தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூரிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல். எழுதியவர் பெயர் - ஸ்ரீ. அஞ்சலின் முடிவில், 'நான் ஆணா, பெண்ணா என்று உங்களால் யூகிக்க முடியுமா?' என்று, ஒரு சுவாரசியமான கேள்வி. எனக்கு யோசிக்கவே தேவை ஏற்படவில்லை. 'நிச்சயமாக, நூற்றுக்கு நூறு நீங்கள் பெண்தான்...' என்று பதில் எழுதினேன்.

'எப்படி கண்டுபிடித்தீர்கள்?'

'வேறு என்ன... எந்த ஆண், 'நான் ஆணா, பெண்ணா, சொல்லுங்கள், பார்ப்போம்...' என்று கேட்பான்?'

அதற்கு வந்த பதிலை அப்படியே கீழே தருகிறேன்:

சே... நான் ஒரு மக்கு! இவ்ளோ, 'ஈசி க்ளு' கொடுத்திட்டனா... ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளில் தமிழ் இரண்டாம் பேப்பரில் ஒரு கேள்வி; மூன்று சாய்சில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

அ. நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில், இரண்டு பக்கங்களில் கட்டுரை வரைக.

ஆ. பசுமாடு - என்ற தலைப்பில், இரண்டு பக்கத்தில் சிறுகதை எழுதுக.

இ. செக்கர் வானம் - என்ற தலைப்பில், 16 வரிகளில் கவிதை எழுதுக.

நான், எப்போதுமே, 'இ' தான் தேர்ந்தெடுப்பேன்; காரணம், 16 வரிகளில் விஷயம் முடிந்து விடுமே! பேசும் போது கதை, கதையாய் சொல்வேன்; ஆனால், நீளமாய் எழுதுவதில் சோம்பலோ என்னவோ... அதனாலேயே எந்த விஷயத்தையும் கவிதை என்ற பெயரில், 10, 15 வரிகளில் எழுதி விடுவது பிடிக்கிறது.

ஆனால், நீங்கள் கேட்டீர்களே... என்னைப் பற்றிய கதை... அதை, 10 - 15 வரிகளில் சொல்ல முடியாதே... ஏனென்றால், கவிதை, காவியமாகி விட்டால் என்ன செய்வது! இது, தற்புகழ்ச்சியல்ல... வஞ்சப் புகழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது ஏதாவது அசட்டுத்தனமாக கேள்விகள் கேட்டே (நான் ஆணா, பெண்ணா, சொல்லுங்கள் பார்ப்போம்!) என்னைப் பற்றி தெரிவித்து விடுவேன் என்று நினைக்கிறேன். நிற்க. (அதற்குத்தக!)

நேற்று, தமிழ்நாட்டில், எங்கள் ஊர் பக்கத்திலிருந்து தெரிந்த (தெரியாத) பையன் இங்கே சிங்கப்பூருக்கு வந்திருந்தான். அதாவது, மற்றவர்களுக்குத் தெரியும். நானும் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்; பார்த்ததில்லை.

வீட்டிலிருந்து கொடுத்துவிட்ட சில பொருட்களைத் தருவதற்காக, இங்கே என் வீட்டுக்கு அருகிலுள்ள எம்.ஆர்.ஐ., ஸ்டேஷனரியிலிருந்து போன் செய்தான். நான் அடையாளத்திற்காக, 'என்ன கலர் ஷர்ட் போட்டிருக்கிறாய்...' என்று கேட்டேன். தடுமாறிவிட்டு, 'டி - ஷர்ட்' என்றான்.

'அடப்பாவி, அதுதான் என்ன கலர்?' என்றேன். 'பக்கவாட்டில் கோடுகள் போட்டிருக்கும்...' என்றதும், 'கலரை சொல்லுப்பா...' என்றேன். 'வந்து... அக்கா... உங்களுக்குத் தெரியாதது இல்ல. எனக்கு கலர் ப்ளைண்ட்னஸ்...' என்றான். மேலும், 'நான் போட்டிருப்பது கறுப்புன்னு நினைக்கிறேன்...' என்றான்.

எனக்குப் பேச்சே வரவில்லை.

சே... கேலி பண்ணியதுபோல் ஆகிவிட்டதே! சரி, நம் டிரஸ் கலரையாவது சொல்வோம் என்று நினைத்து, பிறகு நல்ல வேளை, சொல்லாமல் மண்டையில் தட்டிக் கொண்டேன்.

ஒரு வழியாக அவனை கண்டுபிடித்த போது, அவன் போட்டிருந்த டிரஸ் நிறம் - நீலம்! எனக்கு அவன் பேசியதெல்லாம் காதில் விழாமல், நீல நிறத்திலேயே மனசு பூராவும் நின்றிருந்தது; 'கிங்' படம் ஞாபகம் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்தபோது, உலகத்திலேயே அந்தக் கதாபாத்திரத்துக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன்.

அவன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், 'டிப்ளமோ' படித்திருக்கிறான். அவனுடைய இந்தக் குறைபாட்டால், எலக்ட்ரிகல் வேலையே பார்க்க கூடாது என்று சிங்கப்பூர் அரசு சொல்லி விட்டது.

நம் நாட்டில் இதையெல்லாம் பரிசோதிப்பது இல்லை; இங்குதான் பரிசோதிக்கின்றனர். இப்போது அவன் வேலை - தெரு விளக்குக் கம்பங்களுக்காக குழி தோண்டுவது.

இவன் மட்டுமல்ல... எந்தக் குறையுமில்லாது, நன்கு படித்த நம் இளையர்கள் (சிங்கப்பூரில் இளைஞர்களை இப்படித்தான் சொல்கின்றனர்; டீன்-ஏஜை, பதின்ம வயதினர் என்கின்றனர்) எண்ணற்றோர் இப்படித்தான் இங்கே புல் வெட்டியும், மண் வெட்டியும் பிழைப்பு நடத்துகின்றனர்.

பத்தாவது மட்டுமே படித்த (இங்கே, 'ஓ' லெவல்) சீனர்கள், புராஜக்ட் மேனேஜர்களாக நம்மவர்களை வேலை ஏவிக் கொண்டிருக்க, நம் ஐ.டி.ஐ.,களும், டிப்ளமாக்களும் எட்டாவது கூட படிக்கத் தேவையில்லாத கூலி வேலைகளை, இறுகிப் போன உடல்களுடனும், மனதுடனும் செய்வது, இங்கே வாடிக்கையாக உள்ளது.

இந்தியாவில் நான் படித்த கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில், ஆட்டோ கேட் ஆர்க்கிடெக்சர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிவில் டிப்ளமா முடித்த பையன், 'சிங்கப்பூரில் ஏதாவதொரு வேலை கிடைத்தால் போதும், எப்படியாவது பெரியாளாகி விடுவேன்...' என்று சொல்லிக் கொண்டிருப்பான்.

அது போலவே, சென்னையில் ஸ்கில் டெஸ்டில் தேர்வு பெற்று, இங்கு வந்து, ரோட்டில் கேபிள் இழுத்துக் கொண்டிருக்கிறான். கேபிள் இழுப்பது மிக மிகக் கடினம் என்று சொல்கின்றனர். இவர்களுக்கு கூலி மாதம் ஐநூறு வெள்ளியைத் தாண்டாது.

இப்போது அவன் சொல்கிறான்... 'இங்க வர்றதுக்கு எங்க வீட்ல கடன் வாங்கி ஏஜெண்டுக்குக் கட்டின ஒன்றரை லட்ச ரூபாயை எப்படியாவது அடைத்து விட்டு, ஊருக்கு ஓடிரணும். அங்க போய் நல்ல வேலையில் சேர்ந்து பெரியாளாயிடுவேன்...'

இவர்களையெல்லாம் மினி லாரியில் அள்ளிப் போட்டு, சைட்டுக்குப் போவர். அப்போது யாராவது இளம் பெண்கள் கடந்து சென்றால், கர்ச்சீப்பால் முகத்தை மூடிக் கொள்வதாய் சொல்கிறான் குமார்.

சில நாட்களுக்கு முன், நான் வேலை செய்த சீன கம்பெனியில், இரண்டு கம்ப்யூட்டர்களை நிறுவுவதற்காக அதன் ஒர்க் - சைட்டுக்குப் போனேன். ஹோர்டிங் வைத்து அடைத்திருந்த சதுப்பு நிலம் போன்ற அந்த இடத்தில், இருபுறமும் அதல பாதாளமாக வெட்டிக் கிடக்க, கற்களை வைத்து அமைத்திருந்த படிகளில் கை, கால் நடுங்க, இதயம், 'திம் திம்'மென அதிர, அந்த சைட் ஆபிஸ் நோக்கி மேற்கொண்ட பயணம், 'த்ரில்'லானது.

ஆனால், அங்கே தொழிலாளர்களாக ஒர்க் -பர்மிட்டுடன் இருக்கும் நண்பர்கள் படும்பாடு, 'த்ரில்'லானது இல்லை. சிங்கப்பூரின் சுத்தம் பற்றி சிலாகிக்கிறோமே... ஆனால், வேலையிடத்திலேயே தங்கியிருந்த அந்த தொழிலாள நண்பர்களிடம் தண்ணீர் கேட்டேன். 'இல்லை!' என்று சொன்ன அவர்கள், கடையில் வாங்கி வரக் கிளம்பினர். (அதற்கு அந்த அதல பாதாளத்தையெல்லாம் தாண்டிப் போகணும்!) 'நீங்கள் எங்கே தண்ணீர் குடிப்பீர்கள்?' என்று கேட்ட போது, அவர்கள் காட்டிய இடம், டாய்லட்!

சிங்கப்பூரின் நிமிர்ந்த கட்டடங்களும், சுத்தமும், இவர்களைப் போன்ற உழைப்பாளிகளின் வியர்வையில் உருவானது என்பதை, 'ஆகாயத் தாமரைகள்' என்ற கவிதையில் வெளிப்படுத்தினேன்.

அது வெளியான போது, நிறைய தொழிலாளத் தோழர்கள் தொடர்பு கொண்டு, தங்கள் நெகிழ்ச்சியையும், கண்ணீரையும் கூறினர். தங்களின் ஒர்க்- சைட்டில், நோட்டீஸ் போர்டில் அதை ஒட்டி வைத்திருப்பதாகக் கூறினர். (எனக்கென்னவோ, என் எழுத்துக்கள் சின்னப் பிள்ளைத்தனமாக, முதிர்ச்சி இல்லாதிருப்பது போலவே இருக்கிறது!)

ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் ஊருக்கு வரும்போது வாசனைத் திரவியங்களும், எலக்ட்ரானிக் அயிட்டங்களும் கொண்டு வருகின்றனரே தவிர, தங்கள் கவலைகளையோ, கஷ்டங்களையோ தங்கள் குடும்பத்திடம் காட்டுவதில்லை.

அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு வேலை நன்றாக அமையலாம்; இல்லையெனில், கஷ்டம்தான். இங்கு வரும் முன் நன்கு யோசித்து விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.

இவ்வளவு எழுதுவதற்குள்ளாவே மூச்சு வாங்குகிறது. நீங்களெல்லாம் எப்படித்தான் வரம் வாங்கி வந்தீர்களோ!

என் கல்லூரி நண்பர்கள் சொல்வர், என்னோடு பேச ஆரம்பித்தால், அது உரையாடலாக இல்லாமல், சொற்பொழிவாகவே முடிகிறது என்று! அதனாலேயே மேடையில் பேசவும் பிடிக்கும். ஒரே நேரத்தில் ஆயிரம் பேரோடும் பேசலாம்; யாரும் குறுக்கே பேச மாட்டார்கள்.

அதே மாதிரி பாட்டு கேட்டால், அந்தப் பாட்டுப் பழகி மனசில் நிற்கும் வரைதான் கேட்கப் பிடிக்கும். அதற்கப்புறம் கேட்க மாட்டேன்... காரணம், நானே பாட ஆரம்பித்து விடுவேனே!

அன்புடன் ஸ்ரீ.

ஸ்ரீ எழுதிய 'ஆகாயத் தாமரைகள்' கவிதை, படித்தேன். இது குறித்து சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது... பல பெண் கவிஞர்களிடம் காணப்படும் பொதுவான பண்பு இது. அதாவது, அவர்களின் கவிதைகளை விட, உரைநடை மனதில் தைக்கும்படி இருக்கிறது. அதற்கு ஸ்ரீயின் உரைநடையும் ஒரு சாட்சி. உதாரணமாக, 'இதயம், 'திம் திம்'மென அதிர' என்பது நல்ல உரைநடைக்கு ஒரு அடையாளம். ஸ்ரீ, கவிதை எழுதுவதை விட்டு விட்டு, உரைநடைக்கு மாறினால், தமிழுக்கு ஒரு நல்ல கதாசிரியை கிடைப்பார்!

— என்ன... சிங்கப்பூர் போகும் கனவில் உள்ள படித்த இளைஞர்களே... டிக்கெட் எடுக்க, மற்றவைகளுக்கு கடன் வாங்குமுன், நன்கு விசாரித்து செயலில் இறங்குங்கள்; ஸ்ரீயின் கடிதத்தை மனதில் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us