PUBLISHED ON : மார் 16, 2014

அன்று, மத்திய அரசு அலுவலகம் ஒன்றில், அதிகாரியாகப் பணியாற்றும் நண்பர் ஒருவர் வந்திருந்தார்...
'மணி... ஒரு சீரியஸ் பிரச்னை பற்றி இப்போது உன்னிடம் விளக்குகிறேன். அதற்கு சட்டப்படியான தீர்வு என்ன என்பது, எனக்கு தெரிந்தாலும், நியாயப்படியான தீர்வு எப்படி இருக்க வேண்டும் என, கேள்வி கேட்டு, உன் வாசகர்களுக்கு எழுதுறாயா?' எனக் கேட்டார்.
'கூலியும் தந்து, கரும்பையும் தருகிறேன் என்கிறாரே மனுஷன்... விடலாமா?' என எண்ணியபடியே, 'சொல்லுங்க, சார்...' என்றேன்.
மிக முக்கியமான விஷயம் போல... எழுந்து சென்று, இன்னும் இரண்டு டம்ளர் காபி வாங்கி வந்தார்.
இவரிடம் வினோதமான பழக்கம் ஒன்று உண்டு. எது சாப்பிட்டாலும், இரண்டு, இரண்டாக சாப்பிடுவார். ஓட்டலுக்கு சென்று மசால் தோசை ஆர்டர் பண்ணினால், இரண்டு மசால் தோசை ஆர்டர் பண்ணுவார். பூரி செட் என்றாலும், இரண்டு; பொங்கல் என்றாலும், இரண்டு; தயிர் வடை என்றாலும், இரண்டு; கடைசியில் காபி என்றாலும், அதுவும் இரண்டு...
இதே போன்ற பழக்கம், தினத்தந்தி நாளிதழை நிறுவிய மறைந்த, சி.பா. ஆதித்தனாரிடமும் உண்டு என, ஒரு முறை எழுத்தாளர் சாவி எழுதியதை, எப்போதோ படித்திருக்கிறேன்.
இரண்டாவது கோப்பை காபியுடன் பேச ஆரம்பித்தார் நண்பர்...
அது ஒரு அரசாங்க அலுவலகம்ப்பா... மத்திய, மாநில அலுவலகமா என கேட்காதே... 35 வயது ஆசாமி ஒருவர்; திருமணமாகி,ஒரு குழந்தை உள்ளவர்; பணியாற்றிக் கொண்டிருக்கிறார்...
அதே அலுவலகத்தில், 25, 26 வயதுள்ள இளம்பெண் ஒருவரும் பணியாற்றி உள்ளார். நல்ல அழகிய தோற்றம் கொண்டவர். குடும்பம் சற்று ஏழ்மையானது; ஒண்டு குடுத்தன வாசம்.
நம் கதாநாயகருக்கு, அந்த இளம் பெண் மீது, ஒரு கண் விழுகிறது... அப்பாவியாக அலுவலகம் வந்து சென்று கொண்டிருந்த அப்பெண்ணின் நிர்ச்சலனமான மனதில், ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறார். அப்பெண்ணுக்கும், இவர் மீது காதல் தோன்றுகிறது. இவர் மணமானவர்; குழந்தையுள்ளவர் என்பது தெரிந்தும்!
பின்னர் என்ன! எல்லா காதலர்களும் நடத்துவது போன்ற களியாட்டங்கள், ஊர் சுற்றல், வார கடைசி நாட்களில், வெளியூர்களில் ரூம் போட்டு தங்குதல் போன்றவை நடந்தேறியுள்ளன.
ஒரு கால கட்டத்தில், அதே அலுவலகத்தில் பணியாற்றும் திருமணம் ஆகாத, அப்பெண்ணை விட, உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு, அப்பெண் மீது விருப்பம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.
முறையாக பெண் கேட்டு செல்கிறார்... பெண் எவ்வளவோ மறுத்தும், திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு முன்னும், பின்னும், 'உன்னை மறக்க முடியவில்லை. நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை; எனக்கு எல்லாமே நீ தான்...' என்று, காதல் வசனங்களை அவிழ்த்து விடுகிறார் காதலன்....
திருமணம் முடிந்த மூன்று மாதத்தில், தாலி கட்டிய கணவனை பிரிகிறார் மனைவி. பிரியும் நேரத்தில், காதலன் கொடுத்த கரு, அப்பெண் வயிற்றில்... தனியாக, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அப்பெண்ணை குடி வைக்கிறார் காதலர்.
ஆடவன், பகல் நேரத்தில் மட்டும் வந்து, இரவில் வீடு தங்காததால் அக்கம், பக்கத்தில் சந்தேகம் ஏற்பட்டு, வீட்டை காலி செய்ய சொல்கின்றனர். இதே போல இரண்டு, மூன்று வீடுகள் மாற வேண்டி வருகிறது. இதற்கிடையே, காதலன் கொடுத்த குழந்தைக்கு, வயது ஒன்றை தாண்டுகிறது. அப்பாவை, குழந்தை, 'மாமா... மாமா...' என்று, அழைக்கிறது.
இந்த நேரத்தில் விழித்துக் கொள்கிறாள் அப்பெண்... காதலனிடம், 'உன் மனைவியுடன் பத்து வருடங்களுக்கு மேல் சேர்ந்திருந்து வாழ்ந்து விட்டாய்... என்னை மறக்க முடியவில்லை; நான் தான் உனக்கு எல்லாம் என்று கூறினாய்... உன்னை, 'மாமா' என்று உன் குழந்தையே அழைக்கும் நிலையல்லவா உள்ளது... உன் மனைவியுடன் நீ சேர்ந்து வாழ்ந்தது போதும்... என்னுடன் வந்து குடித்தனம் நடத்து. என்னுடைய வாழ்க்கையில், இனி நான் வாழப் போகும், 20- - 30 வருடங்களும் அனாதையாக, சுற்றத்தார் பேச்சுக்கும், ஏச்சுக்கும் ஆட்பட்டு வாழ முடியாது...' என, பிரஷர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதற்கிடையே அப்பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் விவாகரத்து ஆகி விட்டது. இப்போது, நெருப்பில் விழுந்த புழு போல நெளிந்து கொண்டிருக்கிறார் நம் கதாநாயகர். இந்த கட்டத்தில், கதாநாயகர் என்ன செய்ய வேண்டும்? அவரை நம்பி வந்த பெண் கேட்பது நியாயமா? கதாநாயகனின் மனைவியின் மன ஓட்டம் என்னவாகும்? சட்டப்படியான தீர்வு என்ன என்பது எனக்குத் தெரிந்தாலும், நியாயப்படியான தீர்வு என்ன என, உன் வாசகர்களிடம் கேள்; அவர்கள் பதில் சொல்லட்டும்...' என, முடித்தார்.
- வாசகர்களே... எடுங்கள் காகிதத்தையும், பேனாவையும்... எழுதுங்கள் உங்கள் தீர்ப்பை!
அவருக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் சொந்த ஊர். இப்போது, அவர் வசிப்பது லண்டனில். ஏன்... அவர் பிறந்ததே லண்டனில் தான். அவரது குடும்பம், '60களின் நடுவில் லண்டனில், 'செட்டில்' ஆக, அங்கே இவர் பிறந்ததால், பிரிட்டிஷ் சிட்டிசனாகி விட்டார். அங்கே சிறு தொழில் அதிபராக இருக்கிறார்.
தன் கிராமத்தை, உறவினர்களைப் பார்க்க, சமீபத்தில், தமிழகம் வந்திருந்தார். ஊர் சுற்றிக் காட்ட என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்தார். அவர் எங்களுடன் வந்து, ஸ்காட்லாண்ட் முழுவதையும் சுற்றிக் காட்டி இருக்கிறாரே... 'சரி' என்று, கிளம்பினோம்.
கிழக்கு கடற்கரை சாலை வழியே, சென்னையில் இருந்து, புதுச்சேரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிற்றுாரில் மாங்காய் விற்றுக் கொண்டிருப்பதை கண்ட, லென்ஸ் மாமா, 'கிரீச்' என, 'பிரேக்' போட்டு, வண்டியை நிறுத்தினார்.
மாங்காயை கீத்து போட்டு, உப்பு, மிளகாய் தூளில் ஒரு புரட்டு புரட்டி சாப்பிடுவது என்றால், லென்ஸ் மாமாவுக்கு குஷி பிறந்து விடும்.
மாங்காய் சரியான புளிப்பு... கல் உப்பில் இன்னொரு அழுத்து அழுத்தி, மாங்காயில், 'எக்ஸ்ட்ரா' உப்பை எடுத்து, பற்கள் கூசக் கூச, 'ஸ்... ஸ்...' என்றபடியே, ருசித்து சாப்பிட்டார்; நாங்களும் தான்!
முழு மாங்காயையும் கீத்து போட்டு சாப்பிட்டாகி விட்டது.... எப்படியும், ௨௦ ரூபாய் கேட்கப் போகிறாள் இந்த கிழவி என்ற நிலையில், 10௦ ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினேன்.
'சில்லரை இல்லையே சாமி...' என்றார் அந்த மூதாட்டி.
லென்ஸ் மாமா தன் பாக்கெட்டை துழாவியபடி, 'எவ்ளோ?' என்றார். 'இரண்டு ரூபாய்...' என, மூதாட்டி சொல்ல, லென்ஸ் மாமாவிடமும் பொடிச் சில்லரை இல்லை. லண்டன் நண்பரிடமும் சில்லரை இல்லை!
'சரிங்கம்மா... ௧௦௦ ரூபாயையும் நீங்களே வச்சிக்கிங்க...' என, தாராளம் காட்டினார் லென்ஸ் மாமா. அவர் காசா என்ன?
உடனே அந்த மூதாட்டி, 'பரவாயில்லப்பா... ஆசையா ஒரு மாங்கா தானே சாப்பிட்டீங்க... பேரப் புள்ளகளுக்கு, இந்த பாட்டி குடுத்த மாதிரி நெனச்சுக்கிறேன். போய்ட்டு வாங்க...' எனக் கூறி, ரூபாயை திரும்பத் தர முயன்றார்.
மூதாட்டியின் அன்பை நினைத்து, கண்கள் பனித்து விட்டது எனக்கு. 'இல்ல பாட்டி, நீங்க வச்சிக்கங்க...' என, மூதாட்டியின் விரல்களை மடக்கி, கொடுத்து விட்டு கிளம்பினோம்.
இதே போல, முன்பு ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்தது. நானும், மாமாவும் இடுக்கி அணைக்கட்டை பார்க்கச் சென்று கொண்டு இருந்தோம்.
வழியில் ஒரு கிராமத்தில், மூதாட்டி ஒருவர் பலாப்பழம் வெட்டிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட லென்ஸ் மாமா, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த இன்னொரு நண்பரிடம், 'வண்டியை ஓரம் கட்டு. கிழவியின் வீட்டு முன்னே நிறுத்தாதே... காரில் வர்றதப் பாத்து, வெல ஏத்திரப் போறா...' என்றார்.
அதே போல் நண்பரும் செய்ய, நடந்து சென்று மூதாட்டியிடம், பலாப்பழம் வாங்கி சாப்பிட்டோம். அருகே எக்கச்சக்கமாக கொட்டிக் கிடந்த பலா கொட்டைகளைக் கண்ட லென்ஸ் மாமா, 'என் ஒய்ப் பலாக் கொட்டை போட்டு, அவியல், சாம்பார் வெச்சு குடுப்பா, 'எக்சலண்டா' இருக்கும். அதை விட, 'பெஸ்ட்' என்ன தெரியுமா? கும்மிட்டி அடுப்புல பலா கொட்டைய சுட்டு எடுத்து குடுப்பா பாரு... தின்னுக்கிட்டே இருக்கலாம்...' என்றார்.
அந்த மூதாட்டி, லென்ஸ் மாமா பேசுவதையே கேட்டுக் கொண்டு இருந்தார். மலையாளத்திற்கும், தமிழுக்கும் பேச்சு வழக்கில் அவ்வளவு வித்தியாசம் இல்லையே... மாமா பேசுவதை அரை குறையாக புரிந்து கொண்டு இருப்பார் போலும்... நூறு பலாக் கொட்டைகளுக்குக் குறையாமல், தேக்கு இலையில் கட்டிக் கொடுத்தார்.
மாமா எங்கள் காதில் கிசுகிசுத்தார்... 'எமகாதகக் கிழவியா இருக்கும் போல... புரிஞ்சிக்கிட்டது பாரு... காசக் கறந்திறப் போகுது...'
பொட்டலத்தை வாங்கிக் கொண்ட லென்ஸ் மாமா, 'எவ்வளவு தரணும்?' எனக் கேட்டார்.
அந்த மூதாட்டியோ, 'நீ காசு தரண்டா... இது சும்மா எடுத்தோ... நீ என்ட செறிய மகனே போல யாணு...' என, ஒரு போடு போட்டாரே பார்க்கணும்.
என் கண்கள் பனித்தன; லென்ஸ் மாமா தன் முகத்தை மறைத்துக் கொள்ள இடம் தேடினார்.
