நான் சுவாசிக்கும் சிவாஜி (19) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (19) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : பிப் 09, 2014

சிவாஜிக்கு மிகவும் பிடித்த டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர். இவர், சிவாஜி மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 'பொம்மை' சினிமா இதழில், தான் இயக்கிய நடிகர்களை, ஒவ்வொரு விதமான பூவுடன் ஒப்பிட்டு, ஒரு தொடர் கட்டுரை எழுதியிருந்தார். அதில், எம்.ஜி.ஆரை குறிஞ்சி மலருக்கு ஒப்பிட்டிருந்தார். நான்கு வாரம் மற்ற எல்லா நடிகர்களைப் பற்றியும் எழுதிய திருலோக்சந்தர், சிவாஜியைப் பற்றி மட்டும் எதுவும் குறிப்பிடவில்லை.
கடைசி வாரத்தில் தான் அதற்கு விடை கிடைத்தது. சிவாஜியோடு ஒப்பிட மலர்களே இல்லை என்றும், எனவே, அவரை, 'தெய்வ மலர்' என்று குறிப்பிடுவதாக கூறியிருந்தார். ஒரு இயக்குனரிடமிருந்து, சிவாஜிக்கு கிடைத்த உச்ச கட்ட பாராட்டு இது. சிவாஜி நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் தெய்வ மகன். இப்படம் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு, சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது. தெய்வ மகன் படத்தில், திருலோக்சந்தர் சிவாஜியை நடிக்க வைத்த மாதிரி, வேறு எந்த டைரக்டரும் செய்ததில்லை. அப்பா, இரு மகன்கள் என சிவாஜி, மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இம்மூவரும் ஒன்றாக வரும் காட்சி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத அக்காலத்திலே, மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. தேரி சூரத் மேரே ஆங்கேன் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் இது. ஆரூர்தாசின் வசனங்கள் பல இடங்களில், 'பளிச்!'
எழுத்தாளர்கள் நல்ல வசனம் எழுதலாம். ஆனால், அவை ஆடியன்சை முழுமையாக சென்று அடைவது, அந்த வசனத்தை பேசி, நடிக்கும் நடிகரிடம் தான் இருக்கிறது. ஆரூர் தாஸ், கருணாநிதி வசனங்கள், உயிர் பெற்றதற்கு, முக்கிய காரணம், சிவாஜியின் உச்சரிப்பு தான். இதை கருணாநிதியே பல முறை சொல்லியிருக்கிறார்.
நீங்களே யோசித்துப் பாருங்கள்... பராசக்தி பட வசனங்களை சிவாஜியைத் தவிர வேறு யாரால் சிறப்பாக பேசி நடித்திருக்க முடியும்?
நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, அமெரிக்காவில் வசித்து வந்தார் நடிகை பத்மினி. எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழுவுடன், நான் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை, நியூயார்க் நகரில் சந்தித்தேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இது...
ஒரு சமயம், அங்குள்ள ஒரு வீடியோ கேசட் கடைக்கு சென்றிருந்த பத்மினி, எந்த கேசட்டு வாங்குவது என்று, ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த கடைக்கு வந்திருந்த ஒரு தமிழர், பத்மினியை யாரென்று தெரியாமலேயே, 'ரொம்ப நேரமாக எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே...' என்றவர், 'தமிழ் கலாசாரத்தை பத்தி தெரிஞ்சுக்க சிவாஜி - பத்மினி இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் வீடியோவை வாங்கிட்டுப் போங்கள்...' என்று, ஆலோசனை கூறியுள்ளார்.
'நீங்கள் குறிப்பிடும் அந்த படத்தில், சிவாஜியுடன் இணைந்து நடித்த பத்மினியே நான் தான்...' என்று பதில் கூறி, அந்த தமிழரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் பத்மினி. இது, சிவாஜிக்கு கிடைத்த மற்றொரு மணிமகுடம்.
எனக்கும், இது மாதிரி ஒரு அனுபவம், அமெரிக்காவில் நடந்தது. அங்கு, எங்கள் யு.ஏ.ஏ., குழுவின் நாடகங்களை பார்க்க வரும் நண்பர்களில் பலர், 'சிவாஜியுடன் முக்கிய பாத்திரத்தில் நீங்கள் நடித்த, பரீட்சைக்கு நேரமாச்சு படம் மாதிரி வேறு படம் கிடைக்காது; நினைவில் எப்போதும் நிற்கும் படம்...' என்று என்னிடம் கூறினர்.
அந்த அளவுக்கு, பரீட்சைக்கு நேரமாச்சு படம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் சிவாஜி தான். அப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், நரசிம்மாச்சாரி கேரக்டராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். அதற்காக, அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.
உதாரணமாக, வைணவ அந்தணர்களின் நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று, அங்கு வரும், வைணவ அந்தணர்களை உற்றுப் பார்த்து, அதன்படி, ஒவ்வொரு அசைவுகளையும் படத்தில் செய்து காட்டியிருப்பார்.
படத்தின் முதல் காட்சியில், சூரிய நமஸ்காரம் செய்த பின், பஞ்சகச்ச வேட்டியை பிடித்தபடி நடந்து வரும் காட்சி, தன் மகனை அடித்து விட்டு, பின் அவனுக்காக பரிந்து பேசும் போது, குடுமியை அள்ளி முடியும் காட்சி, ஐயங்கார் பேசும் ஸ்டைலில் பேசுவது என்று அத்தனையையும் வெகு இயல்பாக செய்திருப்பார்.
'பாங்க் அக்கவுன்டை மட்டும் உயர்த்தினால் போதாது. நடிப்பு அக்கவுன்ட்டையும் உயர்த்த வேண்டும்...' என்பார் சிவாஜி.
தான் மட்டும் நடித்தால் போதாது; கூட நடிப்பவர்களும் அந்தந்த கேரக்டராகவே மாற வேண்டும் என்று விரும்புவார். மேலும், தன்னுடன் நடிப்பவர்களும், தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். அதன்படி, பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில், யு.ஏ.ஏ., நாடக குழுவை சேர்ந்த சுப்புணி, ரவுடியாக வருவார். அந்த கேரக்டரை இயல்பாக நடிக்க விட்டு, இறுதியில் தன் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டை தானும் பெற்று, மற்றவர்களுக்கும் பெற்றுத் தந்தார்.
அதேபோல், படத்தின் பின் பகுதியில் நான் ரவுடியாக நடித்திருப்பேன். அசல் ரவுடி எப்படி நடக்க வேண்டும்; பேச வேண்டும் என்று நடித்துக் காட்டினார். அவர் செய்து காட்டியதில் பத்து சதவீதம் தான், நான் படத்தில் செய்தேன். தியேட்டரில் மேற்கூறிய இந்த காட்சியையும் ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர்.
அதே படத்தில், மகனை இழந்த சோகத்தில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புலம்பும் காட்சியில், தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி. இக்காட்சியை பார்த்த நடிகர் கமலஹாசன், 'இந்த காட்சியில் நான் சிவாஜியை பார்க்கவில்லை. திண்ணையில் அமர்ந்து, தன் சொந்த மகனை இழந்து புலம்பும் ஒரு ஐயங்காரை தான் பார்த்தேன்...' என்று பாராட்டி கூறினார். இப்படி ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்கும் கேரக்ட்ராகவே வாழ்ந்து காட்டியவர் சிவாஜி.
சிவாஜி, அமெரிக்கா சென்று திரும்பிய போது, அவருக்கு மிகப்பெரிய விழா எடுத்து, பாராட்டினார் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு சென்னையில் சிலை எடுத்து, தன் அன்பை தெரிவித்தார் கருணாநிதி. பிரான்ஸ் நாடு செவாலியே என்ற மிகப்பெரிய விருதை சிவாஜிக்கு அளித்து, கவுரவித்தபோது, சென்னையில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுத்ததோடு, அவர் வசிக்கும் தி.நகர் போக் ரோடிற்கு, செவாலியர் சிவாஜி கணேசன் ரோடு என்று பெயர் வைத்து, அவரை கவரவித்ததுடன், தமிழக அரசின் சார்பில், சிறந்த நடிகருக்கான விருதை, 'சிவாஜி விருது' என்று தரவும் ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. மூன்று முதல்வர்களுமே சிவாஜி மீது மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர்கள்.
— தொடரும்.
எஸ்.ரஜத்
