
ரா.ஜெயக்குமார், பீளமேடு: குடும்பப் பெண்கள் சிலர் இரவில் அணியும், நைட்டியை போட்டுக் கொண்டு, மார்க்கெட் போன்ற வெளியிடங்களுக்கு வருவது பற்றி... 
நம்மூர் ஆசாமிங்களோட இதே ரோதனையாப் போச்சு. 'பாவாடை தாவணி அணியாமல், சுரிதார் அணிகின்றனரே... தமிழ் பண்பாடே போச்சே...' என, ஒரு சாரார் புலம்புகின்றனர். 'ஜீன்ஸ் பேன்ட், மிடி அணிகின்றனரே' என இன்னொரு பக்கம். அம்மணிங்களுக்கு இந்த உடை, சவுகரியமா இருக்கலாம் அணியுறாங்க... நீங்க ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? நைட்டி மாட்டிக்கிட்டு மார்க்கெட்டுக்கு வந்தா, அவங்களுக்கு தொந்தரவில்லாம, ரசிக்க முடிஞ்சா ரசியுங்க, இல்லே கண்ண மூடிகிட்டுப் போங்க! 
மா.மகாலட்சுமி, மேற்கு தாம்பரம்: அந்துமணி அண்ணே...ஒரு முறை காதலித்து, அதில் தோல்வியைத் தழுவிய பின், மீண்டும் காதலிக்கலாமா? 
முயற்சி திருவினையாக்கும் என்பதைக் கேள்விப்பட்டது இல்லையா... ம்...'பார்ட்டி' அம்புட்டா ஆரம்பியுங்க! 
வி.ஆரோக்கியமேரி, நெகமம்: நம்பிக்கை வைப்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? 
அது இல்லாவிட்டால், பஸ்சில், செல்லக் கூட தயக்கம் ஏற்பட்டு, 'டிரைவர் மரத்தில் மோதிட்டா...' என்றெல்லாம் எண்ணத் தோன்றிவிடும். நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள்; நம்பும் ஆளை நல்லா எடை போட்டு விட்டு! 
எஸ்.பி.இளங்கோ, அருப்புக்கோட்டை: அந்துமணியாரே... நம்ம ஊரு ரோடுகள் எப்போதும் வாயைப் பொளந்து சிரிக்கின்றனவே... எப்போது வாயை மூடும்? 
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, கான்ட்ராக்டரின் முதுகில் தோசை சுட ஆரம்பிக்கும் போது! 
பி.செல்வராணி, காளையார் கோவில்: கணவனை பிரிந்து, தாய் வீட்டில் இருக்கும் என் தோழி, வீட்டில் இருக்கும் போது, தாலி அணிந்து கொள்கிறாள். வெளியில் போகும் போதோ கழட்டி வைத்து விட்டுச் செல்கிறாள். தாலி பெண்ணுக்கு வேலி என்று எவ்வளவோ சொல்லி விட்டேன். கேட்க மாட்டேன் என்கிறாள். இதற்கு என்ன செய்வது? 
பெண்களுக்கு மனம் மட்டும் தான் வேலி; எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும், அவர்களால் அதைத் தகர்க்க முடியும். வெளியில் செல்லும் போது, தாலி அணிந்து செல்வதால் மட்டுமே, அது, உங்கள் தோழிக்கு வேலியாக அமையப் போவது இல்லை. எனவே, நீங்கள் மனம் குழம்ப வேண்டாம்! 
கு.மருதுபாண்டியன், காஞ்சிபுரம்: மற்றவர்களிட மிருந்து கற்றுக் கொள்வது; தானே அனுபவித்து உணர்வது - எது படிப்பினை யூட்டும்? 
'தம்பி... அது நெருப்பு, தொட்டால் சுடும்; கை பொத்து விடும்...' என்கிறார் விவரமறிந்த ஒருவர், 'இல்லே... சூடு எப்படி இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாகணும். அதன் மூலம் எனக்கு படிப்பினை வரும்...' என்றால், அது காஸ்ட்லி படிப்பினை. எது தேவலாம்? 
ம.கண்ணன், ஆவடி: பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வழக்கம் உண்டா? 
வழக்கம் இருந்தது; கைகால் முடமானவர்களுக்கும், நடக்கக் கூட சிரமப்படும் முதிய பிச்சைக்காரர்களுக்கும். முடமான பலர், நாற்காலிகளுக்கு ஒயர் பின்னுவது, ஒயர் கூடைகள் செய்து விற்பது, இவைகளைப் பார்த்த பின், முடவர்களுக்கும், 'நோ பிச்சை!'                      
எஸ்.சிந்துஜா, புளியம்பட்டி: எவ்வளவு தான் உதவி செய்தாலும், முதுகுக்குப் பின் பேசுகின்றனரே... 
மனித இயல்பு இது. உதவி செய்த மகிழ்ச்சியை மட்டுமே மனதில் கொள்ளுங்கள். முதுகுக்குப் பின் பேசுவதை சட்டையே செய்யாதீர்கள்!

