
ஆரோவில் அமைதியான சூழ்நிலையில், முந்திரி காடுகளின் நடுவே, கெட்டிப்பட்டுப் போன, செம்மண் தரையில் அமைந்திருந்தது நண்பரின் வீடு. ஆசாமி ஒண்டிக்கட்டை தான் என்றாலும், ஒண்டிக்கட்டைகளின் இல்லம் போல் இல்லாமல், சுத்தமாக இருந்தது. அறையின் ஒரு ஓரத்தில் புகைந்து, மணம் பரப்பிக் கொண்டிருந்தது தசாங்கம்.
புதுச்சேரியில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில், 'சைக்கியாட்டரி' துறையில் பணியாற்றும், டாக்டர் நண்பர் ஒருவரும் உடன் இருந்தார்.
அநாதைகள், எப்படி உருவாகின்றனர், உருவாக்கப்படுகின்றனர் என்பது பற்றி, பேச்சு எழுந்தது. ஒரு உண்மை சம்பவத்தைக் கூறினார் டாக்டர் நண்பர்.
அவர் பணியாற்றும் மருத்துவமனையில், இளம்பெண் ஒருவர், அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்பெண்ணுடன், உறவினர் யாரும் வரவில்லை. குழந்தை பிறந்து மூன்று நாட்களாகியும், அப்பெண், குழந்தையை கையில் எடுக்கவோ, அமுதூட்டவோ முயலவில்லை. ஏன், குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க மறுத்து இருக்கிறார்.
ஏன், எதற்கு என்று விவரம் புரியாத மகப்பேறு மருத்துவர்கள், உளவியல் துறை மருத்துவரான இந்த டாக்டரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
இவர், அப்பெண்ணின் மனதில் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் பேசி, உண்மைகளை வரவழைத்துள்ளார்.
அவள், ஒரு திருமணமாகாத பெண். இந்தப் பெண்ணை, தம் காம இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார் அவளது அக்கா கணவர். உடலால் இணையும் போது, குழந்தை பிறக்கும் என்ற விவரம் கூட, அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கவில்லை.
விஷயம் வெளியே தெரிந்ததும், 'நான் காரணமில்லை...' என, ஒதுங்கிக் கொண்டுள்ளார் அக்கா கணவர்; பெற்றவர்களோ, வீட்டை விட்டு விரட்டி விட்டனர். எங்கெங்கோ வேலை செய்து, வயிற்றைக் கழுவி, கருவைச் சுமந்துள்ளார் அந்த இளம் பெண்.
மனோதத்துவ முறையில் பேசி, 'யாரோ ஒரு கயவன் செய்த தவறுக்கு, இந்த பச்சிளம் குழந்தையை ஏன் தண்டிக்க வேண்டும்... அதற்கு தாய்ப்பால் அவசியம் தேவை...' என்று, டாக்டர் நண்பர் எடுத்துச் சொன்ன பின், 'சரி... குழந்தையை கவனித்துக் கொள்கிறேன்...' எனக் கூறிச் சென்ற பெண், குழந்தையை அநாதையாகத் தவிக்க விட்டு போய் விட்டாளாம்.
'குழந்தையின் கதி?' எனக் கேட்டேன்.
'இதே போல, இந்த மருத்துவமனையில், நிறைய கேஸ்கள் நடப்பதால், அக்குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கென்றே, தனி துறை ஏற்படுத்தியுள்ளனர். இரண்டு தாதிகள், அக்குழந்தைகளை கவனித்துக் கொள்கின்றனர். பின், முறைப்படி அக்குழந்தைகள் தத்து அளிக்கப்படுகின்றன; பல வெளிநாட்டினர் தத்தெடுக்க ஆர்வத்துடன் வருகின்றனர்...' என்றார்.
இது, ஒரு பக்கம் இருக்க -
புதுச்சேரி டாக்டரை சந்தித்த அடுத்த வாரமே, சென்னையில் உள்ள மிகப் பிரபலமான, அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் அந்துமணியின் அதிதீவிர வாசகியான டாக்டர் ஒருவரை சந்திக்க நேரிட்டது.
அவர் சொன்னார்...
'போன வாரம், எனக்கு ஜூனியரான பெண் டாக்டர் ஒருவர், என்னிடம் வந்து, 'ஒரு பெண், தான் கர்ப்பம் இல்லை என்றும், வயிற்றில் கட்டி தான் இருக்கிறது என்று கூறி அடம் பிடிக்கிறாள். திருமணமாகாதபெண் அவள்...' எனக் கூறினார்.
'அப்பெண்ணின் வயிற்றில், 'ஸ்டெத்' வைத்து, சோதனை செய்தேன். அப்பெண் ஏழு மாத கர்ப்பம் என்பது தெரிந்தது. 'யம்மா, நீ ஏழு மாத கர்ப்பம்!' என, அப்பெண்ணிடம் கூறினேன். 'இல்லை வயிற்றில் கட்டி தான் உள்ளது...' என்று சாதித்தாள். இப்படி சாதித்தால், மனிதனுக்கு கோபம் வருமா, வராதா? படீரென, அவளது பிளவுசை அவிழ்க்கச் செய்து, மார்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக் காட்டினேன். அப்போதும், அப்பெண் மசியவில்லை.
'பின்னர், 'ஸ்டெத்'தை அவள் காதில் மாட்டி, வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத் துடிப்பை, அவள் கேட்கும்படி செய்த பின், 'விக்கி விக்கி' அழ ஆரம்பித்தாள். 'அபார்ஷன் செய்து விடுங்கள்...' என்றாள்.
'ஏழு மாத கருவை, கலைப்பது மிகவும் சிரமம். கை, கால், தலை என, துண்டு துண்டாக்கி தான், வெளியே எடுக்க முடியும். இதனால், தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும்' என, எடுத்துக் கூறினேன்.
'கர்ப்பத்துக்கு யார் காரணமோ, அவர்களிடம் போய் சேர்ந்து விடு' எனக் கூறிய போது தான், அவள் உண்மையை கூற ஆரம்பித்தாள்.
'சென்னை அருகே உள்ள, 'பீச் ரிசார்ட்' ஒன்றில், பணிப்பெண்ணாக வேலை பார்த்து இருக்கிறாள் அப்பெண். தம்பதியர் (?) ஒரு ஜோடி, அங்கே ரூம் எடுத்து, ஒரு வாரம் தங்கி இருந்திருக்கிறது.
'அவர்களின் அறைக்கு, சுத்தம் செய்ய, மற்ற வேலைகளுக்குச் சென்று வரும்போது, அந்த ஜோடியில், ஆண் மகனுக்கு, இப்பெண் மீது கண் விழுந்துள்ளது.
'மூன்றாவது நாளில், 'என் மனைவி வெளியே போயிருக்கிறாள்...' என்று கூறி, பல்வேறு ஆசை வார்த்தைகள் பேசி, அப்பெண்ணை மடக்கி, அனுபவித்து விட்டான். அப்பெண்ணுக்கும், இது சுகானுபவமாக இருந்ததால், மறுநாளும், 'சுவை' தேடி சென்று இருக்கிறாள். அப்போதும், ஜோடியில், பெண் புறாவைக் காணவில்லை; அன்றும், அனுபவத்தைத் தொடர்ந்திருக்கிறாள்.
'ருசி கண்ட பூனையானாள், அந்தப் பெண். மறுநாளும், 'முழு சாப்பாடு' சாப்பிடச் சென்றாள். ஜோடியின் பெண் புறா அப்போதும் இல்லை. சாப்பாட்டின் நடுவே, திடீரென பாத்ரூம் கதவைத் திறந்து, ஜோடியை படம் பிடித்திருக்கிறது பெண் புறா.
'முதல் இரண்டு நாட்களுமே, அறையினுள் நடப்பதை அவதானித்தபடி, 'பாத்ரூமில்' தான், அந்த பெண் புறா இருந்திருக்கிறது, என்பது, பின்னரே இப்பெண்ணுக்கு, தெரிய வந்துள்ளது.
'அடுத்த நாள் - இப்பெண், ஜோடியில் பெண் புறா, அந்த ஆண்... குரூப், 'செக்ஸ்' நடந்துள்ளது. மறுநாள், ரூமை காலி செய்து பறந்து விட்டது ஜோடிப்புறா! இவள், அவர்களின் பெயரையோ, முகவரியையோ கேட்டுக் கொள்ளவில்லை...' என, முடித்தார் அந்தப் பெண் டாக்டர்.
இந்த இரண்டு சம்பவங்களும், மனதை மிகவும் பாதித்து விட்டன. ஆண்களின் மன வக்கிரங்கள், ஏன் இப்படி இருக்கிறது? மனைவியின் தங்கையுடன், 'விளையாட' அந்த மாமாவிற்கு என்ன உரிமை இருக்கிறது? ஓட்டலில் பணி செய்யும், விவரம் அறியா பெண்ணை, தன் இச்சைக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்?
கேள்விகள் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்க, லென்ஸ் மாமாவிடம் விஷயத்தை சொல்லி, விளக்கம் கேட்டேன்.
- அவர் சொன்ன விளக்கத்தில், எனக்கு உடன்பாடில்லை!
- ஆணின் மனம் ஏன், எதனால் இப்படி வக்கிரப்படுகிறது?