
பெ.கீதா, மதுரை: பஸ்சில், பெண்கள் சீட்டில் அமர்ந்து, பெண்கள் நின்று கொண்டு வருவதைப் பார்த்த பின்னரும் அசையாமல் உட்கார்ந்திருக்கும் ஆண் குலங்களைப் பற்றி...
'சம உரிமை கேட்கின்றனரே... நாளை அது கிடைத்து விட்டால், பஸ் பயணத்தின் போது, ஆணுக்கு சமமாக நிற்க வேண்டி வருமே... அதை இப்போதே பழகி கொள்ளட்டும்...' என, நினைக்கின்றனரே... என்னவோ!
எஸ்.ஆனந்தன், நரிமேடு: காதல் என்பது செய்யத்தகாத ஒரு தீய செயல், காதலர்கள் தீண்டத்தகாதவர்கள் என்னும் சமூக வியாதி எப்போது மாறும்?
'அர்பனைசேஷன்' அதிகமாகும் போது! பெரிய பெரிய நகரங்களில், இவ்வியாதி அறவே ஒழிந்து விட்டது எனச் சொல்லலாம்!
மு.வெற்றிச்செல்வி, திருவல்லிக்கேணி:சிறு வயதில், அறியா வயதில் வந்த காதலை கணவனிடம் சொல்வது புத்திசாலித்தனமா?
வேண்டவே வேண்டாம். உள்ள அமைதியும் கெட்டு, வாழ்வு நாசமாகி விடும். 'கப் -சிப்'பே புத்திசாலித்தனம்!
ஆர்.காதர் பாட்ஷா, கடலூர்: புகை பிடிக்கும் மகனை கண்டிக்கும் தந்தையைப் பார்த்து, 'நீர் யோக்கியனோ...' என, எதிர் கேள்வி கேட்கிறான் மகன், தகப்பன் என்ன செய்வது?
ஒன்றும் செய்ய முடியாது; 'அட்வைஸ்' தான் கொடுக்க முடியும். 'யப்பா... நான் தான் கெட்டுப் போனேன். உடம்பும் போச்சு; காசும் கரியாகுது. நிறுத்த முடியல... நீயாவது நல்லா இருக்கணுமுன்னு தான் சொல்றேன்...' என்று, வில் பவர் இருந்தால், 'ஸ்மோகிங்'கை விட்டு விட்டு, பின், சொல்லுங்கள்!
ம.ரேணுகாதேவி, கோவை: மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு, 'சைட்' அடிக்கும் கணவனை என்ன செய்வது?
மனைவியும் மற்ற ஆடவர்களை,'சைட்' அடிப்பது போல பாவனை செய்யட்டும்; அப்புறம் ஆசாமி குதிரைக்கு சேணம் பூட்டியது போல மாறி விடுவார்!
சி.ஆர். குமாரா வேலு, பழங்காநத்தம்: நம்மை விட கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் - யாரைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்?
இருவரையுமே... மேல் தட்டு, கீழ் மட்டம் இரண்டிலுமுள்ள நல்ல குணங்கள், மனிதாபி மானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!
எஸ்.என்.பகவதி, புதுச்சேரி: 'திருமணம் ஆகும்' என்ற நம்பிக்கையைக் கைவிடும் நிலையிலுள்ள நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்கு தங்கள் யோசனை என்ன?
என்ன காரணங்களால் தட்டிப் போகிறது என்பதை முதலில் ஆராய வேண்டும். ஜாதகம், ஜோசியம் தான் காரணமென்றால், அதை மாற்றி எழுதுவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்!
கே.நடராஜன், விழுப்புரம்: தெரியாத பெண்களுக்குத் தாராளமாக உதவி செய்யும் பெருந்தன்மை உடையவர்கள், யாரென்று நன்றாகத் தெரிந்திருந்தும் கஷ்டப்படும் ஆண்களுக்கு உதவி செய்வதில்லையே ஏன்?
அடிமைப்பட்டு கிடக்கும் பெண் இனத்தை, ஆணுக்கு சமமாக முன்னுக்கு கொண்டு வரணும் என, காந்திஜி, பாரதி போன்ற எத்தனையோ பெரியவர்கள் பாடுபட்டனர். அவர்களின் எண்ணத்தை, நல்ல முயற்சியை நிறைவேற்ற இந்த, 'பெருந்தன்மையாளர்கள்' பாடுபடுகின்றனர். ஒய்! என்னமோ பெரிசா குற்றம் சாட்ட வந்துட்டீர்!
என்.சொக்கலிங்கம், வடக்குமலையம்பாக்கம்: சம்பாதிக்கிறோம் என்ற திமிரில், கணவனையும், இல்லற வாழ்க்கையையும் நிரந்தரமாகப் பிரிந்து வாழும் இக்காலப் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆண்களின் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் சிக்கல் இது. மனைவி சம்பாதிக்கும் பணமும் வேண்டும்; அதே சமயம், நாலு வெளி ஆண்களுடன் பழகாத மற்ற பெண்களைப் போல வாயே திறவாமல், அடங்கி ஒடுங்கியும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடக்கிற காரியமா இது? எந்தப் பெண்ணுக்கும்,'சம்பாதிக்கிறோம்' என்பதால், திமிர் வந்து விடாது. கணவர்மார் அனுசரித்து நடக்க பழகிக் கொண்டால், 'பிரிவு' என்ற பேச்சுக்கே இடமில்லை!

