தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் சுவாசிக்கும் சிவாஜி! (24) - ஓய்.ஜி. மகேந்திரன்

நான் சுவாசிக்கும் சிவாஜி! (24) - ஓய்.ஜி. மகேந்திரன்

நான் சுவாசிக்கும் சிவாஜி! (24) - ஓய்.ஜி. மகேந்திரன்


PUBLISHED ON : மார் 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தயாரிப்பாளரும், இயக்குனருமான, ஏ.பி.நாகராஜன் மற்றும் சிவாஜி கூட்டணியில், பல படங்கள் வெளியாகி, சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை சொல்லலாம். நாத்திகம், பெரிய அளவில் மக்களை திசை திருப்ப முயன்ற அக்காலகட்டத்தில், மேற்கூறிய புராண படங்கள், ஆத்திகத்திற்கு உறுதுணையாக நின்றன என்றால் மிகையாகாது.

ஏ.பி.நாகராஜன், சிவாஜி கூட்டணியில் உருவான, நவராத்திரி படத்தைப் பற்றி, இங்கே குறிப்பிட வேண்டும்.

பொதுவாக, நவரசம் என்ற பாவங்களை, பரத நாட்டியத்தில் தான் வெளிப்படுத்துவர். ஆனால், முதன்முதலாக, ஏ.பி.நாகராஜன், புதுமையாக ஒன்பது நிகழ்ச்சிகளை வைத்து, அருமையாக திரைக்கதை அமைத்தார். நடிகை சாவித்திரி மட்டும், படம் முழுதும் வரும், ஒரே பாத்திரம். ஹீரோ சிவாஜி, ஒன்பது வேடத்தில், நடித்திருப்பார்.

இந்த புதுமையை, ஏ.பி.நாகராஜன் உருவாக்கியபோது, 'எப்படி இதை செயல்படுத்துவீர்...' என்று, அவருடைய நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, 'சிவாஜி இருக்க எனக்கு என்ன கவலை...' என்று கூறியுள்ளார் ஏ.பி.நாகராஜன்.

நவராத்திரி மற்றும் முரடன் முத்து ஒரே சமயத்தில், எடுக்கப்பட்ட படங்கள். அப்போது, சிவாஜி, 99 படங்களில் நடித்து, முடித்திருந்தார். முரடன் முத்துவை, பி.ஆர்.பந்துலுவும், நவராத்திரியை, ஏ.பி.நாகராஜனும் இயக்கியிருந்தனர். இரண்டு இயக்குனர்களுமே புகழ்பெற்ற பெரிய இயக்குனர்கள். இந்த இரண்டு படங்களில் எதை, சிவாஜியின் நூறாவது படமாக அறிவிப்பது என, சிவாஜியும், அவரது சகோதரர்களும், தங்களுக்கு நெருக்கமான நண்பர் குழுவிற்கு, இரண்டு படங்களையும் திரையிட்டுக் காண்பித்து, கருத்து கேட்டனர்.

முரடன் முத்து சிறப்பாக உள்ளதாக நண்பர்கள் குழு கூற, ஏ.பி.என்.,னிடம் நவராத்திரி பட ரிலீசை சற்று தள்ளிப்போட கோரிக்கை வைக்கப்பட்டது. 'வர்த்தக காரணங்களுக்காக அதை ஏற்க முடியாது...' என்று சொல்லி விட்டார் ஏ.பி.நாகராஜன். நவராத்திரி மிட்லண்ட் தியேட்டரிலும், முரடன் முத்து ஸ்டார் தியேட்டரிலும் ரிலீசாகின. மிட்லண்ட் தியேட்டரில், முதல் காட்சியிலேயே, நவராத்திரி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. சிவாஜியின் நூறாவது படமாக, நவராத்திரி அறிவிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவிலும் சரி, சிவாஜியின் திரைப்பட வாழ்க்கையிலும் சரி, முக்கிய திருப்பு முனையாக, அமைந்த படம் நவராத்திரி. அதுவரை, அதிகமாக குடும்ப கதைகள் மற்றும் சரித்திர கதைகளில் நடித்திருந்த சிவாஜி, இப்படத்தில், முற்றிலும் புதுமையான, ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார்.

நவராத்திரி பட கேரக்டர் குறித்து, சிவாஜி என்னிடம் பகிர்ந்து கொண்ட போது, 'ஒன்பது பாத்திரங்களில், இரண்டில் மட்டும் கொஞ்சம் செயற்கைத் தனம், மெலோடிராமா அதிகமாக இருக்கும். ஒன்பது ரோல்களையும், எந்த மிகைப்படுத்தலும் இன்றி, அடக்கி வாசித்தால், படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு போரடிக்கும். இரண்டு கேரக்டர்களை, மிகைப்படுத்தி செய்யும்போது தான், அவர்களால் ரசித்துப் பார்க்க முடியும்...' என்று கூறினார்.

'பாட்டும் நானே, பாவமும் நானே...' என்ற பெயரில், ஏ.பி.நாகராஜனை பாராட்டும் வகையில், ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். ஏ.பி.நாகராஜனின் மகன் பரமசிவம், அதில் பங்கு கொண்டு, மறைந்த தன் தந்தைக்கான பரிசை, பெற்றுக் கொண்ட போது, அவர் கூறியது: நவராத்திரி படத்தில், இரண்டாவதாக சிவாஜி, குடிகார முரடனாக வருவார். மிகவும் பாப்புலரான, 'இரவினில் ஆட்டம்...' என்ற பாடல் காட்சியில், பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும், கண்களில் மிரட்சியும், பயமும் தெரியும். அவர் மீது கோபப்பட்டு, சாவித்திரி அவரை அடித்து விடுவார். அந்த காட்சியில், சாவித்திரி, அடித்த அடியில், சிவாஜியின் வாயிலிருந்து, ஒரு பல் கீழே விழுந்து விட்டது, என்றார் ஏ.பி.என்., மகன் பரமசிவம்.

அடுத்து, குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதாபாத்திரம் குஷ்டரோகி பாத்திரம். குஷ்டரோகி கேரக்டர் என்றாலே, நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படம் தான். எம்.ஆர்.ராதா வின் நடிப்புக்கு, சிவாஜி பெரிய விசிறி. ஏற்கனவே, ராதா, குஷ்டரோகியாக சிறப்பாக நடித்திருப்பதால், வித்தியாசப்படுத்தி நடிக்க முடிவு செய்தார் சிவாஜி.

இப்படத்தில், சிவாஜி, குஷ்டரோகியாக, மேக்-அப் போட்டதும், இரண்டு நாட்கள் தொடர்ந்து, மேக்-அப் கலைக்காமலேயே, அந்தப் பாத்திரத்தை, நடித்துக் கொடுத்தார்.

குஷ்டரோகியாக காலை விந்தி விந்தி நடப்பார். காலில் உணர்வு இல்லாததால், விந்தி நடந்தாரா அல்லது இதற்காக டாக்டரிடம் ஆலோசனை பெற்றாரா என்ற சந்தேகத்தை பின், ஒரு சமயம், சிவாஜியிடம் கேட்டேன். 'அடப்போடா பைத்தியக்காரா... எந்த டாக்டரையும், 'கன்சல்ட்' செய்யவில்லை. முந்தின நாள் முரடன் முத்து பட ஷூட்டிங்கில், சண்டைக் காட்சி எடுத்தாங்க. காலிலே அடிபட்டு சுளுக்கு ஏற்பட்டுருச்சு. ஏ.பி.என்., படம் என்பதால், ஷூட்டிங்கை கான்சல் செய்ய விரும்பவில்லை. காலில் சுளுக்கு வலியை பொருட்படுத்தாமல், விந்தி விந்தி நடித்தேன். .ஏ.பி.என்., அண்ணனும் ஓ.கே., செய்தார்...' என்று கூறினார் சிவாஜி.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல, இறுதியாக சாவித்திரிக்கும், சிவாஜிக்கும் நடக்கும் திருமண காட்சியில், அடுத்தடுத்த நாற்காலிகளில் சிவாஜி ஏற்று நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அமர்ந்திருப்பர். கிராபிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னிக்குகள் எதுவும் இல்லாத ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த புதுமையை செய்திருப்பார் ஏ.பி.என்., வெறும் முக பாவங்களில், ஒன்பது வித்தியாசமான சிவாஜியை பார்க்கலாம்.

நவராத்திரி படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த காட்சியை பார்க்கும் போது, எட்டு மாறுபட்ட நடிகர்கள் நடித்திருப்பதாகத் தான் தோன்றும். முப்பது வினாடிகளுக்கு பின், அந்த எட்டு பேரும், சிவாஜி தான், என்ற உண்மை, நம் மூளையில் பதிவாகும்.

இந்த வியப்பு எனக்கு மட்டும் தான் என்று நினைத்தேன். நவராத்திரி படம் ரிலீசாகி, ௩௦ ஆண்டுகள் கழித்து, பிரான்ஸ் நாட்டில் சினிமா நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு, 'ஒேர நடிகரா ஒன்பது பாத்திரங்களில் நடித்திருக்கிறார்...' என்று வியந்தனராம். அந்த வியப்பின் விளைவு தான், சிவாஜிக்கு வழங்கப்பட்ட செவாலியே விருது. திரைப்படத்துறையில் செவாலியே விருது பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி என்பது, நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம்.

'உங்களுடன் நடித்த கதாநாயகிகளைப் பற்றி விமர்சனம் சொல்லுங்களேன்...' என்று, ஒரு முறை சிவாஜியிடம் கேட்டேன். ஒவ்வொருவரைப் பற்றியும், ரத்தின சுருக்கமாக அவர் சொன்னது, 'பானுமதி - திறமைசாலி, கே.ஆர்.விஜயா - ஹோம்லி, தேவிகா - நல்ல அழகான கண்கள் கொண்டவர், பத்மினி- ரொமாண்டிக்கான பார்வையுடன் லவ்லி, சாவித்திரி- அவளோடு நடிக்கும்போது, ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். இல்லைன்னா, நடிப்பில் நம்மளையே சாப்பிட்டு விடுவா...' என்றார்.

அடுத்த இதழில் முடியும் —

- எஸ்.ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us