PUBLISHED ON : மார் 14, 2014

எஸ்.செல்வக்குமார், திண்டுக்கல்: பாஷை தெரியாத அடுத்த மாநில கன்னியைக் காதலிப்பது குற்றமா?
'ஒட்டுத் தாவரங்கள் அளிக்கும் பலன் பிரமாதம்' என, விவசாயிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைக் கேட்டதில்லையா?
என்.ஆரோக்கியமேரி, பொள்ளாச்சி: போலீஸ் வேலையில் சேர, கிராமப் பெண்கள் கூட்டம், எக்கச்சக்கமாமே... நகரப் பெண்கள் ஆர்வம் காட்டாதது எதனால்?
கிராமப் பெண்களிடம் உள்ள, 'முன்னேற வேண்டும்' என்ற வேகமும், ஆர்வமும் நகரப் பெண்களிடம் கிடையாது. அவர்களுக்கு, பிரச்னையே இல்லாத, 9:00 - 5:00 மணி வேலை - அதுவும், பேன் காற்றுடன் கிடைத்தால், போதும். திருப்தி அடைந்து விடுகின்றனர். இன்று சினிமாவில் தொடங்கி, ஒவ்வொரு துறையிலும், முன்னேறிய புகழ் பெற்ற, பெற்றுவரும் பெண்களின் லிஸ்ட் ஒன்று போடுங்கள்... கிராமப்புறப் பெண்கள் தான், 'டாப் ஸ்கோரர்' ஆக இருப்பர்!
செ.தமிழ்ச்செல்வி, மணலாறு: பெண்களை கிண்டல் செய்யும் போது, ஜாடையாக கண்ணடிப்பது, நாக்கால் உதட்டை தடவுவது இன்னும் என்னென்னவோ செய்கின்றனர் ஆண்கள். பெண்களும் ஜாடையாக, பதிலடி கொடுக்க, ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்...
பெண்களும், ஆண்களுக்கு சமமாக பதிலடி கொடுக்கத்தானே செய்கின்றனர். உதட்டை சுளிப்பது, தோள் பட்டையில் நாடியை இடித்துக் கொள்வது, காரி உமிழ்வது போன்ற இத்யாதிகள். என்னிடம் கேட்டால், ஆண்களின் இந்த ஜாடைகளை, 'ஸ்போர்டிவ்'ஆக எடுத்துக் கொள்ளப் பழகுங்கள் அல்லது அந்த ஜாடையை கண்டு கொண்டதாகவே, காட்டிக் கொள்ளாதீர்கள். பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி என, பெண்களும் ஆரம்பித்தால், ஆப்போசிட் பார்ட்டிக்கு, குஷி பிறந்து விடும். அப்புறம் வம்புதான்!
டி.எஸ்.மங்கையர்க்கரசி, சென்னை: மனதை விட்டு மறைய மறுக்கும் பெண் யார்? அதாவது, கனவிலும், நினைவிலும் மனதை ஆக்ரமித்துக் கொண்டு, உங்களை துன்புறுத்தும் பெண் யார்? இல்லை என்று புளுகாதீர்கள். காந்தியின் வழியாகிய உண்மையை கடைபிடித்து, இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்.
ஒரு பெண் உண்டு; ஆனால், நீங்கள் சொல்வது போல கனவிலும், நினைவிலும் அவர் துன்புறுத்துவது இல்லை; இன்புறுத்துகிறார். 'அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்' என, பாடிச் சென்றாரே அந்தப் பெண்மணி தான்!
வி.சுகன்யா, கொடைக்கானல்: என் தோழியின் வீட்டிற்கு நான் செல்லும்போது, அவள் கணவரின் பார்வையே சரி இல்லை. என்ன செய்ய?
தோழியிடம் கூறி, அவர் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தி, நிம்மதியை, அமைதியைக் கெடுத்து விடாதீர்கள். தோழியின் கணவர் இல்லாத நேரங்களை, நாசூக்காக தோழியிடம் இருந்து தெரிந்து, அந்த நேரங்களில், தோழியின் வீட்டுக்குச் செல்லுங்கள் அல்லது தோழியை, உங்கள் வீட்டுக்கு வரவழைத்து அளவளாவுங்கள்!
பி.பெரியகருப்பன், நிலக்கோட்டை: கல்யாணம் ஆனவுடன், மனைவியிடம் பல ஆண்கள் அடங்கி விடுகின்றனரே...ஏன்?
'அடங்கி விடுகின்றனர்' என்ற, தவறான பதத்தைப் பயன்படுத்தி, ஆண்களை அடிமையாக்கும் இனம், பெண் என்ற மாயையையும், அவப் பெயரையும் ஏற்படுத்த, ஏன் முயற்சி செய்கிறீர்கள்?
