PUBLISHED ON : ஜன 26, 2014

ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகளை இரண்டு கைகளிலும் வைத்து, மாறி மாறிப் பார்த்த தொந்தி டாக்டர், கொஞ்சம் யோசனையாய், நிமிர்ந்து பார்த்தார் ஷீலாவை.
கறுப்பாய் இருந்தாலும், களையாய் இருந்த ஷீலாவிற்கு, 50 வயதிருக்கும். அருகில், கல்லூரியில் படிக்கும் அவளுடைய மகள் அமர்ந்திருந்தாள்.
''சொல்லுங்க மேடம், உங்க ஒர்க்கிங் ஸ்டைல் எப்படிப்பட்டது?'' சாய்வாய் அமர்ந்தபடி கேட்டார் தொந்தி டாக்டர், சிவகடாட்சம்.
சொன்னாள். நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில், ஷீலாவிற்கு பொறுப்பான பதவி. ஆரம்பத்தில் லெட்ஜரோடு போராடியவள், இப்போது சிஸ்டத்தில் மல்லு கட்டுகிறாள்.
சதா எந்நேரமும் கையும், கழுத்தும் இயங்கும்படியான வேலை. நான்கைந்து மாதமாக முதுகுத்தண்டில் பயங்கர வலி. கையையும், கழுத்தையும் இப்படி, அப்படி அசைக்க முடியவில்லை.
''மேடம் உங்களுக்கு, பெரிய பிரச்னை ஒண்ணுமில்லை 'ஸ்பான்டலட்டிஸ் அட்டாக்' ஆகியிருக்கு. பத்து நாள், டிராக் ஷன் செய்தா போதும். கூடவே, 'வேக்சிங் டிரீட்மென்ட்' செய்வாங்க. அதன் பின், வீட்டிலேயே செய்யறது மாதிரியான உடற்பயிற்சி சொல்லித் தருவாங்க. மெல்ல, மெல்ல குணமாயிடலாம், கவலைப்படாதீங்க,'' என்றார் டாக்டர் சிவகடாட்சம்.
டாக்டர் என்னவோ லேசாய் சொல்லி விட்டார். அனுபவிப்பவர்களுக்குத் தானே அவங்க வேதனை தெரியும்.
இதுவரை மூன்று டாக்டர்களை மாத்தியாயிற்று. டிராக் ஷன், வேக்சிங், அக்குபஞ்சர், தலையணை இல்லாத உறக்கம் என்று, ஆயிரம் மாற்று வழிகள், எதுவும் நிவாரணத்தை தரவில்லை.
டாக்டர் சிவகடாட்சம், ஆறுதலாய்...
''ஷீலா மேடம், கவலையேபடாதீங்க. மிஷின் மாதிரித்தான் மனுஷன் உடம்பும். இருபது வயசிலிருந்த வேகத்தை, நாற்பது வயசில் எதிர்பார்க்க முடியாது. ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா... நமக்கு வயசாகுதுங்கறதை, நம்மோட மனசு ஒத்துக்கறதே இல்லை. 'என்ன அப்படி வயசாயிடுச்சு'ன்னு, நம்பளை நாமே பிடிவாதமா ஏமாத்திகிட்டு, வயசுக்கும், உடம்புக்கும் ஒவ்வாத காரியத்தை செய்வோம். அதான் பிரச்னையே!
''முதல்ல, நீங்க ஒத்துக்கோங்க; நீங்க ஆப் செஞ்சுரி அடிச்சுட்டேங்குறதை. அதுக்கு ஏத்த மாதிரி, லைப் ஸ்டைலை மாத்திக்கோங்க. மருந்து மாத்திரையுடன், ரெகுலர் ரெஸ்ட் எடுங்கோ... எல்லாம் சரியாயிடும்ன்னு, நான் பொய் சொல்ல மாட்டேன். வலி குறையும்; உங்களால் சகிச்சுக்கற முடியற அளவுக்கு வரும். தாங்க முடியாத அளவுக்கு, எதையும் இறைவன் நமக்கு தருவதில்லை,'' என்றார் புன்னகையுடன்.
அவர் கூறியது தான் நிதர்சனம்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை, மேஜை மீது வைத்தவள், தன் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தாள். திருத்தமாக இருந்தாள்; ஆரஞ்சு வண்ணப் புடவையும், கரும்பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.
''உங்க பேரும்மா.''
''கஸ்தூரி.''
''எல்லா விவரமும் அண்ணாச்சி சொல்லிருப்பார். அவர்கிட்டத்தான் வேலைக்கு ஆள் வேணும்ன்னு சொல்லி வச்சிருந்தேன். மூணு வேளை சமையல் செய்யணும்; சைவம், அசைவம் ரெண்டும் தேவைப்படும். உங்களால முடியுமா?''
அந்தப் பெண் புன்னகை பூத்தாள்.
''நான் சைவம்மா... ஆனா, அசைவமும் சமைப்பேன்.''
கஸ்தூரி வந்த பின், வாழ்க்கை கொஞ்சம் மாறித்தான் போனது. ருசியை விட, மனம் கூடுதலாய் ரசித்தது. கஸ்தூரி காலை, இரவு வேளைகளில் தவறாமல் வந்தாள். லீவு நாட்களில் மட்டும், மதியமும் சேர்த்து சமைத்தாள். அனாவசிய பேச்சு வார்த்தை கிடையாது. சுத்தமாய் பதவிசாய் சமைத்தாள்.
அடுக்களை பொறுப்புகள் கை மாறியதும், வலி பறந்து போகும் என்று கற்பனை செய்தது பொய்யாகி விட்டது. கொஞ்சம் கழுத்தை திருப்பினாலே, உயிர் போகிற மாதிரி வலிக்க ஆரம்பித்தது.
''ஷீலா... பேசாம வேலையை விட்டுடேன். இத்தனை வருஷம், குடும்பத்துக்காக உழைச்சாச்சு. நம்ம வாழ்க்கையில, எந்தக் குறையும் இல்லை. நீ வீட்ல இருந்து, ரெஸ்ட் எடேன்,'' அன்போடு சொன்னான் கணவன் பிரபு.
''இல்லீங்க... நம்ம பொண்ணு கல்யாணம் வரைக்குமாவது, நான் வேலைக்கு போய்த் தான் ஆகணும். எல்லாம் சரியாகிடும், விடுங்க,'' என்றாள்.
அது, ஒரு ஞாயிற்றுக்கிழமை. முதன் முதலாய், கஸ்தூரி, தன்னோடு ஒரு சின்னப் பெண்ணை அழைத்து வந்திருந்தாள். பத்து வயசிருக்கும்; கஸ்தூரியின் சாயலில் இருந்தாள்.
''என்ன கஸ்தூரி, இது, உன் பெண்ணா?'' என்று கேட்டது தான் தாமதம், கஸ்தூரியின் முகத்தில், வெட்கம் அப்பிக் கொண்டது.
''அய்யோ... என்னம்மா இது! எங்க வீட்டுக்காரர் தவறிப் போய் பதினைஞ்சு வருசமாகுது. இது என் பேத்திமா... மூத்த பொண்ணோட பொண்ணு,'' என்றாள்.
நம்புவதற்கு கஷ்டமாய் இருந்தது. இது நாள் வரைக்கும், கஸ்தூரியைப் பற்றி தெரிந்து கொள்ள பெரிதாய் ஆர்வம் காட்டாத ஷீலாவிற்கு, அதன் பின், ஏனோ கஸ்தூரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
அடுத்தடுத்து வந்த நாட்களில், கஸ்தூரியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.
''உனக்கு எத்தனை பசங்க கஸ்தூரி.''
''ரெண்டும் பொண்ணுங்கம்மா. மூத்த பொண்ணுக்கு, கல்யாணமாயிடுச்சு. கவர்மென்ட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்குறா. சின்னப் பொண்ணு, எம்.சி.ஏ., படிக்குறா,'' என்றாள்.
'சொளேர்' என்றது.
''அப்படியா... பரவாயில்லயே! அப்புறம், நீயேன் சமையல் வேலைக்கு வர்றே... வீட்ல இருந்து, ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே,'' என்று கேட்டாள் ஷீலா.
''எதுக்குமா ரெஸ்ட்! உடம்புல, எந்தக் குறையையும் கடவுள் தரலை. அதுவுமில்லாம, சமையல் வேலை செய்றது, முன்னை மாதிரி கஷ்டமில்லை. முன்னையெல்லாம் வீட்டு வேலை செய்யுறவங்க தான், எல்லா வேலையும் பாக்கணும். இப்ப அப்படியில்ல; துணி துவைக்க, வீடு துப்புரவு செய்ய, சமையல் செய்யன்னு எல்லாமே தனித்தனியாயிடுச்சு. அவங்கவங்களுக்கு, தெரிஞ்ச வேலையை, அவங்க செய்றாங்க. சமையல் செய்றது மட்டும் தான் எனக்கு வேலை. உங்க வீட்ட மாதிரியே, இன்னொரு வீட்லயும் சமைக்கிறேன்; மாசம், இருபத்தஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன். வீட்ல இருந்தா, இவ்வளவு காசு யார் தருவாங்கமா,'' என்றாள் கஸ்தூரி.
அவள் பேசப் பேச, பிரமிப்பாய் இருந்தது. இரவு கணவன் வந்ததும், அத்தனையும் கொட்டித் தீர்த்தாள்.
''அந்த ஆண்டவனோட, கணக்கே எனக்கு புரியலீங்க! நாம எல்லா அனுஷ்டானங்களையும், சரியாத்தான் செய்கிறோம். ஆனா, அவனோட கருணை, நமக்கு கிடைக்கிறதே இல்லீங்க,'' என்ற ஷீலாவை, புரியாமல் பார்த்தான் பிரபு.
''அப்படியொண்ணும் பெருத்த குடும்பமில்ல நம்மோடது; மூணே பேர் தான். மூணு பேருக்கு, மூணு வேளை சமைக்கக் கூட, என்னால ஆக மாட்டேங்குது. அந்த கஸ்தூரி, தன் வீட்டுக்கும் சேர்த்து, மூணு வீட்டுக்கு சமைக்கிறா... அவளால மட்டும் எப்படி முடியுது.''
ஷீலா, இப்படிப் பேசி, இதுவரை பார்த்ததில்லை. வினோதமாய், அவளை பார்த்தான்.
''ஷீலா, என்னாச்சு உனக்கு... படிப்பு, வேலைன்னு எவ்வளவு உயரத்துக்கு போனாலும், நீயும் ஒரு சாதாரண பொண்ணுன்னு காட்டிக்கிற,'' கொஞ்சம் கண்டிப்பாய் பிரபு சொல்ல, மேற் கொண்டு பேச எத்தனிக்காமல், ஷீலா வாய் மூடிக் கொண்டாள்.
சோழிங்க நல்லூரில், ஒரு ஆர்த்தோ டாக்டர் இருப்பதாய், பிரபுவின் நண்பர் ஒருவர் மூலமாய் கேள்விப்பட்டு, பேங்குக்கு லீவு போட்டு போய் வந்தாள்.
காரில் தான் போய் வந்தாலும், கொஞ்ச தூர பயணத்திற்கே கழுத்து வலி இரட்டிப்பானது. நிறைய வேதனையோடு, அமர்ந்திருந்தவளுக்கு கஸ்தூரி, 'ஹாட்பேக்'கில் வென்னீர் வைத்து, ஒத்தடம் தந்தாள். நிஜமாகவே, இதமாய்த்தான் இருந்தது.
''நன்றி கஸ்தூரி,'' என்றாள்.
''டாக்டர் என்னதான்மா சொல்றாரு?''
''கழுத்து எலும்பு ரொம்ப தேய்ஞ்சிடுச்சாம். அதனாலதான், இந்த தலை சுத்தல், மயக்கம் எல்லாம். என்னவோ போ... எத்தனையோ பேர், தினக்கூலியா வேலை பாக்குறாங்க. அவங்களுக்கெல்லாம், இப்படி வியாதி வந்து படுத்தினா என்ன தான் செய்வாங்க,''என்றாள்.
மென்மையாய் சிரித்தாள் கஸ்தூரி.
''அது சரி கஸ்தூரி... உனக்கு எத்தனை வயசாச்சு,'' என்றாள் ஆர்வமாய்.
''அது ஆச்சுமா அம்பத்தஞ்சு.''
தூக்கிவாரிப் போட்டது ஷீலாவிற்கு. முப்பத்தஞ்சுன்னு சொன்னாலே, அநியாயம் என்பது போல் இருந்தாள்.
''அம்பத்தஞ்சா! நம்பவே முடியலை கஸ்தூரி.'' ஷீலாவிற்கு அவளையும் மீறி, குரலில் பொறாமை எட்டிப் பார்த்தது.
'எத்தனை ஆரோக்கிய உணவுகள்; நியுட்ரிஷன் சங்கதிகள்; க்ரீம்கள் மேக்கப் உபகரணங்கள், இவற்றில் எல்லாம் கட்டிக் காக்க முடியாத ஆரோக்கியமும், இளமையும் சுலபமாய், இவளுக்கு வாய்த்திருக்கிறதே...' மனதிற்குள் பொருமினாள்' ஷீலா.
அன்றிரவு, டாக்டரை பார்த்து வந்த விஷயத்தை கணவன் விசாரித்த போது, ஷீலா அலுப்பாய் பதில் சொன்னாள்.
''என்ன ஷீலா... எதுக்கு அலுத்துக்கறே... நரையும், மூப்பும் உலகத்தை கட்டியாண்ட மன்னாதி மன்னனையும் விட்டதில்லை. நீயும், நானும் அதுல விதிவிலக்கா... குருத்தோலை, பழுத்தோலை ஆகித்தானே தீரணும்!''
''நீங்க தமிழ் ஆசிரியர் பையன்; இப்படித்தான் பேசுவீங்க. இந்த தத்துவமெல்லாம், எனக்குத் தான். உங்கம்மாவுக்கு மூட்டுவலி வந்து, மருத்துவமனைக்கு அலைஞ்சபோது, இந்த குருத்தோலை தத்துவத்தை பேசக் காணோம்.''
அவசியப்படும்போது கூட, கோபப்படாமல் பொறுமை காப்பவள் ஷீலா. ஆனால், இப்போது எரிச்சலுடன் பேசினாள்.
''ரெண்டு பேரும் சேர்ந்து, மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறோம்; நினைச்ச பொருளை, நினைச்ச மாத்திரத்துல வாங்குற சக்தி இருக்கு. ஆனா, எப்பப்பாரு யாருக்காவது ஏதாவது உடம்புக்கு வர, அதுக்காக ஆயிரக்கணக்குல செலவு செய்யறதிலே காலம் ஓடுது. நான் தெரியாமத்தான் கேட்கறேன்... அந்த கஸ்தூரிக்கு, என்னைவிட அஞ்சு வயசு கூடவாம். நம்ப முடியுதா உங்களால... அவகிட்ட இருக்கிற ஆரோக்கியமும், புத்துணர்வும் எங்கிட்ட இல்லியே... என்ன சம்பாதிச்சு என்ன செய்ய! உண்மையில, யாருக்கு உடம்பும், மனசும் முழு ஆரோக்கியத்துல இருக்கோ அவங்க தான் அதிர்ஷ்டசாலிகள்; நாமெல்லாம் தரித்திரவாசிகள்,'' என்று அவளுடைய மன வெதும்பலை, கொட்டித் தீர்த்தாள்.
அவள் கூற்றிலிருந்த நியாயம், பிரபுவுக்கு உறைத்தது. மனைவியின் கைப்பற்றி, மென்மையாச் சொன்னான்.
''ஷீலா, உனக்கு மரங்களுடைய இயல்பு தெரியும். ஆனா, அதுக்குள்ள மறைஞ்சு கிடக்குற, வாழ்க்கையோட சூட்சமம் புரியாது. வறண்ட பகுதிகளில், வளர்ற தாவரத்திற்கு, வேர்கள் பலமாய் இருக்கும். எதுக்குத் தெரியுமா... ஆழமாக, தன்னுடைய வேர்களை செலுத்தி, தனக்கு தேவையான ஈரத்தை உறிஞ்சுகிற தன்மையை, இயற்கையாகவே இறைவன், அதுக்கு தந்திருக்கான்.
''அதேபோல, பனிப்படர்ந்த பகுதிகளில் வளர்ற மரங்களுக்கு, நுனிப்பகுதி கூர்மையா இருக்கும். அது எதனால தெரியுமா... எத்தனை பனி மூட்டம் படர்ந்து கிடந்தாலும், அதைக் குடைஞ்சு, சூரிய ஒளியை கிரகிச்சு, தன் உயிரைக் காப்பாத்த உணவு தயாரிச்சாகணும்கற புத்திசாலித் தனத்தை, இயற்கை அதுக்கு தந்திருக்கு.
''இது தான் ஷீலா, வாழ்க்கை. உன் கல்வியும், பொருளாதாரமும் உன்னுடைய பலம்; அதைக் கொண்டு, உன்னுடைய பலவீனங்களை, சரி செய்துக்க கத்துக்க. கஸ்தூரி மாதிரி மனிதர்களுக்கு, ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும் பலம்; அதைக் கொண்டு, அவங்க வாழ்க்கையை திறம்பட நடத்துவாங்க. ரெண்டும், நமக்கே வேணும்கறது பேராசை இல்லியா?'' என்று கேட்டான்.
விஷய ஞானத்தோடு கணவன் கேட்டபோது, தன்னுடைய இயல்பை எண்ணி வெட்கப்பட்டாள் ஷீலா.
''அதில்லீங்க,'' என்று பேச எத்தனித்தவளை, கையுயர்த்தி தடுத்தான்.
''உனக்குள்ள ஏற்பட்ட எண்ணங்கள், தப்பில்லை ஷீலா. அதுக்காக நீ வருத்தப்பட வேண்டாம். டாக்டர் சிவகடாட்சம் சொன்னது போல் தாங்க முடியாத எதையும், இறைவன் நமக்கு தருவதில்லை.''
பிரபு சொல்ல, முழு மனதாய் தலையசைத்து ஆமோதித்தாள் ஷீலா.
ஹயாத்

