PUBLISHED ON : பிப் 09, 2014

மு.ராஜேஸ்வரி, திருவொற்றியூர்: பக்கத்து வீட்டு பெண்களுடன் எப்போதும் சினேகத்துடன் இருக்க சிறந்த வழி என்ன?
அவர்கள் அவ்வப்போது ஓ.சி., கேட்கும் போது, முகம் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். அவர்கள் வாங்கிய புதுச்சேலை, பிளவுஸ் போன்றவை நன்றாக இல்லாவிட்டாலும், 'ஆஹா...ஓஹோ' என்று புகழ்வதுடன், 'உங்களால்தான் இவ்வளவு,'சீப்'பாக அடித்துப் பேசி வாங்க முடியும்...' என்று சொல்ல வேண்டும். இப்படிப் பல பல கயிறுகள் திரிக்க வேண்டும். முடியுமா உங்களால்!
பி.லட்சுமணன், பொள்ளாச்சி: வெளியிடங்களில் என் நண்பன், என்னுடன் கேலி செய்தும், கிண்டல் செய்தும் சிரித்து நன்றாக பேசுகிறான். ஆனால், அவன் வீட்டுக்குச் சென்றால், மூஞ்சியை, 'உர்' என்று வைத்துக் கொண்டு, பழகாதவன் போல இருக்கிறான். என்ன காரணமாக இருக்கும்?
நண்பரது வீட்டில் வயதுக்கு வந்த அக்கா, தங்கைகள் இருக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இருக்கின்றனர் என்றால், உங்கள் நண்பரது செயலுக்கு விடை கிடைத்து விடும்!
என்.எஸ்.சோமசுந்தரம், தேக்கடி: நான் மனிதர்களை நேசிப்பதால், என்னை விட, எளியவர்களிடம், பணிவுடன் நடப்பதைக் கேலி செய்கின்றனரே...
அடுத்தவர் பாராட்டுவதற்காகவா எளியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறீர்கள்? இல்லையே... விட்டுத் தள்ளுங்கள். கேலிகளை இந்தக் காதால் வாங்கி, அந்தக் காது வழியே விட்டு விடுங்கள்!
பெ.பரமசிவம், மயிலாப்பூர்: ஒரு பெண்ணுடன் சகோதரனாகப் பழகுகிறேன், பேசுகிறேன். ஆனால், அந்தப் பெண் என்னை தவறான நோக்கத்துடன் பார்க்கிறாள். என்ன செய்வது?
கழண்டு கொள்ளுங்கள்!
ஆர்.ரவீந்திரன், மேடவாக்கம்: விலைவாசியை யாரால் கட்டுப்படுத்த முடியும்?
எதற்கெடுத்தாலும், லைசென்ஸ், கட்டுப்பாடு, லெவி என்று கேட்பதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, தொழில், வியாபாரத்தை ஊக்குவிக்க யாரால் முடியுமோ, அவர்களால் விலைவாசியைக் குறைக்க முடியும்!
டி.ஆரோக்கியராஜ், திருப்பூர்: கையில் தங்க மோதிரமும், கழுத்தில் மைனர் சங்கிலியும் அணிந்தால் தான், 'சைட்' வரும் என்கிறான் என் நண்பன். இது உண்மையா?
பெண் உதவி ஆசிரியர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். கையில் பிரேசிலட், விரலில் மோதிரம், கழுத்தில் சங்கிலி போட்டு வருபவர்கள், 'வெல்த்தி லோபர்ஸ்' என நினைத்து, திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் என்கின்றனர். நடை, உடை, நகை பார்த்து மயங்குபவர்கள் அல்ல பெண்கள்; உண்மையான அன்புக்கு அடிமைகள் என்பது என்னுடைய கணிப்பு!
எஸ்.பி.சோபனா, கொடுவிலார்பட்டி: பாடப் புத்தகம் என்றாலும் சரி, வார, மாத இதழ்கள் என்றாலும் சரி, நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை; இரவல் வாங்குவதும் இல்லை. இதனால், நிறைய பேரின் திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஐ நீட் யுவர் அட்வைஸ்...
இவற்றுடன் ஆடியோ -வீடியோ கேசட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏசுபவர்கள் ஏசட்டும்!
