PUBLISHED ON : மே 25, 2014

பல்கலைக்கழகம் ஒன்றில், 'போட்டோகிராபிக் அசோசியேஷன்' ஒன்று இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள இது போன்ற அசோசியேஷன்களில், போட்டோகிராபிக் அசோசியேஷனில் மட்டும் தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாம்!
சமீபத்தில், லென்ஸ் மாமாவை சந்தித்த அப்பல்கலைக்கழக புகைப்பட துறை சங்க தலைவர், உறுப்பினர்களிடையே, 'போட்டோ ஜர்னலிசம்' - பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலை பற்றி, ஒரு உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார்.
லென்ஸ் மாமாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை; உல்லாசமாக, 'விசில்' அடித்தபடியே வந்தவர், விஷயத்தை என்னிடம் கூறினார்.
குறிப்பிட்ட தேதியில், அப்பல்கலைக்கழகம் உள்ள ஊரை அடைந்தோம்.
பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து இருந்தனர்.
விருந்தினர் விடுதி அறைக்குள் நுழைந்ததுமே, 'டும்... டும்... டும்... டும்' என, கல்யாண மேளச் சத்தம் கேட்டது. 'ஓகோ... பல்கலைக்கழக வளாகத்தில் கல்யாண மண்டபம் கூட இருக்கிறது போலும்...' என, நான் நினைக்க, அதை வாய்விட்டே கேட்டு விட்டார் ஒரு நண்பர்.
'மூளை, கீளை இருக்கா உங்களுக்கு? பல்கலைக்கழகத்தில் எப்படி ஐயா, கல்யாண மண்டபம் இருக்க முடியும்... லாஜிக்கலா யோசிக்கப் பழகுங்கய்யா. மேள சப்தம், 'மியூசிக் டிபார்ட்மென்டு'ல இருந்து வந்திருக்கும்; ஜன்னல் வழியா வெளியே பாருங்க... மியூசிக் டிபார்ட்மென்ட் இருக்கான்னு...' என்று, ஏதோ ஒன்றும் தெரியாதவர்களுக்கு கூறுவது போல, லென்ஸ் மாமா சொல்லவும், எனக்கு விஷயம் புரிந்தது.
விடுதிக்குள் வருமுன்னே, விடுதி அருகே இருக்கும், மியூசிக் டிபார்ட்மென்டை மாமா பார்த்து இருக்கிறார்; ஏதோ வாய் தவறி கேட்டதை, நக்கல் செய்கிறார் என்பது விளங்கியதும், மாமாவை ஒரு கலக்கு கலக்க முடிவு செய்தேன்.
'மாமா... லெச்சர் குடுக்கப் போறது உங்க நண்பர்களிடையே இல்லே; ஸ்டூடண்ட்ஸ் கிட்ட... அதுவும், பல்கலைக்கழக மாணவர்களிடம். அதுவுமில்லாம லெக்சர் கொடுக்கப் போறது தமிழில் இல்லே இங்கிலீஷில்...' என, ஒரு போடு போட்டேன்.
அப்போதுதான் லென்ஸ் மாமாவுக்கு, லெக்சரின் சீரியஸ்னஸ் தெரிந்தது; வயிறு கலங்கி இருக்க வேண்டும். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், 'சரி... சரி நான், 'ரெப்ரஷ்' செய்துட்டு வர்றேன்...' என, 'டாய்லெட்'டினுள் நுழைந்தார்.
லென்ஸ் மாமாவுக்கு ஆங்கிலம் சரளமாக வரும் என்றாலும், இதுவரை மேடைகளில் ஏறியது இல்லை; இது, முதல் அனுபவம். அதுவும், மாணவர்களிடையே பேசப் போகிறார்.
'லெக்சருக்கு' இன்னும் நேரம் இருந்ததால், பல்கலைக்கழகத்தைச் சுற்றி வரலாம் என நினைத்து, உடை மாற்றி, கிளம்பினோம். லோக்கல் நண்பர் ஒருவரும் உடன் சேர்ந்து கொண்டார். அந்த நண்பருக்கு பல்கலைக்கழகம் நன்கு பரிச்சயம்.
பிரமாண்டமான பல்கலைக்கழகம் அது; ஒவ்வொரு பிரிவாக காரில் சுற்றினோம். விவசாயம் கற்கும் மாணவர்கள், பேன்ட் சர்ட் போட்டு, நெல் அறுவடை செய்த காட்சி, கண்ணை விட்டு இன்னும் அகலவில்லை. மருத்துவக் கல்லூரி வளாகம் மிக நவீன முறையில் கட்டப்பட்டு இருந்தது. வழியில், ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது. சில மாணவியர், 'வாலிபால்' விளையாடிக் கொண்டு இருந்தனர். மாமாவின் பார்வை அங்கு நிலைப்பதை கண்ட, லோக்கல் நண்பர், 'அவர்கள் எல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவியர்...' என்றார்.
'அந்த கருப்பு ஸ்கர்ட், ரோஸ் பனியன்...' என, லென்ஸ் மாமா இழுக்கவும், 'மலேசிய நாட்டுப் பெண்; இங்கு மருத்துவம் படிக்கிறார். பல்கலையில் மிக நவீன, நாகரிக உடை அணிவது அவர் மட்டும் தான்...' என்றார்.
லென்ஸ்சின் கவனம் சிதறுவதைக் கண்ட நான், மீண்டும், லெக்சர் பற்றி நினைவுபடுத்தினேன். சென்னை பல்கலைக் கழகத்தில், 'ஜர்னலிசம்' மாணவர்களிடையே நான் முதன் முதலாக பேசும் போது, பேன்ட், சர்ட்டுக்குள்ளும், ஷூவுக்குள்ளும் வியர்வை ஆறாக ஓடியதையும், மேல் அண்ணத்தில், நாக்கு ஒட்டிக் கொண்டதையும் கூறி, லென்ஸ் மாமாவிடம் ,'சிரீயஸ்னசை' ஏற்படுத்தினேன்.
'மணி... வி.சி., மற்றும் மேடையில் இருப்பவர்களை எப்படி, 'அட்ரஸ்' செய்ய வேண்டும்...' எனக் கேட்டுத் தெரிந்து, 'சீரியசா'னார் லென்ஸ். வழக்கமான சடங்குகளுக்குப் பின், லெக்சர் ஆரம்பமானது. 'லவுட் ஸ்பீக்கர்' இருந்தும், மாமாவின் குரல், கிணற்றில் இருந்து வருவது போல கேட்டது.
கேமராவைப் பற்றிய, 'டெக்னிகல் சப்ஜெக்ட்' வரும்போது மட்டும் குரல் உயர்ந்தது. இடையிடையே, 'ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்...' எனவும் கூறினார். இரண்டொருவர் மேடையில் லென்ஸ் அருகே சென்று, காதில் ஏதோ கேட்டதோடு சரி.
பத்திரிகைத் துறையில் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு ஏற்படும், ஏற்பட்ட அனுபவம் குறித்து கேட்க வந்த மாணவர்களுக்கு, இது சற்று ஏமாற்றம் அளித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
லெக்சர் முடிந்து இரவில் விருந்தினர் விடுதிக்கு, போட்டோகிராபிக் அசோசியேஷன் பொறுப்பாளர்களான சில மாணவர்கள் வந்து இருந்தனர். அவர்களிடம், 'இந்த 'லெக்சர்' தமிழில் இருந்திருந்தால் இன்னும், 'இன்ட்ரஸ்டிங்'காக இருந்திருக்குமா...' எனக் கேட்டேன். 'ஆம்' என, ஒப்புக் கொண்டனர்.
'உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள் என, மாமா பலமுறை கேட்டும் ஏன் சரியான, 'ரெஸ்பான்ஸ்' மாணவர்களிடமிருந்து இல்லை... சந்தேகம் எதுவுமே இல்லையா அல்லது லெக்சரைக் கேட்க வந்துள்ள பெண்கள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசி, அது தவறாக இருந்து அந்தப் பெண்கள், சிரித்து விடக் கூடாதே என்ற சங்கோஜ பயமா?' எனக் கேட்டேன்.
'பாயின்ட் பிளாங்க்' ஆக, நெற்றிப் பொட்டில் அடித்தது போலக் கேட்கவும். 'உண்மை தான் சார். பெண்கள் அருகில் இருக்கும் போது ஆங்கிலத்தில் பேசி, அது தவறாக இருந்து... அப்பப்பா... இதுவே தமிழ் லெக்சராக இருந்து, தமிழிலும் கேள்வி கேட்கலாம் என்று இருந்திருந்தால், எவ்வளவு சுலபமாக, 'டென்ஷன்' இல்லாமல் இருந்திருக்கும்...' என, ஒப்புக் கொண்டனர்.
தமிழன், தமிழனிடையே பேசும் போது, ஒரு சகஜத்தை ஏற்படுத்த விடாமல் தடுக்கும் ஆங்கிலத்தை நொந்து கொண்டேன்!
