் கம்பீரமாகி விடும். அதனால், இன்னும் அழகா ஆயிடுவீங்க'ன்னு எழுதினா... லெட்டர், லிங்கன் கைக்கு போச்சு... உடனே, அவர், அந்த கருத்தை ஏத்துக்கிட்டு, தாடி வளர்க்க ஆரம்பிச்சார்... வெற்றி மேல் வெற்றி. 'தன்னோட புதிய தோற்றம், உள்மனசுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து, எல்லா காரியங்களிலும் அதிக ஈடுபாடு கொள்ள வெச்சு, தொடர்ந்து வெற்றியைக் கொடுத்தது'ன்னு உணர்ந்தார். அதனால், அந்த சிறுமியை வரவழைத்து, நன்றி தெரிவிச்சார் ஆபிரகாம் லிங்கன்.
''நீங்க எல்லாருமே கூட மனசுக்கு பட்ட கருத்தை, நேர்மையாகவும், அடுத்தவர் மனசை காயப்படுத்தாமல் எடுத்து சொல்லுகிற, வலிமையை வளர்த்துக்கணும் சரியா... இன்றைக்கு அவ்வளவு தான், எல்லாரும் கிளம்புங்க பை பை.''
''சூப்பர் கதைக்கா... வரோம்க்கா,'' என்று ஆர்வத்துடன் சொல்லிவிட்டு, வீட்டிற்கு ஓடினர் மாணவ, மாணவியர்.
வெளியில் வந்த போது, வானம் மாலை நேரத்தின் பிரத்யேக அழகுடன் பளபளத்தது. பிறை நிலாவின் கால்வட்டம், அதீத அழகுடன் தெரிவதை ரசித்தபடி அவள் நடக்கத் துவங்கினாள்.
''உதயா மிஸ்... ஒரு நிமிடம்.''
திரும்பினாள்.
கதிர் நின்றிருந்தான். அவளைப் பார்த்ததும், அவன் முகத்தில், ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்ததை, அவள் கவனித்தாள்.
''குட் ஈவினிங் கதிர் சார்.''
''வகுப்பு முடிஞ்சதா?''
அவள் புன்னகையுடன், ''நல்ல கேள்வி...ரெண்டு பேரும் டீச்சரா இருக்கிறது ஒரே ஸ்கூல்ல... உங்க வகுப்பு முடிஞ்ச போதுதானே, என் வகுப்பும் முடிஞ்சிருக்கும்?''
''அதுதான் இல்லை.''
''எப்படி?''
''டீச்சரா இருக்கிற நீங்க, மூணரை மணிக்கு மேல அக்காவா மாறிடுறீங்களே... இந்த அழகான கதை சொல்லியை சுத்தி, அத்தனை வகுப்பு மாணவிகளும் வந்துடுறாங்களே,'' என்று அவன் சிரித்தான்.
''ஓ அதுவா?'' என்று அவளும் சிரித்தவள், ''அது சரி... உங்க வகுப்பு மாணவர்கள் பாதிப்பேருக்கு மேலே கணக்குல சென்ட்டம் வாங்கியிருக்காங்களாமே... உங்க கடுமையான உழைப்புக்கு, பாராட்டுகள் சார்.''
''நல்ல மூளைக்கார பசங்க உதயா... உங்களை மாதிரி.''
''என் வகுப்பு தமிழும், சரித்திரமும் சார்... சென்ட்டம் அவ்வளவு சுலபத்தில் வாங்க முடியுறதில்ல.''
''மொழியும், வரலாறும் வாழ்க்கைக்கு, எவ்வளவு முக்கியம் தெரியுமா... இன்னும் சொல்லப் போனா... அகழ்வாராய்ச்சி, என்னுடைய மிக விருப்பப் பாடம்... குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு வந்துட்டேன். இல்லேன்னா சரித்திர ஸ்டூடண்ட்டாக தான் இருந்திருப்பேன் உதயா.''
''அப்படியா... நல்லது சார்... நான் கிளம்பட்டுமா?''
''உதயா....ஒரு நிமிடம்''
''என்ன கதிர் சார்?''
''என் மனசு உனக்கு புரியலையா, இல்லே புரிஞ்சுக்க விரும்பலயா?'' என்றான் உதடுகள் துடிக்க.
அவளுக்கும் உள்ளே தடதடத்தது. 'அய்யோ... அந்த நேரம் வந்துவிட்டது. ஐய்யோ... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது எவ்வளவு கடினம்!'
''கதிர் சார் ப்ளீஸ்... சில விஷயங்களை, நாம ஒரு லெவல்ல நிறுத்தி வைக்கணும் சார்... நான் அப்படித்தான்.''
''எல்லா விஷயங்களையும் மூளை மட்டுமே முடிவு செய்யாது உதயா. மனசுக்கு மிக முக்கியமான இடம் இருக்கு வாழ்க்கையில... இல்லேன்னா உலகம் முழுக்க லேப்களும், ஆராய்ச்சிக் கூடங்களும்தான் இருக்கும்.''
உதயாவின் மொபைல் போன் அழைத்தது...
''சரி உதயா... நீ பாத்துக்கோ... உனக்காகவே நான் காத்திருக்கிறேன் என்பதை மறந்து விடாதே... வரேன்,'' என்று, அவன் திரும்பி நடந்தான்.
மொபைல் போனைப் பார்த்தாள். உடனே முகம் மலர்ந்தது. அது, அத்தையின் அழைப்பு.
''அத்தை எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா அத்தை... ஒரு வருஷம் ஆச்சு உங்களைப் பார்த்து,'' என்று படபடத்தாள் உதயா.
''உங்களை எல்லாம் பார்க்கலங்கற குறையைத் தவிர வேறு எதுவும் இல்ல உதயா... உங்க மாமா என்னை அப்படி கவனிச்சுக்கிறார். ஒரு விஷயம் சொல்லட்டுமா... இப்ப, என் வயித்துல ஒரு பாப்பா இருக்கா... எட்டு மாசம்.''
''அட, நிஜமாவா அத்தே... ரொம்ப சந்தோஷம். அத்தே...உங்களை உடனே பாக்கணும் போலிருக்கு.''
''வா வா வீட்டுலதான் இருக்கேன். அண்ணா வீட்டுல... அதாவது, உங்க வீட்டுல.''
''என்ன! நம்ம வீட்டுலயா... எப்போ வந்தீங்க அத்தே? அப்பாவும், அம்மாவும் உங்களை இன்வைட் செய்தாங்களா?அவங்க மனசை பாப்பா மாத்திட்டாளா? உங்க மேல இருந்த கோபம் போயிட்டுதா அத்தே?''
''இல்லம்மா,'' என்றாள் அத்தை வெறுமையான குரலில். ''ஒரு பிச்சைக்காரியைப் போல யாசகம் கேட்டு வந்திருக்கேன்மா. வயிற்றுப்பிள்ளைக்காரி நான். அண்ணன் வீட்டுல ஒரு நாள் இருந்து, அண்ணி கையால ஒரு வாய் வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்டுட்டு போயிடறேன்னு மடிப்பிச்சை கேட்டு வந்திருக்கேன். சரி... நீ வா நேரில் பேசுவோம்.''
''இதோ வந்துடறேன் அத்தை,'' என்று தொடர்பை துண்டித்தவளுக்கு, மனம் வலித்தது.
அழகு, அறிவு, பண்பு இது எல்லாவற்றையும் விட, மிக மென்மையான இதயமும், அன்பு மிகக் கொண்ட அத்தையை, உலக மகா சக்தி கொண்ட காதல் கைப்பற்றிக் கொண்டதில் அதிசயமே இல்லை தான். பி.ஏ., சோஷியாலஜி முடித்தவள், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, தன் வேலைத் திறமையால் பெரிய பதவியைப் பெற்று மேலே வந்தாள். கம்பெனியின், 'டிரஸ்ட்' அவளிடம், முக்கிய பணிகளை கொடுத்தது. ஏழை மக்களின் மருத்துவ செலவுகளுக்கென்று ஒதுக்கிய நிதிக்கு, அவளை பொறுப்பாக போட்டு, சேவை செய்யும் பொறுப்பை கொடுத்தது. அப்பணியின் நிமித்தம், தகுதியான நோயாளிகளைத் தேடி, அரசு மருத்துவமனைகளுக்குப் போன போது தான், செல்வராஜை சந்தித்தாள்.
அதுவரை, அம்மருத்துவமனையில் பார்த்திராத அந்த புதிய இளம் மருத்துவரைக் கண்டு முதலில் திகைத்தாள். பின், அவன், எளிய மக்களிடம், நோயாளிகளிடம் காட்டிய பரிவு, பொறுமை, மனிதனை மனிதனாக மதிக்கிற குணத்தை கண்டு பிரமித்தாள். தவிர, அவளின் தேவைகளை சரியாகப் புரிந்து கொண்டு, மிக அடிமட்டத்தில் இருக்கும் உயிருக்கு போராடுகிற ஏழை நோயாளிகளை, தேர்ந்தெடுத்துக் கொடுத்தான். முதலில் அவன் மேல் உண்டான மதிப்பு, மெல்ல மெல்ல கனிந்து, பின், காதலாக பரிணமித்தது.
விஷயம் தெரிந்து வீடு ரணகளமானது; அப்பா போர்க்கோலம் பூண்டார்; பின், அழுது கெஞ்சிப் பார்த்தார். அம்மா, அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழுதாள். அத்தையும் அழுது கொண்டு நின்றாளே தவிர, தன் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை.
மூன்று மாத போராட்டங்களுக்குப் பின், ஒரு நாள் இரவு, அத்தை வீட்டை விட்டு ஓடிப் போனாள்.
அந்த அத்தை தான் வந்திருக்கிறாள்... அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு. அந்த இரும்பு இதயம், இளகியதா என்ன...
உதயா நடையை எட்டிப் போட்டாள். அத்தையை உடனே பார்க்க வேண்டும் போல மனசு தவித்தது. பாவம் தனியாக அவள் எவ்வளவு தவித்திருப்பாள்... தன் அண்ணன் குடும்பத்தை நினைத்து நினைத்து எவ்வளவு உருகியிருப்பாள்...
மறுபடி மொபைல் போன் அழைத்தது. மொபைலை எடுத்துப் பார்த்தாள். தம்பி ஜீவா லைனில் இருந்தான்.
''சொல்லு ஜீவா... ஏய் உனக்கு விஷயம் தெரியுமா?'' என்றவள், ''அத்தை வந்திருக்காங்க வீட்டுக்கு,'' என்றாள்.
''என்ன?'' என்றான் சகோதரன் ஆச்சரியத்துடன். ''அத்தையா... எப்பிடி எப்பிடி உதயா? நம்ம வீட்டு ஹிட்லர் சம்மதிச்சுட்டாரா?''
''அத்தை, அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்திருக்கிறதா சொன்னாங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு ஜீவா.''
''அதுக்குத்தான் உனக்கு போன் பண்ணினேன் உதயா... என் பிராஜெக்ட்டுக்கு முதல் இடம் கிடைச்சிருக்கு உதயா. சென்ட்டம் மார்க். இது யூனிவர்சிடியிலயே பர்ஸ்ட் டயமாம். இன்னைக்கு காலேஜ் சிண்டிகேட் மீட்டிங் இருக்கு. என் பிராஜெக்ட் பத்தி பேச, என்னை ஸ்பெஷலா அழைச்சிருக்காங்க. வர கொஞ்சம் லேட்டாகும் உதயா.''
''ரொம்ப சந்தோஷம் ஜீவா... எனக்கு அப்பவே தெரியும்... உன் பிராஜெக்ட் ரொம்ப ஸ்பெஷல்ன்னு...''
''உதயா ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா... நான், கடைசியாண்டு பொறியியல் பட்டத்திற்காக, என்ன பிராஜெக்ட் செய்யலாம்ன்னு யோசித்துக் கொண்டிருந்தபோது, அத்தை தான், 'வண்டி, வாகனம், பிரேக், கியர், நானோன்னு பிராஜெக்ட் செய்ய நிறைய பசங்க இருப்பாங்க. ஆனா, அதுல, மனித நேயத்தையும் கலந்து நீ யோசிக்கணும் ஜீவா... கிளோபஸ் கிராமம்ன்னு உலகமே சுருங்கிட்டாலும், இன்னும் நம்ம நாட்டுல கையால மலம் அள்ளுறது நடந்துகிட்டுதானே இருக்கு... மலம் அள்ளும் கருவி ஒன்றை நீ உருவாக்கு ஜீவா. மனசுக்கு நிறைவா இருக்கும். மிகப் பெரிய சமுதாயப் பணி செஞ்ச திருப்தியும் கிடைக்கும்பா...' என்றாரே நினைவிருக்கா...இதோ அத்தை சொன்னதை நிறைவேற்றி விட்டேன்,'' என்றான் ஜீவா.
உதயா தன் மகிழ்ச்சியை தம்பியிடம் பரிமாறிவிட்டு, வேகமாக வீட்டிற்கு நடந்தாள்.
அத்தை கொஞ்சம் எடை போட்டு, நிறம் கூடி, வெள்ளிக் குடம் போல பளபளத்தாள்.
''உதயா என் கண்ணே எப்படி இருக்கே?'' என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டபோது, இமைகள் ஈரத்தில் தெறித்தன.
''நல்லா இருக்கேன் அத்தே... உங்க ஆசிர்வாதத்துல...''
''அதென்ன என் ஆசிர்வாதம்...'' என்று அத்தை சிரித்தாள்.
''பள்ளிக்கூடத்துல எனக்கு ரொம்ப நல்ல பேரு அத்தை... மெயினா என் வகுப்பு குழந்தைகள் என்கிட்ட உயிரா இருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம், உங்க, 'அட்வைஸ்' தான் அத்தை.''
''புரியலயே...''
''டீச்சராகப் போறேன்னு நான் சொன்னதும், நீங்க என்ன சொன்னீங்க... வெறும் பாடம், சிலபஸ், மனப்பாடம்ன்னு எந்திரமான டீச்சரா இருக்காம, வகுப்புல நிறைய கதைகள், சாதனை மனிதர்களைப் பத்தி சொல்லணும்; விவசாயம் எவ்வளவு முக்கியம்ன்னு புரிய வைக்கணும்; காருண்யம்னா என்னனு சொல்லணும். நேரத்தை எவ்வளவு அக்கறையா கையாளணும்னெல்லாம் சொல்லித் தரணும்ன்னும், ஆசிரியர் தினமும் பேப்பர், புத்தகம்ன்னு வாசிக்கணும்ன்னு சொன்னீங்க... குழந்தைகளை எப்பவும் மகிழ்ச்சியா வைத்திருக்கணும்ன்னு சொன்னீங்களே அத்தை... கதிர் கூட, உங்களை மாதிரி, தனக்கு ஒரு அத்தை இல்லையேன்னு சொல்லியிருக்காரு, தெரியுமா?''
''கதிரா... யார் உதயா அது?''
''வந்து அத்தை... அது வந்து...''
''காதலா?''
''அத்தை...'' என்றாள். உடல் தூக்கிப் போட்டது.
''உதயா வேண்டாம்மா... நான் பட்டது போதும். நீ சந்தோஷமா இருக்கணும்மா... அன்பான உறவுகளைப் பிரிந்து தினம் தினம் மனதுக்குள் அழும் சித்திரவதை உனக்கு வேண்டாம்மா,'' என்பதற்குள், குரல் கரைந்து, அழுது விட்டாள் அத்தை.
கதிரின் முகம் கண்களுக்குள் வந்தது. அத்தனை மாணவர்களையும், கணக்குப் பாடத்தில் சூரர்களாக்குவது என்பது எப்பேர்ப்பட்ட சாதனை! அதன் பின்னால் எவ்வளவு உழைப்பும், நம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும்... கதிர்... கதிர் நீ எவ்வளவு நல்லவன்; மென்மையானவன். உன் மேல் நான் கொண்ட மதிப்பும், அதனால் ஏற்பட்ட அன்புக்கு பெயர் தான் காதலா... அய்யோ அப்படியானால் நான் என்னவாவேன் கதிர்... இன்னொரு அத்தையாகவா...
அத்தை மவுனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வானில் நிலவு, இரவு உலகின் சாட்சியாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.
அப்பாவும், அம்மாவும் இறுக்கமான முகத்துடன் உணவை முடித்து, தூங்கப் போய் விட்டனர்.
அத்தையை அழைத்துக் கொண்டு, உதயாவும், ஜீவாவும் மாடிக்கு வந்தனர்.
''அங்கிள் எப்படி இருக்கிறார் அத்தை?'' என்று கேட்டான் ஜீவா.
அத்தையின் முகம் ஒரு கணம், தாமரையைப் போல மலர்ந்து சிவந்தது.
''அருமையாக இருக்கிறார் ஜீவா... என்னை, எங்கள் தோட்டத்தை, பறவைகளை, தன் நோயாளிகளை என, அனைத்தையும் உயிராக கவனிக்கிறார்... அண்ணனும், அண்ணியும் மட்டும் எங்களை சேர்த்துக் கொண்டால் போதும்... என் வாழ்க்கை முழு வடிவம் பெற்றுவிடும் ஜீவா... சரி, என் வாழ்த்துகள் உனக்கு... அடுத்தது என்ன?''
''சினிமா,'' என்றான் அவன்.
''என்ன!'' என்று உதயா அதிர்ந்தாள். அத்தையின் முகம் சட்டென்று மாறிப் போனது.
ஜீவா பொறுமையுடன் சொன்னான்.
''எனக்குள்ளே, மெல்ல மெல்ல உருவாகி உருப்பெற்ற கனவு இது... மலம் அள்ளும் எந்திரத்துக்காக மனிதர்களை சந்திச்சபோது, எனக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இவர்களுக்காக மட்டுமல்ல, இவர்களைப் போல கடைநிலையில் உள்ள எளிய மக்களுக்காக, ஏதாவது செய்யணும்னு ஒரு பொறி... ப்ராஜெக்ட்ல கிடைச்ச முதல் வெற்றி, என்னை கல்லூரிகளுக்குள்ள பிரபலமாக்கியது... நான் என்ன சொல்கிறேன்னு எல்லாரும் கேட்டாங்க... பெரிய திரையில, நிதர்சனமான உண்மையை, மனம் நெகிழும்படியாக சொன்னா, அதுக்கு, நிச்சயமா, 'எபெக்ட்' இருக்கும்... நான் இப்ப அசிஸ்டென்டா சேரப் போறேன் அத்தை... அந்த வேலை தான் இனிமே...''
என்ன சொல்கிறான் இவன்... சினிமாவா... அண்ணனுக்கு மகனாகப் பிறந்து எப்படி இப்படி ஆசைப்படுகிறான்... அய்யோ, மறுபடி ஒரு பாரதப் போரை வீடு தாங்குமா! பாசமலர் சிவாஜி கணேசனைப் போல, அன்பைக் கொட்டி, தூக்கி வளர்த்த தங்கையையே வேண்டாமென்று தூக்கி எறிந்த அண்ணன், அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத அண்ணி... அய்யோ! நான் கொடுத்த காதல் அடியின், சூழலே மாறாத நிலையில் மறுபடியும் ஒரு காதலா...
அத்தை நெஞ்சு சுருங்கி, தூக்கம் கெட்டுப் போனாள்.
இல்லை... இது சரியாக வராது. தெரிந்தே வேதனைகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கக் கூடாது. என் அன்பான உறவுகளைப் பிரிந்து நான் பட்ட வேதனைகளே, நாலு தலைமுறைக்கு தாங்கும்.
'உதயா, அண்ணன் எதிர்க்கிற காதல் உனக்கு வேண்டாம்...ஜீவா, அப்பாவை எதிர்த்து, உன் கனவு ஜெயிக்க வேண்டாம். ஏனென்றால், வாழ்க்கையில் ஜெயிப்பது முக்கியம் தான். ஆனால், உறவுகளை இழந்து பெறும் வெற்றி தோல்விக்கு சமமானது. அந்த வலியும், வேதனையும் என்னுடன் போகட்டும். உங்களுக்கு வேண்டாம்...' மனதுக்குள் புலம்பினாள் அத்தை.
அத்தை கிளம்புகிற நாள் வந்தபோது, அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். இருவரையும் அழைத்து கொண்டு மாடிக்கு வந்தபோது, அதே நிலவும் காத்திருந்தது.
''உதயா, ஜீவா... மிக முக்கியமான விஷயங்கள் பற்றி நான் உங்களிடம்...'' என்று அவள் ஆரம்பிப்பதற்குள், உதயா, புன்னகையுடன் அத்தையின் தோளைப் பற்றிக் கொண்டு,''அத்தை, நாங்களும் முக்கியமான விஷயம் தான் பேசப் போகிறோம்... நான் கதிரை கல்யாணம் செய்து கொள்வேன்... ஜீவா திரைத்துறைக்குப் போவான்...''
''என்ன... என்ன சொல்கிறீர்கள்?'' பதறினாள் அத்தை.
''ஆமாம் அத்தை... கதிர் நல்லவன். முக்கியமாக நேர்மையானவன்... நானும், அவனும் வாழ்கிற வாழ்வு, மனம் நிறைந்த காவியமாக இருக்கும்,'' என்றாள் உதயா.
''அத்தை... கலைத் துறைக்கு நான் சம்பாதிக்கவோ, பிரபலமாவதற்கோ, இன்பம் துய்க்கவோ செல்லவில்லை... அது ஒரு மானிட சேவை மையம் என்ற உணர்வுடனே போகிறேன்.''
''அய்யோ என் கண்மணிகளே... எல்லாம் சரிதான். ஆனால், அப்பா! அவர் மனசு... சம்மதிப்பாரா, ஒப்புக் கொள்வாரா? உதயாவின், கதிரை ஏற்றுக் கொள்வாரா? உன் கனவை புரிந்து கொள்வாரா? அப்படி ஏற்காதபட்சத்தில்...''
''அத்தை செய்த தவறை, நாங்கள் செய்ய மாட்டோம்.''
அவள் விலுக்கென்று நிமிர்ந்தாள்.
''ஆமாம் அத்தை... காத்திருப்போம். உதயாவின் காதல் காத்திருக்கும்; என் கனவும் காத்திருக்கும். பெற்றோர் சம்மதம் இல்லாமல் நாங்கள் எந்த வேலையிலும் இறங்க மாட்டோம். அப்பா, அம்மா இருவரும் கதிரை சந்திப்பர்; அடிக்கடி உரையாடுவர். காலம் அவர்களுக்கு கதிர் என்கிற நல்லவனை உணர்த்தும்; அவர்கள் மன நிறைவுடன் சம்மதிப்பர். 'இது நல்ல காதல், இதை வாழ வைப்போம்...' என்று அவர்களாக சொல்லும் வரை உதயா காத்திருப்பாள்.''
''ஜீவாவும், அப்படித்தான் அத்தை... வீட்டை முறித்துக் கொண்டு கனவுலகிற்கு ஓட மாட்டான். தான் எவ்வளவு பொறுப்பானவன் என்பதைப் புரிய வைப்பான். அவன் கண்டுபிடிப்பிற்கு கிடைக்கப் போகும் தொகையை வைத்து, கல்விக் கடனை அடைப்பான். அப்பாவிடம் இரண்டு வருடம் கேட்பான்.. அந்த இரண்டு வருடங்களில் தன் பயிற்சி, முயற்சியால் கலைத் துறைக்குள் நுழைய பாடுபடுவான்... அப்படி தோற்றுப் போனால், திரும்பி வந்து தனக்கு ஏற்ற வேலையில் அமர்வான்...
''அத்தை, அப்பா வை இன்னும் உறுத்துவது உன் காதலோ, கல்யாணமோ, கணவரோ அல்ல... நீ செய்த காரியம்... நடு இரவில், அவர் தூங்கும்போது, ஓடிப் போன அவலம். வளர்த்த தங்கை முதுகில் குத்திய வலி... அதைத் தான் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
''ஆமாம் அத்தை... மரணம் கூட ஏற்படுத்தாத வலியை, நம்பிக்கை துரோகம் மிக சுலபமாக செய்து விடுகிறது,'' என்றாள் உதயா.
''உண்மை தான்,'' என்ற அத்தை, அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ''என் தங்கங்களே... உங்களைப் பார்க்கையில் ரொம்ப பெருமைப்படுகிறேன். இந்த சிறுவயதில், உங்களுக்குதான் எவ்வளவு மன முதிர்ச்சி... எத்தனை பக்குவமான தொலைநோக்கு பார்வை. அருமை என் கண்மணிகளே... இந்த பொறுப்புணர்ச்சிக்கு நிச்சயம் உங்களுக்கு பரிசு கிடைக்கும்,'' என்று, அவள் தழுதழுப்பதை, மாடிப்படி ஏறி வந்து கொண்டிருந்த அப்பா, இவர்கள் பேசுவதைக் கேட்டு, கண் கலங்கினார்.
***
உஷா நேயா
