
பி.தர்ஷிணி,சின்னச்சேலம்: என் பெண் குழந்தை, மிகவும் பிடிவாதம் செய்கிறாள். எதைச் செய்யாதே என்கிறோமோ அதைத்தான் செய்கிறாள். அவளை அடிக்கக் கூடாது என்கிறார் என் கணவர். அடிக்காமல் எப்படி திருத்துவது?
இதுபோன்ற குழந்தைகளை ரொம்ப நாசூக்காக, கையாள வேண்டும். அடித்தாலும் பயப்படாத குணம் இவர்களிடம் இருக்கும். நட்பு பாராட்டி, மெதுவாக வளைத்து, வழிக்குக் கொண்டு வர வேண்டும். பத்து கேட்டால் ஒன்று கொடுத்து, சமாதானம் செய்ய வேண்டும். முக்கியமான இன்னொரு விஷயம், அடித்தால் திருந்தும் என்ற எண்ணத்தையே அகற்றுங்கள். 'ம்... என்ன பெரிய தண்டனை கொடுக்கப் போறாங்க? நாலு மாத்து விழும். அவ்வளவு தானே' என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டு விடுவர். அப்புறம், அவர்களை சமாளிப்பது பெரும் சிரமமாகி விடும்!
க.செல்வக்குமார், புளியம்பட்டி: தன்னிடம் அதிக குறைகளை வைத்துக் கொண்டு, பிறரது குறையை ஆராய்ந்து பேசுபவர் பற்றி...
இவர்களைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அவர்கள் கூற்றில், சில நல்லதும் இருக்கலாம், அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!
ம.சுகன்யா, காடம்பாடி: என் தோழி ஒருத்தி, எப்பொழுதும், பிறரை மட்டம் தட்டி பேசுவாள். அவள் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு, அவர்கள் பதில் தெரியாமல், அனைவரின் முன்னிலும் அசடு வழிவதைப் பார்த்து சந்தோஷப்படுவாள். இவளை எப்படித் திருத்துவது?
இதைத் தான், 'சேடிஸ்டிக் பிளஷர்'என்பர். உங்கள் தோழிக்கு தெரிந்திருக்கும் விஷயம், எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரை மடக்க, நீங்களும், நாலு பேர் முன்னிலையில், எதிர் கேள்வி போடுங்கள்; அப்புறம் பலனைப் பாருங்கள்!
வ.ராஜசேகர், நரசீபுரம்: வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் அந்துமணியாரே...
உழைக்க வேண்டும்; அதற்காக மண்ணை வெட்டுகி றேன், கல்லைத் தூக்குகிறேன் என்றில்லாமல், சிந்தித்து விடா முயற்சியுடன், முன்னேற வேண் டும். வாழ்வின் வறு மையை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தகுந்த துறையில் இறங்க வேண்டும்!
எஸ்.சந்திரா, அசோக் நகர்: பெற்றோர், மற்றும் தங்கையர்க்கு தெரியாமல், மனைவிக்கு மட்டும், 'பார்சல்கள்' வாங்கி வரும் சகோதரர்களைப் பற்றி...
எல்லாருக்கும் வாங்கிக் கொடுக்கும் பண வசதி இல்லாதவராக இருக்கலாம். 'அன்று' அம்மாவுக்கு இப்படித்தானே அப்பா வாங்கிக் கொடுத்தார். நாளை, இதே போல் தன் தங்கைகளுக்கும், 'பார்சல்கள்' கிடைக்கத்தானே போகிறது என்றும் எண்ணி இருக்கலாம். இதை, பெரிய பிரச்னைக்குரிய சமாச்சாரமாக்காதீர்கள். குடும்ப அமைதி குலைந்து போகும்!
ஏ.அன்வர் பாட்ஷா, விழுப்புரம்: சாதிப் பிரச்னை ஒழியாத தற்கு காரணம் என்ன?
சுய லாபம் தேடும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தான் காரணம்!
பி.சந்திரசேகர், பசுமலை: அடி, உதை, அஹிம்சை எதன் மூலம் மனைவியை நம்ம வழிக்குக் கொண்டு வரலாம்?
முதல் இரண்டையும், நம்ம கிட்ட திருப்பினால், என்ன செய்ய முடியும்? 'மூன்றாவது வழிதான் சிறந்தது; அதையே நான் கடை பிடிக்கிறேன்...' என்கிறார் அனுபவமிக்க உதவி ஆசிரியர் ஒருவர்!