
எங்குமே பதிவு செய்யப்படாத, ஒரு சில சங்கங்கள் சென்னையில் உள்ளன. அதில் ஒன்று, 'மனைவியருக்கு பயந்த உ.பா., கணவர்கள் சங்கம்!' 
இதன் உறுப்பினர்கள், பெரும்பாலும் இன்ஜினியர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள். 
இத்துறையில் பணியாற்றுபவர்கள், திருமணமான புதிதில், மனைவியர் தலையில் மிளகாய் அரைத்து, 'இன்கம்டாக்ஸ் ஆபிசரைப் பார்க்கப் போகணும்; கிளயன்ட்டை மீட் பண்ணணும்...' என்றோ, 'கட்சிக்காரருடன் டிஸ்கஷன்... மாஜிஸ்ட்டிரேட்டுக்குப் பார்ட்டி...' என்றோ, 'மிஷின் பிரேக் டவுண். பாம்பேயில் இருந்து பார்ட்டி வருகிறார்... பிசினஸ் சம்பந்தமாகப் பேசணும்...' என்றோ, மனைவியரிடம் சாமர்த்தியமாக டுபாக்கூர் அடித்து, நண்பர்களுடன் உ.பா., அருந்தி, ஊர் சுற்றி, இரவு, 11:00 - 12:00 மணிக்கு, வீடு சென்று பழக்கப்பட்டு இருப்பர். 
தன் கணவர் சொல்வது எல்லாம் மழுப்பல் என்பது, மனைவியருக்கு, நாலைந்து வருடத்திற்கு பின்பே தெரிய வரும். அந்நேரம் ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து இருக்கும். அவற்றை வளர்ப்பதிலேயே, மனைவியர் கவனம் இருந்தாலும், கணவரின் செயலை கண்டிக்க ஓரளவு தைரியமும் வந்து இருக்கும். 
கண்டிப்பு துவங்கும் நேரத்தில், அடங்காப்பிடாரன் களாக, கணவன்கள் முரண்டு பிடிப்பர்; எதிர்த்துப் பேசுவர்; சண்டையும் போடுவர். இப்படியே அடுத்து ஐந்து வருடம் ஓடி விடும். இதற்குள், குழந்தைகள் ஓரளவு பெரியவர்களாகி, தமக்கு சாதகமாகவும் ஆகிவிட்டதால், முழு மூச்சுடன் கணவனை எதிர்க்கும் தைரியமும், குழந்தைகள் மூலம் கணவனைப் பணிய வைக்கும் கலையையும் கற்று இருப்பர் மனைவியர். 
சூழ்நிலைகள் மாறி வருவதை உணரும் கணவன்கள், தமக்குள் புலம்பி, ஒரு தீர்மானத்துக்கு வருவர். அது, இரவு, 8:00 - 8:30 மணிக்குள், வீடு திரும்ப வேண்டும் என்பது. அவ்வளவு சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் என்றால், மாலையிலேயே, 'கச்சேரி'யை ஆரம் பிக்க முடிவு செய்வர். 
இவர்கள் தான், 'மனைவியருக்குப் பயந்த உ.பா., கணவர்கள் சங்க' உறுப்பினர்கள். 
இந்த சங்க உறுப்பினர்களில் ஒருவர், நம் அலுவலகத்திற்கு, மெஷினரி சப்ளை மற்றும் சர்வீஸ் செய்யும் இன்ஜினியர். மனைவியின் கட்டுப்பாடு தாங்காததால், இப்போதெல்லாம் மாதத்தில் பாதி நாட்கள், 'மெஷின் தயாரிப் பாளருடன் மீட்டிங்... பாரினுக்கு சப்ளை செய்த மெஷின் சர்வீஸ்...' எனக் கூறி, வெளிநாடு ஓடி விடுகிறார். 
சமீபத்தில், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தவர், என்னை சந்தித்தார். அவரது தம்பி ஒருவர், முன்னாள் கிழக்கு ஜெர்மனி பகுதியில் டாக்டராக பணி புரிந்தவர்; தற்போது லண்டனில் 'பிராக்டீஸ்' செய்கிறார். அவரைப் பற்றியும், பொதுவான விஷயங்கள் குறித்தும் விசாரித்தேன். 
'ஜெர்மனி ரொம்ப மோசமாயிடுச்சுப்பா... வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிடுச்சு. ஜெர்மனியோட மொத்த ஜனத்தொகையான எட்டு கோடியில், 30 லட்சம் பேர் வேலை யில்லாமல் இருக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்... இதனால்,ஜெர்மானிய இளைஞர்களின் கோபம், அங்கு பணியாற்றும், வெளிநாட்டவர் மீது திரும்பியுள்ளது. இவர்கள், தங்களை நியோ  நாஜிக்கள் என, அழைத்துக் கொள்வதுடன், வெளிநாட்டவர் மீது தாக்குதலும் நடத்து கின்றனர். நான் அங்கே போயிருந்த போது, ஒரு சர்தார்ஜியின் ஓட்டலை தாக்கி, துவம்சம் பண்ணி விட்டனர். மாலை 6:00 மணிக்கு மேல், தெருவில் நடப்பதே ஆபத்தாக உள்ளது. 
'பிரான்ஸ் நாட்டிலும் இதே கதைதான்... அங்கே கருப்பர், அல்ஜீரிய நாட்டவர், இலங்கைத் தமிழர்கள் அதிகம். பாரீஸ் நகரில், இவர்கள் ஒவ்வொரு ஏரியாவையும் தாக்கிக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஏரியாவிலும், ஒவ்வொரு நாட்டவர், 'பிஸ்தா!' 
'இலங்கைத் தமிழர்களை, அல்ஜீரிய நாட்டு முஸ்லிம் அகதிகள் தாக்குவதும், இவர்கள், அவர்களை தாக்குவதும் சகஜமாக உள்ளது. மற்றபடி, நல்ல பணியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சொகுசாகவே வாழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இந்த, 'டிரிப்'பில் அறிமுகமானார்.
'லா சாப்பள் ரோடில், முழுக்க பர்னிஷ் செய்த அப்பார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு பிடித்துக் கொடுத்தார். சொன்னால் நம்ப மாட்டாய்... வாடகை ரொம்ப சீப். ஒரு நாளைக்கு, 120 ரூபாய் தான். போனமுறை நீ ஜெர்மனி போயிருந்த  போது, அப்பார்ட்மென்டுக்கு எக்கச்சக்கமா வாடகை கொடுத்து விட்டாய். இனி போகும் போது, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லு...' என்றார். 
ஐரோப்பிய நாடுகளும், இனி, நம்மை வரவேற்காது போலும். நம்மவர்கள் எக்கச்சக்கமாக குடியேறிவரும் அமெரிக்கா விலும் இதுபோன்ற பிரச்னை வராமல் இருந்தால் சரி! 
ஆடியோ, வீடியோ கடை, கல்யாண மண்டபம் என, நடத்தி வரும் அன்பர் ஒருவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர், அன்று சபைக்கு வந்து, எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து, 'ரோகிணி நட்சத்திரத்துல குழந்தை பிறந்ததாலே, என் மச்சான்... அதாவது, குழந்தையோட தாய்மாமன், ரொம்ப, 'ஒரிடா' இருக்கான். ரோகிணி நட்சத்திரத்தில குழந்தை பிறந்தா, தாய்மாமனுக்கு டேஞ்சராமே...' என்றார். 
அருகே நின்று, ஸ்வீட்டை மென்று கொண் டிருந்த குப்பண்ணா, இடையில் புகுந்தார்... 
'ரோகிணி நட்சத்திரத்துலே குழந்தை பிறந்தா, தாய் மாமனுக்கு ஆகாதுன்னு எல்லாரும் சொல்றது வாஸ்தவம்தான். ஆனா, அது  தவறு. இதுக்கு உதாரணமா, பகவான் கிருஷ்ணனை சொல்லுவா... ஏன்னா, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கிருஷ்ணன், தாய் மாமனாகிய கம்சனைக் கொன்னுட் டாங்கறதுனால தான்! 
'கம்சன் கிருஷ்ணனுடைய தாய்மாமனே அல்ல. 
'வட மதுரையை ஆண்ட உக்கிரசேனன் என்பவனுடைய மகன் கம்சன். உக்கிரசேனனு டைய தம்பி தேவகன். இந்த தேவகனுடைய மகள் தான் தேவகி. அதாவது, கம்சனுடைய சித்தப்பா பொண்ணு தான் தேவகி. அதனால, தேவகியோட மகனாகிய கிருஷ்ணனுக்கு, நேர் தாய்மாமா இல்லே கம்சன்; ஒண்ணு விட்ட தாய்மாமன் தான் கம்சன். அதனால, அம்பி... இந்த கதைய ஒம் மச்சான்ட்ட சொல்லி, 'ஒர்ரி' பண்ண வேண்டாம்ன்னு சொல்லி வை...' என்றார் குப்பண்ணா. 

