PUBLISHED ON : மே 25, 2014

என்.கனகலிங்கம், கோவை: நகரத்துப் பெண்கள், முப்பத்தைந்து வயதைத் தாண்டுகிற போதே கை, கால் மூட்டுவலி, முதுகுவலி, குறுக்கு வலி என, முனங்குகின்றனரே...
பாட்டிகள், அம்மாக்கள், அண்ணிகள் எல்லாம் உரலில் இடித்தனர், அம்மியில் அரைத்தனர், முறத்தால் புடைத்தனர், மத்தால் கடைந்தனர்... கை, கால் மூட்டுகளுக்கு வேலை கொடுத்தனர்; ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போ ஜாலி, ஈசி கோயிங் லைப்... முனங்கத்தான் வேண்டியிருக்கும்!
எஸ்.சந்திரசேகர், குளித்தலை: குழந்தைகளின் முன், சண்டை போடும் பெற்றோர் பற்றி...
மன நோயாளிகள்! இவர்களது இந்தக் குடுமிப்பிடி, குழந்தைகளின் மனநிலையை எந்த அளவு பாதிக்கும், அதனால், அவர்களது படிப்பு, எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து எண்ணிப் பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட பெற்றோர் சுயநலமிகள்!
கே.வி.தர்மக்கண்ணு, பொட்டல்பட்டி: சாதனையாளர்களைப் பற்றி பத்திரிகைகளில் படிக்கும் போது ஏற்படும் பொறாமை ஒரு புறம்... குடும்பத்தின் வறுமையை எண்ணி, நம்மால் முடியவில்லையே எனும் இயலாமை மறுபுறம் என, மனதை வாட்டுகிறதே...
சாதனை புரிந்தவர்களின் பின்னணியைப் பாருங்கள்... பெரும்பாலும், வறிய பின்னணியை கொண்டவர்களாகவே இருப்பர். வறுமை தான் முன்னேற்ற ஆசையை, சாதனை புரிய வைக்கும் உந்துதலைக் கொடுக்கும் தூண்டுகோல். இயலாமையை எண்ணி சோர்வடையாமல், முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்!
பி.நாகூர்ஹனிபா, பரமகுடி: படித்தவர்களை விட, படிக்காதவர்கள், பொருளாதாரத்தில் உயர்ந்து உள்ளனரே...
படித்தவர்கள் எல்லாம், 'ஒயிட் காலர் ஜாப்' வேண்டுமென்றல்லவா அலைகின்றனர். அதில் என்னத்த பெரிசா பார்த்துட முடியும். வியாபாரம், கமிஷன் மண்டி... இப்படிப் போனால் தான், துட்டு பார்க்க முடியும்!
ஜெ.எம்.பங்கஜம், தாராபுரம்: தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகுவதைத் தடுக்க முடியுமா?
இந்தியாவிலேயே கேரளத்துக்கு அடுத்து தமிழ்நாட்டில் தான், அதிக முதியோர் இல்லங்கள் இருக்கின்றனவாம். நம் சமுதாய அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள், வெகு விரைவாக குறைந்து வருகிறது. இதனால், முதியோர் இல்லங்கள் பெருகத்தான் செய்யும்!
மு.வேணுகோபாலன், பொள்ளாச்சி: நிதி நிறுவனங்களின் மோசடி, தொடர்கதையாக இருக்கிறதே...
'குறுகிய காலத்தில் நிறைய சம்பாதித்து விட வேண்டும்' என்ற, நம் மக்களின் பேராசை தொடரும் வரை, நிதி நிறுவனங்களின் மோசடி தொடரத்தான் செய்யும். ஐந்து, ஆறு சதவீதம் வட்டி குறைவாகக் கிடைத்தாலும், அஞ்சலகம் துவங்கி, தேசிய வங்கிகள் வரை, பற்பல, மாதாந்திர வட்டி தரும் வைப்புநிதி திட்டங்கள் உள்ளன; இவற்றைப் புறக்கணித்தவர்கள் இன்று, தெருவில் நிற்கின்றனர்!
பொ.குமரன், குமுளி: ஒரு பெண், மற்றொரு பெண்ணை, 'அழகு' என்று ஒத்துக் கொள்வதில்லையே ஏன்?
இன்று வரை எனக்கும் புரியாத புதிர் தான் இது. விவரம் தெரிந்த பெண் வாசகிகள், ஏன் என்று எனக்கு எழுதலாமே!
எம்.பிரசன்னகுமார், தல்லாகுளம்: செய்தித்தாள் படிக்கும் பழக்கம், நம் மக்களிடையே வளர்ந்து வருகிறதா?
வளர்ந்து வருகிறது என்றாலும், வேகமான முன்னேற்றம் இல்லை. ஆயிரம் பேருக்கு, 67 பேர் என்ற கணக்கில் தான், நம் மக்களிடையே செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உள்ளது.
