தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

மனைவியை ஏலம் விட்ட, 'மா மனிதர்!'

நண்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவருடன், 'பாருக்கு' சென்றிருந்தேன். எனக்கு, மது அருந்தும் பழக்கமில்லாததால், 'சைடிஷ்' சாப்பிட்டுக் கொண்டு, சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து டேபிளில், மூன்று வாலிபர்கள் வந்து அமர்ந்தனர். சரக்கு உள்ளே போகப்போக, பேச்சு விபரீதமாக போனது. பார்ட்டி கொடுத்தவன், புதிதாய் திருமணமானவன் போல, 'எப்படிடா மச்சி... என் வொய்ப் செலக் ஷன்?' என்று தன் நண்பரிடம் ஆர்வமாய் கேட்க, 'சூப்பர் பிகர் மச்சி. எனக்கே தொடணும் போல ஆசையா இருக்குடா... நம்ம நட்பு உண்மைன்னா நீ அவளை, ஒரு நாள் என் கூட அனுப்பணும்...' என்றானே பார்க்கலாம்.

இதைக் கேட்டதும், அவன் கோபமாகி, கட்டிப் புரளுவான் என எதிர்பார்த்தேன். ஆனால், அவன் நமட்டு சிரிப்புடன், 'எவ்வளவோ செய்திட்டோம்... இதை செய்ய மாட்டோமா மச்சான்...' என்றான் கூலாக.

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அந்த நண்பர்கள் இருவரும், அவனின் முதலிரவு அனுபவத்தை கேட்டு தூண்டிவிட, அவனும், அவளைத் தொட்டது, தடவியது அதற்கு, அவளின் ரியாக் ஷன் என, எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தான். பாவம் அந்த பெண்... இங்கே, அவளின் மானம் போவது தெரியாமல், அங்கே, அவனுக்காய் காத்திருப்பாள். நட்பு புனிதமானது என்கின்றனரே... இதுவா புனிதம்? நட்பில் நல்லதும் இருக்கும், கேடும் இருக்கும். நாம்தான், 'கூடா நட்பை' அறிந்து விலக வேண்டும்.

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

மனிதநேயம்!

நான், குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, பார்வையற்ற ஒருவர், ஒரு பேனா, ஐந்து ரூபாய் என்று கூவிக் கூவி வியாபாரம் செய்தார். பயணிகள் தின்பண்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பேனா வியாபாரத்திற்கு கொடுக்கவில்லை.

அப்போது, எங்கள் பக்கத்தில், கால் சிறிது ஊனமான மூதாட்டி ஒருவர், 100 ரூபாய்க்கு, இருபது பேனாக்களை வாங்கினார். அந்த பார்வையிழந்த வியாபாரிக்கோ மிகுந்த சந்தோஷம். அடுத்த ஸ்டேஷனில், ரயில் நின்றவுடன், அவர் பேனா விற்க அடுத்த பெட்டிக்கு இறங்கி சென்று விட்டார். அதன் பின், அந்த மூதாட்டி செய்த செயல், அனைவரையும் வியக்க வைத்தது.

எங்கள் பெட்டியில் இருந்த குழந்தைகள் அனைவருக்கும், 'பாட்டியின் பரிசு' என்று கூறி, ஆளுக்கொரு பேனா கொடுத்தார். இதை பார்த்து கொண்டிருந்த நான், அவரிடம் அது பற்றி கேட்க, 'கை, கால் நன்றாக இருப்பவர்களே, உழைக்காமல் பணம் சம்பாதிக்க பிச்சை, திருட்டு என்று தீய வழிகளை பின்பற்றும் போது, இயலாமையால் முடங்கி விடாமல், தங்களால் இயன்ற வேலையை செய்ய நினைக்கும் இவர்களை, உற்சாகப்படுத்த வேண்டும்.

'நூறு ரூபாயை இழப்பதால், நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. ஆனால், அந்த வியாபாரியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கு, எதுவும் ஈடாக முடியாது. அதே சமயம், அவர் மேல் நான் பரிதாபப்பட்டு வாங்கினேன் என்பது தெரிந்தால், அவரது சந்தோஷம் கெட்டு விடும். எனக்கும், அது போல் குணம் தான். யாராவது பரிதாபப்பட்டால், எனக்கு பிடிக்காது. அதனால் தான், அவர் இங்கிருந்து போன பின், பேனாக்களை குழந்தைகளுக்கு கொடுத்தேன்...' என்றார். அந்த மூதாட்டி மீது, எனக்கு அளவிட முடியாத மரியாதை ஏற்பட்டது.

இப்போதெல்லாம், நானும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் விற்றுக் கொண்டிருந்தால், என்னால் முடிந்ததை வாங்குகிறேன்.

டி.கே.சுகுமாறன், கோவை.

ஆசிரியர்களுக்கு கவுரவம்!

சமீபத்தில், என் பெண் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. கூடவே, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற காரணமாயிருந்த ஆசிரியர்களையும் கவுரவித்து, அவர்களுக்கு கேடயங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இங்கு, இருபத்தி ஐந்து ஆண்டுகள், பணியாற்றிய ஒரு ஆயாவுக்கும், பரிசு வழங்கியது தான் நிகழ்ச்சியின், 'ஹைலைட்!' கை தட்டல் அடங்கவே வெகு நேரமானது. இதே போல, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்களை கவுரவித்தால், மாணவியரின் மதிப்பெண்கள் இன்னமும், அதிகரிக்கும். பள்ளி நிர்வாகத்தினர் சிந்திப்பரா!

எஸ்.சுபா, சென்னை.

சுடிதாரில் பொண்ணு!

பெண் பார்க்க சென்று இருந்தோம். பெண்ணைப் பார்த்து, வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்து, பொண்ணை எங்களுக்கு பிடித்ததாக சொன்னோம். ஆனால், எங்களுக்குள் ஒரு விஷயம் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.

சாதாரணமாக பெண் பார்க்கும் இடங்களில், பெண், புடவை கட்டிக் கொண்டு வருவது தான் வழக்கம். ஆனால், இங்கு பெண் சுடிதாரிலேயே வந்து நின்றாள். அது பற்றி, பெண் வீட்டாரிடம் கேட்டோம். பெண்ணின் தாய் சிரித்துக் கொண்டே விளக்கம் அளித்தார்... 'பொதுவாக இந்த காலத்து இளம் பெண்கள் எப்போதும் சுடிதாரிலேயே இருப்பர். அந்த கோலத்தில், பெண் பார்த்தால், பெண் தொடர்ந்து வரும் காலங்களில் இருக்கப் போகும், நிரந்தர அழகை நீங்கள் கணித்துக் கொள்ளலாம். அதனால் தான், எங்கள் பெண்ணை சுடிதாரில் காட்டினோம்...' என்றார். அவர் சொன்னது, முற்றிலும் சரி என்று எங்களுக்கு பட்டது.

கு. அருணாச்சலம், தென்காசி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us